நம்ம இந்தியச் சமூக மைண்ட்செட் எப்படின்னா பப்ளிக்ல பிஸ் அடிக் கலாம், பொண்டாட்டி கூட சண்டை போடலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், மூஞ்சி முகரை எல்லாம் கிழிக்கலாம், யாரும் வந்து ஏன்னு கூடக் கேட்க மாட்டாங்க. அது அவங்க குடும்பச் சண்டைன்னு கண்டுக்காம போவாங்க. ஆனால் அதே சமயம் பப்ளிக்ல கிஸ் அடிக்கக்கூட வேண்டாம், நெருக்க மாக இணைந்து போனாலே, ஏதோ வேற்றுக்கிரக வாசியப் பார்க்கிற மாதிரியே  பார்ப்பாங்க. பப்ளிக்ல எப்படி வெட்கமேயில்லாம நடந்துக்குதுக பாருன்னு வியாக்கியானம் வேறு பேசுவாங்க. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தான, நீ என்னம்மா சொல்ல வரேன்னு கேட்கிறீங்களா?

இதே மாதிரி  மெண்டாலிட்டி தான் இந்தியத் திருமண முறையில் இருக்குன்னு சொல்ல வரேன். முன்ன, பின்ன அறிமுகமில்லாத இரண்டு நபர்களை நாள், நட்சத்திரம், கோள், ஜாதகம் மற்றும் ஜாதிப் பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணி வைக்கிறதும், உறவினர்கள் எனில் உறவு முறை விடுபடக் கூடாது, சொத்து கைய விட்டுப்போகக் கூடாது, சாகப்போகிற ஒரு கிழவனோ, கிழவியோ பேரன், பேத்தி  கல்யாணத்தைப்  பார்க்க ஆசைப் படுதுன்னு  ஒன்றுக்குமே உதவாத காரணங்களைச் சொல்லி திருமணப் பந்தத்தில் இருவரை நுழைப்பது என்பது காலம் காலமாக நடக்கிறது.

கூடவே குடும்பப் பந்தத்தில் நுழையறதுங்கிறது சின்னக்காரியம் இல்லை. விளையாட்டை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு பொறுப்பா  குடும்பம் நடத்துற வழிய பாருங்கன்னு அறிவுரை களை அள்ளிவிடுவாங்க. சரி இதோட நிறுத்துவாங்க ளான்னு பார்த்தால் அது தான் இல்லை. பெற்றவர் களும் மற்றவர்களும் எது தங்களுடைய எல்லை என்பதையே மறந்து, இருவர் உணர்வும் ஒத்துப் போய் இணைய வேண்டிய தாம்பத்யத்திற்கு  ஒட்டு மொத்தக் குடும்பமும் ஒன்று கூடி நல்ல நேரம், நாள் பார்த்து அனுப்பி  வைப்பாங்க. அடுத்தவர் அந்தரங்க விஷயத்தில் (பெற்ற மகள் அல்லது மகனாக இருப்பினும்) தலையிடக்கூடாது என்கிற புரிதலே இல்லாமல், அரைவேக்காட்டுத்தனமாக காலையில் எல்லாம் நல்லபடியா முடிந்ததான்னு வெட்கமே யில்லாம கேள்வி கேட்பாங்க.

ஜாதிமுறையை விடக் கேவலமானது திருமணமுறை

இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒரு ஆணோ, பெண்ணோ  திருமண பந்தத்தில் இணை யாமல்  சேர்ந்து  வாழ முற்பட்டால் ( எந்த ஜாதியோ, எந்தக் குலமோ இரண்டும் சேர்ந்து கல்யாணம் பண்ணாம  கூத்தடிக்கிதுன்னு உள்ள மைண்ட் வாய்ஸ் ஓடும்கிறது வேற விசயம்).  இருவரும்  உடல் தேவைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப காலத்துக்கு நீடிக்காது என்று வார்த்தைகளால் வசைபாடுவார்கள்.

சம்பந்தப்பட்ட ஆணிடம் “மச்சான் உன் காட்ல மழைடா, எந்தக் கமிட்மெண்டும் இல்லாம வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிற”

என்று கூறும் சமூகம், சம்பந்தப்பட்ட   பெண்ணிடம் “திருமண அமைப்பு தான் பெண் களுக்குப் பாதுகாப்பு தரும். தேவை தீர்ந்தவுடன் உன்னை விட்டுட்டுப் போய்ட்டாருன்னா என்ன பண்றது, ‘இழப்பு’ உனக்குத் தான்” என்றும் பாடம் எடுக்கும்.

மொத்தத்தில் ஒன்னு தெளிவாகத் தெரியுது. திருமண அமைப்புக்குள் வராமல்  ‘சேர்ந்து வாழ்பவர்களை’ குடும்ப அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்க வந்தவர்கள் என்கிற ரீதியில் முரட்டுத் தனமாக எதிர்க்கின்றனர்.

