10 ஆண்டுகளுக்கு முன்பு என் பிறந்தநாள் ஒன்றில் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். “எந்த ஆண்டு நீ பிறந்தாய்?” என்று கேட்டார். 1952 என்று சொன்னேன். அடுத்த நொடியே, “ஓ.... பராசக்தியோடு பிறந்தவனா நீ?” என்று கேட்டுச் சிரித்தார்.
பராசக்தியோடு பிறந்தேன். பராசக்தி ஊட்டிய உணர்வில் வளர்ந்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.
திராவிட இயக்கத்திலிருந்து முதலில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பெருமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கே உரியது. அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், ஜலகண்டபுரம் கண்ணன் என்று பலரும் வரிசையாக அடி எடுத்து வைத்தனர். கலைத் துறையைக் கைப்பற்றி, சமூகநீதி, பகுத்தறிவு, பெண் விடுதலை முதலான பல கருத்துகளை அதன் வழி மக்களுக்குக் கொண்டு சென்ற பெருமை திராவிட இயக்கத் தலைவர்களையே சாரும்!
திராவிட இயக்கக் கருத்துகளைத் தாங்கிப் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்றாலும், மூன்று திரைப்படங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. வேலைக்காரி, பராசக்தி, ரத்தக்கண்ணீர் ஆகிய மூன்று படங்களே அவை!
கடவுள், புராணக் கதைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகம், பிறகு ராஜா ராணி கதை பற்றி பேசத் தொடங்கியது. சாதாரண மக்களைப் பற்றி - அதிலும் உழைக்கும் மக்களைப் பற்றிப் பேசிய முதல் படம் வேலைக்காரி அல்லவா!
1949 ஆம் ஆண்டு அப்படம் வெளிவந்தது. உழைப்பவர்களிடமும் கூட ஆணாதிக்கம் இருந்த, இருக்கின்ற சமூகத்தில் வேலைக்காரி என்று ஒரு பெண்ணின் பெயரைத் திரைப்படத்தின் பெயராக வைப்பதற்கு எத்தனை துணிச்சல் வேண்டும்! அந்தத் துணிச்சல் அண்ணாவிடம் இருந்தது.
அதேபோலத்தான் 1952 ஆம் ஆண்டு ஒரு தீபாவளி நாளில் வெளிவந்த பராசக்தியும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட படம் என்று கூற வேண்டும். அப்படம் வெளியான நாள் 1952 அக்டோபர் 17.
இன்றைக்கு நாம் அதனை ஒரு படமாகப் பார்க்கலாம். ஆனால் அன்றைக்கு அது ஒரு சமூகப் புரட்சி!
திரையரங்குகளில் நடிகர்கள் பெயர் வரும்போது மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த கையொலிகள் முதன்முதலாக அப்படத்தில் வசனகர்த்தாவிற்கும் கேட்கத் தொடங்கின! திரைப்படப் பாடல் புத்தகங்கள் மட்டுமே விற்றுக் கொண்டிருந்த காலத்தில், முதன்முதலாக வசனப் புத்தகங்கள் விற்கத் தொடங்கின.
அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அன்று முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம், பெரியார் முழக்கம் ஏட்டில் சென்ற ஆண்டு வெளிவந்திருந்தது. அந்த அளவிற்கு வரவேற்பையும் எதிர்ப்பையும் எதிர்கொண்ட ஒரு திரைப்படம் பராசக்தி.
அந்தப் படம் வெளிவந்து எழுபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் இன்று வரையில் அந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நம் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கின்றன.
கலைத்துறையில் திராவிட இயக்கம் கால் வைத்த போது அண்ணாவும், கலைஞரும் கூத்தாடிகள் என்று கேலி செய்யப்பட்டனர். கூத்தாடிகள் இல்லை அவர்கள் கலைஞர்கள் என்று பேச வைத்தவர்கள் அறிஞரும் கலைஞரும்தான்.
திராவிட இயக்கம் திரைப்படத் துறைக்குள் வந்த பிறகுதான், கலைத்துறைக்கு ஒரு கம்பீரமும், மக்களிடையே ஒரு மதிப்பும் ஏற்பட்டன என்பது மிகை இல்லை!
வரும் 17ஆம் தேதி பராசக்தியை நினைவு கூர்ந்து, முகநூல்களில், சமூக வலைத்தளங்களில் நண்பர்களே கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நேற்றே தோழர் கோவி.லெனின் அதனைத் தொடக்கி வைத்துள்ளார்.
இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கு இன்னும் நூறு பராசக்திகள் தேவைப்படுகின்றன! கலைஞரையும், பராசக்தியையும் தமிழகம் கொண்டாடட்டும்!
- சுப.வீரபாண்டியன்