கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் தாமரை மலரப் போகிறது, இதோ மலர்கிறது, அதோ மலர்கிறது, அடுத்து தாமரைதான் ஆட்சி செய்யப் போகிறது - என்ற காவிக் கும்பல்களின் வரட்டுக் குரல்களைக் கேட்டு சலித்துப் போய்விட்டார்கள் தமிழக மக்கள்.

இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்களிடம் இருந்தே இதற்குப் பதில் வந்து விட்டது.

பா.ஜ.கவைச் சேர்ந்த இந்திய ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிருஷ்ணராவ் காரத், அண்மையில் விருதுநகரில் பேசும் போது தெளிவாகச் சொல்லி விட்டார். என்ன சொன்னார்?

தமிழ் நாட்டைத் தவிர ஏனைய மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க வளர்ந்து இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வளர முடியவில்லையே, வளரவில்லையே என்று ஆதங்கப் பட்டுக் கொண்டே தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் உண்மை நிலவரத்தை மறைக்காமல் சொல்லிவிட்டார், அவர்.

உண்மைதான்! பா.ஜ.வினர் எவ்வளவுதான் கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் காவிகளை ஏற்க மாட்டார்கள்.

 தமிழக மக்களை இரண்டாந்தர மக்களாக நடத்துவது,

 மருத்துவத்தில் சிறந்த தமிழ் நாட்டின் மாணவர்களை நீட் தேர்வின் மூலம் அகற்ற முயற்சிப்பது,

 ஒன்றிய அரசுப் பணிகளில் வடநாட்டவர்களை நுழைத்துத் தமிழர்களைப் புறக்கணிப்பது,

 ஜீ.எஸ்.டி மூலம் கோடிக்கணக்காகத் தமிழக மக்களின் வியர்வையிலிருந்து வரி வசூலித்துக் கொண்டு, உரிய நிதியைத் தராமல் இழுத்தடிப்பது,

 இந்தியின் மூலம் சமஸ்கிருத ஆதிக்கத்தை நிறுவ, தமிழை அழிக்க முயல்வது,

 மதத்தால், சாதியால் மக்களிடம் கலவரத்தைத் தூண்டி குளிர்காய நினைப்பது,

- உள்ளிட்ட மக்கள் விரோத, பாசிச சக்தியான ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க / காவிக் கும்பல்களைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள், புறக்கணிப்பார்கள்.

காரணம் இது தமிழ்மண். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சித்தாந்தத்தால் வேர் பிடித்த மண், பெரியார் மண்!

காவித் தாமரைகள் விதைக்கும் மதவெறியை, இங்குள்ளத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு அமைத்தவர்களே அந்தப் பெருமக்கள்தான்.

காவிக்கு இங்கு வேலையுமில்லை; தாமரை, காய்வதைத் தவிர வேறு வழியுமில்லை!

- கருஞ்சட்டைத் தமிழர்