கடந்த பத்தாம் தேதி இரவு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தார். மறுநாள் சென்னை கிண்டியில் உள்ள பெரிய விடுதியில் தங்கியிருந்தார். அவர் வருகையை அடுத்து, பரபரப்பான இரண்டு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன.

annamalai 289ஒன்று, அனைவரும் அறிந்த, தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜி கைது! இன்னொன்று, கடந்த 13 ஆம் தேதி, சென்னை, இராயப்பேட்டை, கட்சி அலுவலகத்தில், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம்!

அந்தத் தீர்மானத்திற்கு அவ்வளவு முதன்மை இருக்கிறதா என்று கேட்கத் தோன்றும். ஆம், இருக்கிறது! அது அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் போலத் தெரியும். ஆனால் உண்மையில், அண்ணாமலையை நீக்குவதற்கு முன்னோட்டமாகப் பாஜக கொண்டு வரச் சொன்ன தீர்மானம் என்று ஒரு செய்தி கசிகின்றது!

அந்தச் செய்தி உண்மையாய் இருப்பதற்கே வாய்ப்பு உள்ளது. அண்ணாமலையை எதிர்த்து ஜெயக்குமார் போன்றவர்கள் அங்குமிங்கும் பேசுவது வேறு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே நேரடியாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது வேறு! அந்தத் துணிச்சல் எடப்பாடிக்கு எங்கிருந்து வரும்?மிரட்டாமலேயே அஞ்சக் கூடியவர் எடப்பாடி! அப்படிப்பட்டவர் பாஜக மாநிலத் தலைமைக்கு எதிராக எந்தத் துணைச்சலில் தீர்மானத்தை நிறைவேற்றுவார்?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகளும், திமுகவுக்கு எதிரானவை என்று ஒரேயடியாக முடிவு கட்டிவிட முடியாது! திமுகவின் தொண்டர்கள் வலிமை, அமைப்பு வலிமை அனைத்தும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். இப்படி எல்லாம் திமுகவை மிரட்டி விட முடியாது என்பதும் அவர்கள் அறிந்ததே! எனவே, அதுவும் ஒரு வகையில் எடப்பாடி குழுவினருக்கு விடப்பட்டுள்ள மிரட்டலாகத்தான் தெரிகிறது!

சரி, அண்ணாமலையை பாஜக ஏன் நீக்க வேண்டும்? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான, ஜனநாயகமற்ற, சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல்கள், எதிர்க்கட்சியான திமுகவுடன் நடைபெறும் மோதல் என்றால், அண்ணாமலை விவகாரம் ஓர் உள்குத்து!

கே. டி. ராகவன், காயத்ரி ரகுராம், இப்போது கோமாளி நடிகர் எஸ்வி சேகர் என்று கட்சிக்குள் இருக்கும் பார்ப்பனர்களோடு அண்ணாமலை தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறார். இது உள்ளே இருக்கும் பார்ப்பனத் தலைவர்கள் பலருக்கும் அறவே பிடிக்கவில்லை. இதன் மூலம் அண்ணாமலை பார்ப்பனருக்கு எதிராகப் போர் தொடுக்கும் சுயமரியாதைக்காரர் என்று கருதி விடக்கூடாது. தன்னலம், தன் முனைப்பு (Ego) காரணமாகவே அவர் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார். எனவே இதற்கு மேலும் அவரை அந்தப் பொறுப்பில் விட்டு வைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு பாஜகவில் இருக்கிற பெரிய பார்ப்பனத் தலைகள் சிலரின் கருத்தாக இருக்கிறதாம். அந்த அழுத்தம் காரணமாகவே அண்ணாமலையை அப்பொறுப்பிலிருந்து நீக்க பாஜகவின் தில்லி தலைமை முடிவு செய்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அப்படியானால் தமிழ்நாடு பாஜகவிற்கு அடுத்து எச் ராஜா, நாராயணன் திருப்பதி போன்ற ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கி விடுவார்களா என்ற ஐயம் யாருக்கும் வேண்டாம்! அந்தத் துணிச்சல் ஒரு நாளும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வரவே வராது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு செயலைச் செய்யவே முடியாது என்பது அமித்ஷா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றாகத் தெரியும்! பார்ப்பனர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்கக்கூடிய, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராக ஆக்குவதுதான் கட்சியின் திட்டமாம்!

எப்படியோ 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, அண்ணாமலை தமிழ்நாட்டு பாஜக தலைவராக இருக்கப் போவதில்லை. அவரின் காலமும், கணக்கும் முடிந்து கொண்டிருக்கின்றன!

சுப.வீரபாண்டியன்

Pin It