‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஸ்டேக் டிரண்டிங் ஆகி சங்கி கும்பலுக்கு கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது. திரைத்துறையைச் சேர்ந்த இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் வெற்றிமாறன் போன்றவர்களும் இந்திக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்து இருக்கின்றார்கள். அதே போல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் அது போன்ற டிசர்ட் அணிந்தவர்களோடு புகைப்படம் எடுத்து அதைப் பகிர்ந்துள்ளார்.

Kanimozhi Hindi theriyathu poda தற்போது ‘இந்தி தெரியாது போடா’ என்று கலகம் செய்யப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி தினமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 22 மொழிகள் அரசியல் சட்டத்தின் விதிகள் 344(1), 355 ஆகியவற்றின் படி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது குறிப்பாக இந்திக்கு மட்டும் சிறப்புரிமை கொடுத்துக் கொண்டாடுவதன் மூலம் இந்திய அரசு என்பது இந்திக்கு மட்டுமே உரிய அரசு என்று பகிரங்கமாக கூச்சமே இல்லாமல் செய்யும் அற்பக் கூத்தைக் கண்டித்துதான் ஒவ்வொரு ஆண்டும் இந்தி பேசாத மாநில மக்களால் குறிப்பாக இந்தி எதிர்ப்பின் மையமாக இருக்கும் தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களிலும் #WeDontWantHindiDivas, #StopHindiImposition போன்ற ஹஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டன.

இந்த எதிர்ப்பு என்பது ஏதோ சிலருக்கு தனிப்பட்ட முறையில் நடந்த அவமதிப்பின் வெளிப்பாடாக நாம் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி "இந்தி தெரியாது" என்று சொன்னதற்காக விமான நிலைய அதிகாரி ஒருவர் "நீங்கள் இந்தியரா?" எனக் கேட்டது தமிழக மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அதே போல இயக்குநர் வெற்றிமாறனும் 2011ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் தனக்கு இந்தி தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னபோது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் ரொம்பக் கோபமாகி, "நீங்களாம் இப்படித்தான்... யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி... நீங்களாம் தீவிரவாதிங்க"ன்னு சொன்னதோடு தன்னைத் தனியாகவும் நிற்க வைத்து விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இன்று இந்திக்கு எதிராக குறிப்பாக சமூகக் கண்ணோட்டத்தோடு சிந்திக்கக் கூடிய பலபேர் ஒன்றாக எதிர்ப்பு தெரிவிக்கக் காரணம், அதன் பின்னுள்ள மதவாத அரசியலை எதிர்த்துத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியை எதிர்ப்பவர்கள் யாரும் அதை வெறும் ஒரு மொழியாக மட்டும் பார்க்கவில்லை; இந்தியை பார்ப்பனியத்தைப் பரப்பும் ஒரு கருவியாகவே பார்க்கின்றார்கள். இந்தி திணிக்கப்படுவது என்பதன் பொருள் பார்ப்பனியம் திணிக்கப்படுகின்றது என்பதுதான்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பார்ப்பனப் பாசிசத்திற்கு எதிரான வளமான மரபு கொண்ட ஒரே மாநிலமாக இந்தியாவில் தமிழகம் மட்டுமே இருக்கின்றது. தேவாரம், திருவாசகம் போன்ற நூற்றுக்கணக்கான குப்பைகளை தமிழில் எழுதி தமிழனின் மூளையில் பார்ப்பனியத்தைத் திணிக்க பார்ப்பனக் கூட்டமும் அதன் கைக்கூலி கூட்டமும் என்னதான் முயன்றாலும் அந்த மரபின் தொடர்ச்சியை ஒரு போதும் சிதைக்க முடிந்ததில்லை.

காலம்தோறும் பார்ப்பன எதிர்ப்பின் தொடர் கண்ணியை இன்று வரையிலும் தமிழகம் கொண்டிருப்பதன் காரணம் அதன் ஆன்மா பார்ப்பனியத்தை ஒழித்துக்கட்ட துடித்துக் கொண்டிருக்கின்றது என்பதுதான். 

