“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற முதுமொழிக்கேற்ப தாய்த்தமிழ்நாட்டின் வர்த்தகத்தை வளர்த்தெடுக்க முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் சூழலில் இது இவரது இரண்டாவது அயலகப் பயணம் ஆகும்.

2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை லட்சிய இலக்காகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. இதற்காக ரூ.23 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 2021 முதல் தற்போது வரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் ரூ. 2,95,339 கோடி அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. “அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சி” என்ற அரசின் நோக்கத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் பரவலாக அமைகின்றன.mk stalin at japanதமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வரும் பொருட்டு வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் அந்நாட்டின் போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) போன்ற நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்தித்து உரையாடினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI), தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்திற்கும் Singapore India Partnership Office (SIPO), தமிழ்நாட்டின் FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுக்கும் Singapore India Partnership Office (SIPO), தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் Singapore Hi-P International Pvt. Ltd., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் Singapore ITE Education Services என ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூரில் தமிழ் மற்றும் தமிழர் வளர்ச்சிக்கு உதவிய அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் (சிலை மற்றும் நூலகம்) அமைக்கப்படும் என்று அறிவித்தது தமிழர்களின் நன்றி உணர்வை தரணிக்கு பறை சாற்றும் விதமாக அமைந்தது. அத்துடன் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் 200 பேர் ஆண்டுதோறும் தமிழ்நாடு வந்து தொடர்பினை புதுப்பித்துக் கொள்ளும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டமான “வேர்களைத் தேடி” திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கும் முதல்வர் முன்னிலையில் கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தான் திருடி பிறரை நம்ப மாட்டாள் என்பதற்கேற்ப முதல்வரின் அயலக பயணம் குறித்து அவதூறு கருத்துக்களை அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி போன்றவர்கள் கூறி வந்தாலும் முதல்வரின் பயணம் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்பதை அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட அமோக வரவேற்பு உணர்த்துகிறது.

வெற்று உலாவாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி போல் அல்லாமல்

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக

களியியல் யானைக் கரிகால் வளவ!”

என்று பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியாரால் புகழப்பட்ட முதல் கரிகாற்சோழன் போல் சென்ற இடங்களில் எல்லாம் முதலீடுகளை ஈர்த்தது மட்டுமின்றி மக்கள் மனங்களையும் வென்று தாயகம் திரும்புகிறார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It