“வன்புணர்ச்சி” என்பது, கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் ஒரு ஆண், பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதைக் குறிக்கும்.

Rape 1. அவளது விருப்பத்திற்கு விரோதமான உடலுறவு. செக்ஸ் ஊழியரான பெண்ணுடன், அவளது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வதுகூட கற்பழிப்புதான்;

2. கணவனைப் போல் பாசாங்கு செய்து ஒப்புதலைப் பெறுவது;

3. கொன்றுவிடுவதாக மிரட்டி ஒப்புதல் பெறுவது;

4. நாம் எதற்குச் சம்மதிக்கிறோம்? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத 16 வயதிற்குக் குறைந்த பெண்ணிடம் சம்மதம் பெறுவது, அல்லது போதைப் பொருள் செலுத்தப்பட்ட நிலையில் அல்லது குடிவெறியில் சுயநினைவில்லாதபோது சம்மதம் பெறுவது அல்லது மனநோயாளிப் பெண்ணின் சம்மதம் பெறுவது;

5. மனைவி 15 வயதிற்குக் குறைந்த சிறுமியாக இருந்தால், அவளோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் வன்புணர்ச்சிக் குற்றமாகவே கருதப்படுகிறது.

6. நீதிமன்றக் கட்டளை, சம்பிரதாயம், சடங்குகள் காரணமாக கணவனும், மனைவியும் தனித்தனியாக வாழும்போது, கணவன் மனைவியின் சம்மதம் பெறாமல் உடலுறவு வைத்துக் கொள்வது கற்பழிப்புக் குற்றமாகும்.

வன்புணர்ச்சி நடந்ததும் என்ன செய்ய வேண்டும்?

1. தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கற்பழிப்பு நடந்ததை அந்தப் பெண் சொல்ல வேண்டும். அவருடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும். தாமதப்படுத்தினால். அவள் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் அகன்று, “கற்பழிக்கப்பட்டது” என்ற குற்றத்தை அந்தப் பெண் நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும்.

2. கற்பழிக்கப்பட்ட பெண், உடனடியாகக் குளித்துவிடக்கூடாது. துணிகளையும் துவைக்கக் கூடாது. ஏனெனில், கற்பழிக்கப்பட்டது அவள் இருக்கும் நிலை, கற்பழிப்புக் குற்றத்திற்கு முக்கியமான சான்றாகும். அது மட்டுமல்ல; கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடையில் கற்பழித்தவனது ரத்தத் துளிகள் அல்லது ரோமம் இருக்கலாம். அவற்றைக் கொண்டு கற்பழிப்பில் ஈடுபட்டவனைப் பிடித்து விடமுடியும். அவனுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபித்துவிட முடியும்.

3. கற்பழித்தவர் செல்வாக்குள்ள நபராக இருந்தால், கற்பழிப்புச் சம்பவம் பற்றி முதலமைச்சர், மாநிலத் தலைமைப்போலீஸ் அதிகாரி, அப்பகுதி எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்குக் கடிதங்களை அனுப்ப வேண்டும்.

காவல்துறையினரின் கடமைகள்:

1. காவல் நிலையத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி, கற்பழிக்கப்பட்ட பெண் தரும் விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிற்கு அதைப் படித்துக் காட்ட வேண்டும். அதில் ஒரு பிரதியை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தரவேண்டும். காவல்துறை அலுவலர் அந்தப் பெண்ணின் புகாரைப் பதிவு செய்து கொள்ள மறுத்துவிட்டால், அந்தப் பெண் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரையோ அல்லது உள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரையோ அணுக வேண்டும்.

2. காவல்துறையினர், அந்தப் பெண்ணை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உடற் கூறு சோதனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் உடல் நிலை, அவளது மனநிலை ஆகியவை குறித்து மருத்துவர் அறிக்கைத் தருவார். இந்த அறிக்கை, கற்பழிப்பு குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு மிக முக்கியமானதாகும். மருத்துவர்தான் அந்தப் பெண்ணைச் சோதிக்க வெண்டும். காவல்துறையினர் தொடக்கூடாது. அருகாமையில் காவல் நிலையம் இல்லை என்றால், அந்தப் பெண், அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி, உடற்சோதனை செய்து, அந்த அறிக்கையின் பிரதியொன்றை, தன் வசம் வைத்திருக்க வேண்டும்.

3. கற்பழிக்கப்பட்டவர் பெயரையோ அல்லது அதுபற்றிய விவரத்தையோ, காவல் துறையினர் வேறு எவரிடத்திலும் கூறக்கூடாது.

கற்பழிப்பிற்குத் தண்டனை:

கற்பழிப்புக் குற்றத்திற்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சில கற்பழிப்பு வழக்குகளில், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, நீதிமன்றம், ஆயுள் சிறை தண்டனையும் வழங்கும்.

கீழ்கண்ட வகையைச் சார்ந்த கற்பழிப்பு வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது:

1. காவலில் இருக்கும்போது கற்பழிக்கப்பட்டால்;

2. கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணைக் கற்பழித்தவனுக்கு,

3. பனிரெண்டு வயதுக்குக் குறைந்த சிறுமி கற்பழிக்கப்பட்டால்,

4. ஒரு பெண் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை பல ஆண்கள் கூட்டாகச் சேர்ந்து கற்பழித்தால்;

வன்புணர்ச்சி வழக்குகளில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்:

1. நீதிமன்றங்களில் வன்புணர்ச்சி வழக்குகள் ரகசியமாக நடத்தப்படுகின்றன.

2. காவலில் பெண் கற்பழிக்கப்பட்டால், எடுத்துக்காட்டாக சிறைகளில் அல்லது மருத்துவமனையில் கற்பழிப்பு நடந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் கற்பழிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர, தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் நிரூபிக்கத் தேவையில்லை

3. தனது பொறுப்பில் இருக்கும் பெண்ணை, அந்த நபர் கற்பழித்தால், அந்தப் பெண் சம்மதம் கொடுத்திருந்தாலும் கற்பழித்த நபருக்குச் சிறைத் தண்டனை உண்டு.

4. தான் செய்வது என்னவென்று புரிந்து கொண்ட நிலையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபடும் 10 வயதுச் சிறுவனையும் தண்டிக்க முடியும்.

5. கற்பழிப்புக் குற்றம் நடப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உடந்தையாக இருந்த ஆண் அல்லது பெண், குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.

(நன்றி: மகளிர் தொடர்பான சட்டங்கள்)