என்னமோ திருமண அமைப்புக்குள் இருக்கும் ஒருவரும் பிரிந்து செல்லாதது போலவும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் மட்டும் தான் விட்டு விட்டுப் போய் விடுவார்கள் என்பது போலவும் கூறுவார்கள். நடைமுறையில் பார்த்தால் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழும் பெண்களின் நடைமுறை வாழ்க்கை மாற்றமின்றி அப்படியே தொடர்கிறதுன்னு சொல்வேன்.  

விருப்பம் இல்லாத இருவர் திருமணம் செய்து கொண்டோம் என்ற கட்டாயத்தின் பேரில் இணைந்து இருப்பதைவிட உணர்வுப்பூர்வமாக, இருவர் சேர்ந்து வாழ முடிவெடுப்பதையோ, பிடிக்கவில்லை என்று விலகிச் செல்வதையோ எந்த விதத்தில் தவறாகக் கூற முடியும்?

திருமண முறை எனும் அடிமை முறையை விட  ‘லிவிங் டுகெதர்’ முறை  எவ்வளவோ மேலானது என்று கூறுவேன். ஜாதி முறையைவிடக் கேடானது இந்தக் கணவன் மனைவி முறை என்று தந்தை பெரியார் கூறியது தான் என் நினைவுக்கு வருகிறது.

உடன்போக்கும், உச்சநீதிமன்றமும்

சமீபத்தில் கேரளஉயர்நீதிமன்றம் வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று தீர்ப்புக் கூறிய விசயத்தைச் சற்றே பார்க்கலாம்.  கேரளாவைச் சேர்ந்த 20 வயதான தன் மகள் துசாரா என்பவரை 21 வயது பூர்த்தியாகாத நந்தகுமார் என்பவர் கடத்திச் சென்று விட்டார் என்றும், அவர்கள் திருமணம் செய்தது இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாது என்றும்   பெண்ணின் தந்தை வழக்கு  தொடுத் திருந்தார்.

முன்னதாக இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ‘இந்துத் திருமணச் சட்டப்படி’ ஆணின் திருமண வயதான 21  பூர்த்தியாகாததால் துசாராவை தந்தையுடன் செல்ல அறிவுறுத்தி யிருந்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பானது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

துசாரா, தான் விரும்பியவருடன் இணைந்து வாழலாம் என்றும், வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்றும், தற்போது இம்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’  மூலம் பாதுகாப்புக் கோரலாம் என்று கூறிய தீர்ப்பானது ‘திருமண அமைப்பு முறையை’ உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு  அதிர்ச்சியையும்,  ‘லிவிங் டுகெதர்’ இணையர்களுக்கு மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்திருக்கிறது.

திருமண அமைப்பு முறைக்கு வேட்டு வைக்கிற மாதிரி இப்படிச் சொல்லி விட்டார்களே, எல்லோரும் இப்படித் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழக் கிளம்பிட்டா, திருமணம்ங்கிற பேரில் நமக்குக் கிடைக்கும் நிரந்தர ‘அடிமை போச்சே’ என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகளும், ஜாதி-மத ஆதிக்கவாதி களும். எதற்கெடுத்தாலும் பழந்தமிழர் பெருமை பேசுகிறவர்கள் இந்தத் தீர்ப்புக்கு  அதிர்ச்சி அடைவது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஆதித் தமிழர் பண்பாடே ‘உடன்போக்கும், களவுமனமும்’ தானே.

“திருமணமுறை, கல்யாணமுறை, கணவன்-மனைவி யாக  வாழும் முறை தமிழனுக்கு இருந்தது கிடையாது. ஆணும், பென்ணும் சம உரிமையோடு, நண்பர்களாக, காதலன் - காதலியாக வாழும் முறை தான் இருந்தது. இடையில் பார்ப்பான் வந்து புகுந்த பின் தான் தமிழன் அறிவு இழக்கவும், இது போன்ற முறைகள் பார்ப்பானால் புகுத்தப்பட்டது. நம் வாழ்க்கையில் பார்ப்பானுக்கு நிரந்தர அடிமையாக்க சூத்திரத்தன்மை புகுத்தப்பட்டதுபோல, பெண்கள் ஆண்களுக்கு நிபந்தனையற்ற அடிமைகளாக்கப் புகுத்தப்பட்டதே திருமண முறையாகும்” -10.11.1968நடராசன் யசோதா திருமண உரை,விடுதலை 15.11.1968

நேர்மையைத் தொலைத்துவிட்ட குடும்பஅமைப்பு

திருமண வயதில் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும் திருமண அமைப்புக்குள் வராமல்  சேர்ந்து வாழ்வதை  முறையான ஒரு உறவாகவே கருதாத இதே  சமூகம் தான்,  குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு நேர்மையற்ற முறையில் இன்னொரு உறவு வைத்துக் கொள்ளும் கணவன் அல்லது மனைவி விசயத்தில் குடும்பம் கெட்டுப் போய்விடும், இது அவங்க குடும்ப விவகாரம் நாம் தலையிடக்கூடாது  என்று கூறிக் கண்டும்  காணாமல் கடந்து போகின்றனர்.