இந்தி திணிப்பு என்பதை தமிழனின் மரபணுவின் மீது தொடுக்கப்படும் பெரும் தாக்குதலாகவே மானமுள்ள தமிழர்கள் உணர்கின்றார்கள். யுவன்சங்கர் ராஜாவோ, வெற்றிமாறனோ இந்தியை எதிர்ப்பது தங்களுக்கு அது தெரியாது என்பதைத் தாண்டி அதன் மீதுள்ள அரசியலால்தான். அப்படித்தான் நாம் புரிந்து கொள்கின்றோம்.

‘இந்தி தெரியாது போடா’ என்பதன் அர்த்தம் 'இந்தி தெரிந்து கொள்ள வேண்டிய எந்த ஒரு அவசியமும் எங்களுக்கில்லை போடா' என்பதுதான். இந்தியா என்ற போலியான ஒரு பொதியை தமிழகம் சுமந்து வருவதால்தான் அது பல இடர்பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. தன்னளவில் தனித்து ஒரு நாடாக இயங்கவல்ல எல்லா கூறுகளையும் தன்னகத்தே கொண்ட  தமிழ்நாட்டின் வருமானம் முழுவதையும் ஒரு கொள்ளைக்காரனைப்போல திருடிக் கொண்டு, அந்த வருமானத்தை உற்பத்தி செய்த ஒரு இனத்தை பஞ்சைப் பராரிகளாக புயல், மழை போன்ற பேரழிவு காலத்தில் கூட சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அந்நிய ஆக்கிரமிப்பாளனாகவே இந்தியாவை மானமுள்ள தமிழர்கள் பார்க்கின்றார்கள்.

அப்படிப்பட்ட இந்தியா என்ற ஆக்கிரமிப்பாளன் தன் வரலாற்றுத் தொடர்ச்சியை அழித்தொழிக்க முற்படும் போது அதற்கான எதிர்ப்பை ஏதாவதொரு வகையில் தமிழர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இந்தியை எதற்காக படிக்க வேண்டும் என்று ஒரு எளிய தமிழன் கேட்கும் கேள்விக்கு அதை திணிப்பவர்களிடம் ஒருபோதும் பதிலிருந்தது இல்லை.  

வேலை வாய்ப்புக்காக படிக்க வேண்டும் என்றால் இந்தி பேசும் மாநிலங்களின் இன்றைய பொருளாதார நிலை என்ன, இந்தி பேசாத மாநிலங்களின் பொருளாதார நிலை என்ன என்பதைப் புள்ளிவிவரங்களோடு தெரிவிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ள என்றால், இந்தி பேசும் மாநிலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உலகம் போற்றும் கண்டுபிடிப்புகள் என்ன, அறிவியலுக்கு இந்தி பேசும் மாநில மக்களின் பங்களிப்பு என்ன என்பதையும் மெய்ப்பிக்க வேண்டும். இல்லை, இந்திய ஒருமைப்பாடே எங்கள் நோக்கம் என்றால், இதுவரை இந்தி பேசாத மாநிலங்களில் வெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின் போது இந்திய அரசு கொடுத்த நிவாரணம் எவ்வளவு, இந்தி பேசும் மாநில மக்கள் பாதிக்கப்பட்ட போது கொடுத்த நிவாரணம் எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இதை எல்லாம் ஒளிவு மறைவின்றி பட்டவர்த்தனமாக அறிவித்தாலே இந்தியை வைத்து சங்கி கும்பல் செய்யும் அரசியலின் உண்மை தெரிய வரும்.

சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தியைத் திணிக்கும் இவர்களின் நோக்கத்தின் பின் இருப்பது அப்பட்டமான பார்ப்பனியமே தவிர வேறு எதுவுமேயில்லை. போபாலில் 2015 ஆண்டு செப்டம்பர் 10  அன்று இந்தி மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய மோடி  ”சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய திலகர், ராஜாஜி போன்றவர்களின் தாய் மொழி இந்தி இல்லை, ஆனால் அவர்கள் இந்தி மொழியை ஓர் இயக்கமாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தார்கள், அவர்களிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர்” என்று சொல்லி இருந்தார்.

