செப்டம்பரில், அதிரடியான மூன்று தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தன் பாலின உறவு குற்றமில்லை, திருமணம் கடந்த உறவு குற்றவியல் பிரிவில் வராது, சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் ஆகியனவே அத்தீர்ப்புகள்!

supreme court 255மூன்றில் ஒரு தீர்ப்பு, மணவாழ்க்கை கடந்த உறவு பற்றியது. அது தொடர்பான 497 ஆம் சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனினும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். திருமணம் ஆன ஒரு ஆண், திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றவியல் குற்றம் (criminal offence) என்று கருத வேண்டியதில்லை, அது ஒரு குடிமை வகைக் குற்றமே (Civil offence) என்றுதான் கூறியுள்ளது. அது குற்றமே இல்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. குடிமையியல் குற்ற அடிப்படையில், மணவிலக்கு கோரவும் உரிமை உண்டு.

அந்த சட்டப் பிரிவை நீக்கியதால், இனி நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருகிவிடும் என்றும், பண்பாடு சீரழிந்துவிடும் என்றும் வழக்கம்போல் குரல்கள் சில ஒலிக்கின்றன. அந்தச் சட்டப் பிரிவு எப்போதோ நீக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு மோசமான உள்ளடக்கம் உடையது அது. இதோ அந்தப் பிரிவு அப்படியே கீழே தரப்படுகின்றது:

Adultery.—Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offense of rape, is guilty of the offense of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor. (Sec. 497 of IPC)

மேலே உள்ள சட்ட விதியை ஊன்றிப் படித்தால், அது எவ்வளவு தூரம் பெண்களையும், மனித உறவுகளையும் கொச்சைப்படுத்திடுகிறது என்பதை உணரலாம்.

திருமணம் ஆன ஒரு ஆண், திருமணம் ஆன இன்னொரு பெண்ணுடன், அந்தப் பெண்ணின் கணவருடைய அனுமதி இல்லாமல் உடல் உறவு கொள்ளக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் 5 ஆண்டுகள் சிறை என்றும் கூறுகிறது.

அடுத்தவன் அனுமதியுடன் அவன் மனைவியோடு உறவு கொள்வதுதான் ஆகச் சிறந்த பண்பாடா? அவள் அவனுடைய உடைமைப் பொருளா? அந்தப் பெண்ணின் உணர்வு, அனுமதியென எதுபற்றியும் பேசாமல், அவள் கணவனின் அனுமதி என்பது சமூக இழிவு இல்லையா? அந்தப் பிரிவை நீக்கியதன் மூலம் அந்த இழிவை உச்ச நீதிமன்றம் விலக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தே தீர வேண்டும் என்றோ, பிறர் மீது காதல் வரவே கூடாது என்றோ சட்டம் போட இயலுமா? ஓஷோ சொல்வது போல், காமம் என்பது காதல் வயப்பட்டதேயன்றி, சட்டத்திற்கு உட்பட்டதன்று.

சமூக ஒழுங்கிற்காகச் சில மரபுகளை நாம் வைத்துள்ளோம். ஆனால் அந்த மரபுகளும், கால ஓட்டத்தில் மாறக்கூடியனவே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆணுக்குப் பெண் அடங்கி நடப்பதுதான் சிறந்த பண்பாடு என்னும் எண்ணம் உள்ளவர்கள் இந்தக் காலத்திலும் இருப்பது வியப்பே. அது ஒழிக்கப்பட வேண்டிய அடிமைப் பண்பாடு. பாலின சமத்துவம் என்பதே உயர்ந்த பண்பாடு. அதனை நோக்கியே இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பதால், உச்ச நீதிமன்றத்திற்கு நம்முடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பில் மலர்வதே காதல். அந்தக் காதல் என்பது எப்போதும் ஒன்றுதான். அதில் நல்ல காதல், கள்ளக் காதல் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

Pin It