எந்த உறவும் நீடிப்பதற்கு அடிப்படைத் தேவையான நேர்மையைத் தொலைத்து விட்டு ‘குடும்பம் என்கிற போலிப் பிம்பத்தை’க் காப்பாற்றத் துடிக்கிற சமூகத்தைப் பார்த்தால், என்ன தோன்று கிறது என்றால் குடும்பம்ங்கிற பிராண்டுக்குள் இருந்து கொண்டு நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்க என்று சொல்வது போல் உள்ளது. இதைத்தான்  அன்றே தோழர் பெரியார் கேட்டார்.

“இல்வாழ்வு, குடும்பம் என்று இப்படியே 1,000 வருஷத்திற்கு இருந்து பலன் என்ன? உன்னால் ஆனது என்ன? உன்னுடைய அறிவிற்கு என்ன பயன்? மனித ஜீவனுடைய நிலை இதுதானா? குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ வேண்டு மென்றில்லையே!  -  விடுதலை – 02.05.1969

அடுத்து இவர்கள் கூறுகிற குற்றச்சாட்டு என்னவென்றால், அவரவர் தன் இயல்பில் வாழ்கிற இந்த ‘லிவிங் டுகெதர்’ முறையால் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ அறவே இருக்காது. நீ உன் வேலைய மட்டும் பாரு, என்னோட வழியில் குறுக்க நிக்காதே என்கிற மனப்பான்மை தான் இருக்குமே தவிர, திருமண அமைப்பு முறையில் சரி விடு, கோவத்துல ஏதோ பேசிட்டாங்க, கொஞ்ச நேரம் கழிச்சு அவர்களே நார்மல் ஆகிவிடுவார்கள் என்கிற பக்குவமோ இருக்காது என்று வலியுறுத்துகிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் திருமண அமைப்பு முறையில் இருக்கும் பெரும்பாலான இணையர்களின் மனதுக்குள் “என்ன பண்ணித் தொலையறது குடும்பம் கெட்டுப் போயிரும்னு பார்க்கிறேன், குழந்தை இருக்கேனு பல்லைக் கடிச்சிட்டுப் பொறுத்துப் போறேன்” என்கிற வேண்டா வெறுப்பான மன நிலையால் தான் நீடிக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இப்படி உண்மை அன்போ, காதலோ இல்லாமல் சமூகத்தின் நிர்ப்பந்தத்தின் பொருட்டு இணைந்து இருப்பதைவிட - உண்மை, அன்பு, காதல், சுதந்திரஉணர்வோடு இருக்கிறவரை இருப்போம். எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் தொடர்ந்து இணைந்து வாழவேண்டாம். மனம் ஒத்து வரவில்லை என்றால், பிரிந்து விடுவோம் என்பது தான் நேர்மையான செயலாக இருக்க முடியும்.

“இல்வாழ்க்கை குடும்பம் என்பதெல்லாம் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் இருந்திருக் கலாம். இன்றைக்கு ஏன் இந்தத் தொல்லை? இதை  அறிவுள்ள மனிதன் சிந்திக்க வேண்டாமா?”- 23.04.1969 – தஞ்சைத் திருமண விழா உரை.

“மனிதன் கல்யாணம், திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்பனவற்றில் எதையும் செய்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் மனிதனுக்கு விடுதலை  என்பது. அதனால் குடும்பமே ஏற்படாது, தேவையுமிருக்காது. மனிதனுக்கு (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தொல்லையோ, கவலையோகூட இருக்காது, இருக்க இடமும் ஏற்படாது. சுயநலமற்ற பொதுத்தொண்டுக்கு ஏராளமான மக்கள் ஏற்படு வார்கள். மக்களுக்கும் நிபந்தனையற்ற பகுத்தறிவு வளர்ச்சி ஏற்பட முடியும். நாட்டில் மக்களிடம் சமுதாயத்தில், ஒழுக்கமும், நாணயமும், நேர்மையும் பரவும். சாகும் போதும் கவலையற்றுச் சாவான். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு சமுதாயமாகிய பெண்கள் சமுதாயம் பேரறிஞர் சமுதாயமாக உயரும். விஞ்ஞானத் தத்துவப்படிப் பார்த்தால் இல்வாழ்வில் பெண் மாத்திரம் அடிமை அல்ல, ஆணும் அடிமையே ஆவான். இல்லறம் என்றாலே சுதந்திரமற்ற வாழ்வு என்பது தான் தத்துவம். - ஞாயிறு மலர், விடுதலை 02.03.1969

Pin It