“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை”
என்று இயற்கையின் விதியை அன்றே சொல்லிருக்கிறார் பெரும்புலவர் திருவள்ளுவனார்.
2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கும், இப்பொழுது ‘மிக்ஜாம்’ புயலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் வேறுபாடு உண்டு, இரண்டையும் ஒப்பிடக்கூடாது.
வீதிகளில், பாலங்களின் அடியின் மழைநீர் தேங்கக் கூடாது என்று நீர் வடிகால் பணிகளைத் திட்டமிட்டு செய்து முடித்து, ஆறுகள், ஏரிகள் போன்றவைகளையும் தூர்வாரி, அனைத்து நிலைகளிலும் மிக்ஜாம் புயலை எதிர்கொண்டு இருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.
36 மணி நேரம் கனமழை. இதில் 12 மணி நேரம் மிகக்கன மழை. இயல்பை விட ஏறத்தாழ 400 சென்டி மீட்டர் பெய்த மழையின் கூடுதல் தண்ணீர், சில மணி நேரத்தின் புயலின் தாக்கம். முறிந்து விழுந்த மரங்கள், சரிந்து விழுந்த மின்கம்பங்கள். . உயிர்களைக் காப்பாற்ற உடனடி மின் நிறுத்தம், போக்குவரத்துப் பாதிப்பு.... இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆழிப்பேரலையைப் போல மழைநீர் நிறைந்து, சூழ்ந்த பகுதிகளில் எல்லாம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, கனிமொழி, துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் என்று அமைச்சர்களும், சென்னை மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் பட்டாளம், அரசுப் பணியாளர்கள் என அனைவரும் மக்களுடன் களத்தில் நின்று அவரவர் கடமையைச் செய்தார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்தப் போர்க்கால, அவசரகால நடவடிக்கைகளினால் இப்பொழுது பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்கள் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறன.
பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆவேசமும், கோபமும் இருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும் ‘இயற்கையின் பேரிடர்’ ‘இயற்கையின் பாதிப்பு’ என்பதும் அவர்களின் உள்ளுணர்வில் இருக்கத்தான் செய்யும்.
இந்த நேரத்திலும் கூட ‘எதிரி’க்கட்சியாகவே தோற்றம் தரும் அ.தி.மு.க. 2015 ஐ மறந்துவிட்டுத் தவளையைப் போலக் குறைகளையே பேசிக் கொண்டு இருக்கிறார்களே ஒழிய மக்கள் குறைகளைக் களைய களத்தில் அவர்களைக் காணவில்லை.
பாவம், இன்னொரு தவளைக் குஞ்சு அண்ணாமலைக்கு இப்போது படகு ஒன்றும் கிடைக்கவில்லை போலும். அவர் பங்குக்கும் குறை சொன்னார், போய்விட்டார்.
இந்நிலையில் 5060 கோடி ரூபாய் முதல்கட்ட நிவாரண நிதியாக ஒன்றிய அரசிடம் நம் முதல்வர் கேட்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது (முதல் தவணையாக) ஒன்றிய அரசு கொடுத்திருப்பது வெறும் 450 கோடி என்கிறது செய்தி.
தன் உடல்நலம் பேணாமல், மக்களின் வாழ்க்கைக்காக மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் நின்று பணியாற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை இந்தக் குறள் நினைவூட்டுகிறது.
“கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் ஆண்ட(து) அமைச்சு’’
முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து நிற்போம், முதல்வரைப் பாராட்டுவோம்!
- கருஞ்சட்டைத் தமிழர்