சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலம் முதல் தீபாவளி எதிர்ப்பு / புறக்கணிப்பு என்பது தமிழ்ச் சமுதாயத்தில் தொடர்ந்து வருகிறது. தீபாவளி அன்று தீபாவளி எதிர்ப்பு ஊர்வலங்கள் கண்டனக் கூட்டங்கள் திராவிட இயக்கத்தவரால் நடத்தப்பட்ட காலங்கள் உண்டு. தீபாவளி இவ்வளவு பெரிய எதிர்ப்புக்குள்ளாவதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. திராவிட இனத்தவரை இழிவுபடுத்த ஏற்படுத்தப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத, ஆபாசப் பண்டிகையே தீபாவளி ஆகும். இக்கருத்தைப் பல்வேறு அறிஞர்கள் ஆய்வுகளில் நிறுவியிருக்கிறார்கள். மேலும் தீபாவளி சமணப் பண்டிகை என்றும் பவுத்தப் பண்டிகை என்றும் சிலர் சொல்வதுண்டு. எப்படி இருந்தாலும் தீபாவளி என்பது தமிழர்கள் விழாவோ தமிழர்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் நிகழ்வோ அல்ல. ஆயினும் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான நியாயங்கள் ஏதோ ஒரு வகையில் நம்முடைய சமூகத்தில் தொடர்ந்து கற்பிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.vidhuthalai on diwaliஇன்றைய பரபரப்பான அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் தீபாவளி என்பது விடுமுறை நாள் கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது என்கின்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. தீபாவளிக்குப் பின்னால் இருக்கும் கதைக்காகவோ புராணங்களுக்காகவோ இன்று மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. பண்டிகைகளையும் சடங்குகளையும் கண்மூடிப் பழக்கமாகச் செய்து வந்த சமுதாயத்தில், இந்து மதத்தின் ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் இருக்கக்கூடிய பார்ப்பனர் சூழ்ச்சியையும், பார்ப்பனரல்லாதார் இழிவையும், மூடநம்பிக்கையையும், ஆபாசத்தையும் மக்களுக்குப் பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதே திராவிட இயக்கம்தான். இந்தப் பணியை இந்தியாவிலேயே திராவிட இயக்கம் மட்டும்தான் செய்தது. நாம் காரணத்தை அறியாமல், முன்னோர்கள் சொன்னார்கள், நம்முடைய சம்பிரதாயம் என்று ஏன் எதற்கு எனக் கேள்வி கேட்காமல் தீபாவளி கொண்டாடுவதையே பார்ப்பனர்கள் மிகவும் விரும்புவார்கள். எனவே இந்த நாளில் நம்மைக் கொண்டாட வைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களுடைய நோக்கமாகும். அதனால்தான் துக்ளக் இது போன்ற அட்டைப் படத்தை வெளியிட்டு ஆணவம் கொள்கிறது. சென்ற ஆண்டு தீபாவளியின் போது துக்ளக் வெளியிட்ட இந்த அட்டைப் படமும் அதற்கு விடுதலையின் விளக்கமுமே இதற்குச் சான்றாகும்.

தீபாவளிக் கதைகள் புராணங்கள் மறைந்து போய் விட்டன என்று சொல்லப்படும் வாதத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. வானொலி நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தீபாவளியன்று காலை நரகாசுரன் கொலை செய்யப்பட்ட கதையைச் சொல்லாமல் வேறு எந்தக் கதை சொல்லப்படுகிறது? இந்தச் செய்திகளையெல்லாம் எடுத்துக் கூறி தீபாவளியை நாம் கொண்டாடலாமா என்று மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டிய கடமை திராவிட இயக்க தோழர்களுக்கு இருக்கிறது.

மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் பிரம்மாண்டமாகக் கொண்டாடப் படுகிறது. அதற்கு விடுமுறை நாள்களும் அதிகம். இக்கொண்டாட்டத்தில் எந்த ஒரு இனத்தின் இழிவோ, மறைமுக சூழ்ச்சியோ இல்லை. மத நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் உண்டு. ஆனாலும் அந்நாட்டு மக்கள் மத நம்பிக்கையின் அல்லது மூடநம்பிக்கையின் அடிப்படையிலான விடுமுறை நாள்களை நாம் எதற்குக் கொண்டாட வேண்டும் என்று சிந்திக்கிறாரகள். புனிதங்கள் இல்லாத விடுமுறை நாள்களை(Holidays without holiness) உருவாக்க அவர்கள் முயல்கிறார்கள். நாம் ஆரிய சூழ்ச்சி இன இழிவு மூடநம்பிக்கை ஆபாசம் என எத்தனையோ காரணங்கள் இருப்பினும் தீபாவளியை விடுமுறை நாளாக எண்ணி கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மேலை நாடுகளிலாவது மதங்களுக்கு அப்பாற்பட்ட விடுமுறை நாள்களை இனிதான் உருவாக்க வேண்டும். ஆனால் நாம் கொண்டாடித் தீர்க்க, இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழர் திருநாளாம் பொங்கல் இருக்கிறது.

தீபாவளி எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய திராவிட இயக்கத் தோழர்களே இன்று பெரும்பாலும் விடுமுறை நாள் கொண்டாட்டத்தில் கரைந்து விடுகிறார்கள். வீட்டில் புலால் உணவு சமைக்கிறார்கள், பலகாரங்கள் செய்கிறார்கள். வீட்டில் கொண்டாடும்போது நாம் எப்படி தவிர்ப்பது என்று சிலர் கேட்கிறார்கள். முதலில் வீட்டில் கொண்டாட்டத்தைத் தடுப்பதற்கு நாம் முயற்சிப்பதேயில்லை. நாம் முயன்றும் நடைபெறாவிட்டால் பரவாயில்லை. ஏனெனில் நாம் ஜனநாயகவாதிகள். ஆனால் நாம் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கலாம். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் விரதம் இருக்கும் போதும் அல்லது ஒரு சில கிழமைகளில் புலால் உணவு சாப்பிடாமல் கடைபிடிக்கும் போதும், நாம் என்னதான் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் வற்புறுத்தினாலும் அவர்கள் தங்கள் விரதத்தைத் தளர்த்திக் கொள்ள மாட்டார்கள். விருந்தே நடைபெற்றாலும்கூட அங்கு வந்து பழச்சாறையோ அல்லது தயிர் சோரையோ சாப்பிடுவார்கள். பக்தியோ மூடநம்பிக்கையோ அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் கொண்டிருக்கும் உறுதியை நம்முடைய பகுத்தறிவாளர்கள் இன இழிவை நீக்க தாங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் கொள்வதில்லை. நாத்திகர்கள் என்பதற்காக நாம் தீபாவளியைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கை மத நம்பிக்கை என்பதற்கு அப்பாற்பட்டு சுயமரியாதையின் பொருட்டு தமிழர்கள் தீபாவளியைப் புறக்கணிக்க வேண்டும்.

- உதயகுமார்