திருமண சட்டங்களில் ‘கணவன்’, ‘மனைவி’ என்ற வார்த்தைகளைத் ‘தம்பதி’ (spouse) என மாற்றுவது, அனைத்து தம்பதிகளுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பாலினம் மற்றும் பாலின அடையாளம் பற்றிய பாரம்பரியப் புரிதல்:

அறிவியல் வளர்ச்சி பெறாத பண்டைய காலங்களில் பல சமூகங்களில் பாலினத்தை இரண்டாகப் (binary) வகைப்படுத்துவது வழக்கமாக இருந்தது. பெரும்பாலான கலாச்சாரங்கள், மனிதர்களை மட்டும் ‘ஆண்’ அல்லது ‘பெண்’ என்ற அடிப்படையில் பிரித்து, ஒவ்வொரு பாலினத்துக்கும் குறிப்பிட்ட பங்கை ஒதுக்கின. இந்த அறிவியல் வளர்ச்சி பெறாத பார்வை

அன்று முதல் இன்று வரை பலரின் உண்மையான பாலின அடையாளங்களை மறுத்து அவர்களைப் பல அநீதிகளுக்கும் இன்னல்களுக்கும் உட்படுத்தி வருகிறது. இந்நிகழ்வானது திருமணச் சட்டங்களில் ஆழமாக பதிந்துள்ளது.

அறிவியல் மற்றும் சமூக ஆய்வுகள் இப்போது பாலினம் மற்றும் பாலுறவு பற்றிய புரிதலை விரிவாக்கியுள்ளன. பாலினம் (gender) ஒரு தொடர்ச்சியான வடிவம் (spectrum) எனவும், பாலீர்ப்பு (sexual orientations) என்பது பலதரப்படுத்தப்பட்டவையாக இருப்பதையும் அறிய முடிகிறது. இவை, மனிதர்களின் அடையாளம் மற்றும் உறவுகளைப் பல்வேறு வடிவங்களில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையை வலியுறுத்துகின்றன. இதை சமீபத்திய சட்ட திருத்தங்கள் பிரதிபலிக்க வேண்டியது அவசியமாகும்.

LGBTQIA+ சமூகத்துக்கான சமூக மற்றும் சட்டப் பாகுபாடுகள்:

LGBTQIA+ சமுதாயத்தினருக்கு விவாகப்பத்திரம், குடும்பப் பயன்பாடு மற்றும் சொத்துரிமை போன்ற அம்சங்களில் பரவலான பாகுபாடு நிலவுகிறது. இந்தியச் சட்டங்கள், குறிப்பாக திருமணச் சட்டங்கள், உறவுகளைப் பாலினம் மற்றும் பாலுறவின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றன. இதனால், ஒரே பாலின உறவுகளுக்கு, மற்ற தம்பதிகள் பெறும் நிதிப் பாதுகாப்பு, சொத்துரிமை மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

திருநிலை அடையாளம் கொண்டவர்கள் (transgender individuals) இதனால் பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களின் உறவுகள் மட்டுமல்ல, அவர்களின் அடையாளங்கள் கூட சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில் பல தடைகள் உள்ளன. ஒரே பாலினத் தம்பதிகளுக்கு திருமணம் என்பது அரசு அங்கீகாரம் என்பதைத் தாண்டி அடையாளம் மற்றும் உரிமைக்கான சமூக அங்கீகாரமாகும்.

சுப்ரியோ vs. இந்திய ஒன்றியம் - தீர்ப்பின் முக்கியத்துவம்

2023-இல், சுப்ரியோ vs. இந்திய ஒன்றியம் வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த பாகுபாடுகளை எடுத்துக்காட்டியது. நீதிபதிகள், பால் மற்றும் பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். திருமணத்தை அனைவரையும் உள்ளடக்கும் துறையாக மாற்ற வேண்டும் என்பதையும், அனைத்து தம்பதிகளுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

எனினும், நீதிமன்றம், சட்டப் பாகுபாட்டைச் சரிசெய்வது சட்டமன்றத்தின் பொறுப்பாகும் என்று தெரிவித்தது. மேலும், குயர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க, உயர்மட்டக் குழுவை (HPC) அமைக்க உத்தரவிடப்பட்டது.

மொழிமாற்றத்தின் சட்டரீதியான பயன்கள்:

‘கணவன்’, ‘மனைவி’ என்ற சொற்களை ‘தம்பதி’ என மாற்றுவது, பாலின அடிப்படையிலான பங்கு ஒதுக்கீடுகளை நீக்கும். இது விவாகரத்து, சொத்துரிமை மற்றும் அரசு நலன்களை ஒரே பாலினத் தம்பதிகளுக்கும் வழங்குவதற்கான அடித்தளமாக அமையும். மேலும், திருநிலை அடையாளம் கொண்டவர்கள் மற்றும் தங்கள் விருப்பத்திற்கேற்ப இணைப்பில் உள்ளவர்கள் சம உரிமைகளைப் பெற முடியும்.

விதி சென்டர் (Vidhi Centre for Legal Policy) போன்ற அமைப்புகள், இந்த மொழிமாற்றத்தை முன்னெடுத்து, சட்டதிட்டங்களில் பிரச்சினையற்ற, பாலினத்தைத் தாண்டிய உரைகள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளன. இது, உறவின் தன்மை எதுவாக இருந்தாலும், சம உரிமைகள் மற்றும் சட்ட அங்கீகாரம் பெறும் நிலையை ஏற்படுத்தும்.

மாற்றத்தின் சமூக விளைவுகள்:

இத்தகைய மொழிமாற்றம் மற்றும் சட்டரீதியான திருத்தங்கள், LGBTQIA+ சமூகத்தின் சட்டப் பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் வலுப்படுத்தும். இது பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, அல்லது பாலுறவின் அடிப்படையில் நிகழும் பாகுபாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்தும். ஒரே பாலினத் திருமணங்கள் மற்றும் திருநிலை அடையாள உறவுகள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் நீதி பெறுவதற்கான வழியை உருவாக்கும்.

இந்த மாற்றம், திருமணச் சட்டங்களில் புதிய பரிமாணங்களை உருவாக்கி, ஒற்றுமையும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத் தளத்தை உருவாக்கும். பிரிவினையற்ற, ஒருங்கிணைந்த சமுதாயம் நோக்கிய முன்னேற்றத்தை மேற்கொள்ள இது அவசியமான படியாக இருக்கும்.

- அருண் தட்சண்