தனக்குத் தேவையான போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆன்மீகக்காரர்களால் உருவாக்கபட்ட சொற்கள் ‘புனிதம் - தீட்டு’.
இவை இரண்டிற்கும் இவர்கள் என்ன அளவுகோல்கள் வைத்திருக்கிறார்கள்? இதுவரை எவரும் சொன்னதில்லை.
அய்யப்பன் புனிதமானவன், நமக்கு கவலை இல்லை. பெண்கள் தீட்டானவர்கள்! அது எப்படி?
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால் அவர்கள் தீட்டானவர்கள், சொல்கிறார்கள். அதனால், அவர்கள் அய்யப்பன் கோயிலுக்குப் போகக்கூடாதாம்!
“மூளை எங்கும் மூடத்தனம்’’ என்பார் தோழர் உதயகுமார். இது இவர்களுக்குப் பொருந்தும்.
மாதவிடாய் என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.ஒரு பெண்ணின் உடல் இயற்கையாகவே தூய்மைப் படுத்தப் படுவது மாதவிடாய். தூய்மையற்றவை வெளியேறுகிறது குருதியாக. அவ்வளவுதான்.
இதில் எங்கே இருக்கிறது தீட்டு? இதைத் தீட்டு என்று சொன்னால், வயிற்றில் மலத்தையும், சிறுநீரையும் சுமந்து கொண்டு திரியும் அனைவரும் தீட்டானவர்கள் இல்லையா?
பெண்ணின் மாதவிடாய் ஒரு உயிரைக் கருவாக உருவாக்குகிறது. எந்த ஒரு ஆணுக்கும் இத்தகைய சக்தி இருக்கிறதா?
அப்படியானால் பெண் எப்படித் தீட்டாவாள்!
இரண்டு ஆண்களுக்குப் பிறந்தவன் அய்யப்பன் என்கிறது ஒரு கதை.
தன் தாய் உடல் நிலை சரியில்லாத போது புலிப்பால் வேண்டி அய்யப்பன் காடு சென்றதாக இன்னொரு கதை சொல்கிறது.
இரண்டாம் கதையில் வரும் தாய் ஒருவேளை வளர்ப்புத் தாயாக இருந்தாலும் கூட அவளும் ஒரு பெண்தான் என்பதை மறுக்க முடியாது.
அந்தத் தாயும் மாதவிடாய்க்கு விதிவிலக்கு இல்லை.
கதையாக இருந்தாலும் கூடப் பெண் பழிக்கப்படக்கூடாது.
இவைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெண்களைத் தீட்டு என்பது மனுவாதம்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் வருவது குற்றமில்லை. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு உண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, வரவேற்கத் தக்கது.
இது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
அப்போது சபரிமலை ‘புனிதமாகும்’ - பெண்களால்.