ஆனால் மோடி. குறிப்பிட்ட அந்த மூன்று பேரில் திலகரும், ராஜாஜியும் அப்பட்டமான இந்து மதவெறி பார்ப்பன பாசிஸ்டுகள் ஆவர்கள். அதில் 1937-ல் ராஜாஜி முதலமைச்சர் ஆனவுடன் இந்தியைத் தமிழ் மக்கள் மீது திணித்ததும், பிறகு பெரியார் அவர்கள் நடத்திய மிகப் பெரிய போராட்டத்திற்குப் பயந்து ராஜாஜி கட்டாய இந்தித் திணிப்பை விலக்கிக் கொண்டதும், மீண்டும் அதே ராஜாஜி 1957-ல் ‘ஒரு போதும் இந்தி வேண்டாம்’ என்று அந்தர்பல்டி அடித்ததும்தான் வரலாறு.

சென்ற ஆண்டு இந்தி தினத்தன்று அமித் ஷா தனது ட்விட்டரில் பக்கத்தில், "இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் அதே சமயம் உலகளவில் நமது நாட்டின் அடையாளமாக ஒரே மொழி இருத்தல் வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு மொழி நம்மை இணைக்குமானால் அது இந்தி மொழியாகத் தான் இருக்கும். ஏனென்றால் அதுதான் அதிகளவில் பேசப்படுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

அதே போல இந்தியை ஐ.நா வில் 7- வது அலுவல் மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஆகும் செலவு 270 கோடியை இந்திய அரசே ஏற்கும் என்றும், பணம் ஒரு பொருட்டே அல்ல என்றும் மறைந்த சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கின்றார்.  இப்படி என்னதான் சங்கிகள் இந்தியை விதந்தோதினாலும், உண்மையில் இந்தி எபோதுமே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மொழியாக இருந்தது இல்லை என்பதுதான் உண்மை. தமிழகம் தவிர்த்த மற்ற இந்திய மாநிலங்கள் அனைத்துமே இந்தி பேசுவது போன்ற ஒரு மாயை தொடர்ச்சியாக சங்கி கும்பலால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில் 25% மட்டுமே இந்தியை தங்கள் சொந்த தாய்மொழியாகப் பதிவு செய்திருக்கின்றார்கள். மீதமிருக்கும் 75 சதவீத மக்கள் தங்களின் சொந்த மொழிகளையே பேசுகின்றார்கள்.

அதனால்தான் சொல்கின்றோம், இந்தி திணிப்பு என்பது அப்பட்டமான பார்ப்பனியம் என்று. இன்று இந்தி பேசும் மாநிலங்களின் பொருளாதார நிலையைப் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம். இன்று வட இந்தியாவைச் சேர்ந்த பலர் ஒருவேளை உணவு சாப்பிடும் நிலை இருக்கின்றது என்றால் அது இந்தி பேசாத தென்மாநில மக்கள் அளிக்கும் வரியினால்தான். வட மாநிலத் தொழிலாளர்கள் இந்தி பேசாத தென்மாநிலங்களில் பணி செய்து அனுப்பும் பணத்தில்தான் அவர்களது சொந்த மாநிலத்தில் வாழும் அவர்களது குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. இந்தி பேசாத தென் மாநிலங்கள் இல்லை என்றால், வட மாநிலங்கள் எல்லாம் என்றோ சுடுகாடு ஆகியிருக்கும்.

அதனால் இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதைத் தவிர்த்துவிட்டு இந்தி பேசும் மாநிலங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு சங்கு கும்பல் முயற்சிப்பதே உண்மையில் இந்தி பேசும் மக்களுக்கு அவர்கள் செய்யும் உதவியாகும். அப்படி இல்லாமல் பார்ப்பனியத்தைத் திணிக்க இந்தியைத் திணித்தால் நாங்கள் உண்மையில் உரத்துச் சொல்வோம் ‘இந்தி தெரியாது போடா’ என்று மட்டுமல்ல, ‘இந்தி எங்களுக்கு அவசியம் இல்லை போடா’ என்றும்...!

- செ.கார்கி

Pin It