சுதந்திர நாளில் தேசிய கொடியை ஏற்றிவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சும், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசிய பேச்சையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை நன்றாக புரியும். முதலமைச்சர் அடுக்கடுக்கான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்திருக்கிறார், மோடியின் பேச்சு வெற்று சவடாலாகவே இருந்தது. தமிழக முதலமைச்சர் 55,000 காலி பணியிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பென்ஷன் தொகை உயர்த்தப்படும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும், மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர். காலை சிற்றுண்டி திட்டம் மேலும் 31,000 பள்ளிக்கூடங்களில் விரிவாக்கப்படுகிறது, வாகனங்களின் மூலம் உணவு வழங்குகிற ஊழியர்களுக்கு நலவாரியம், ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு மானியம் என்று அடுக்கடுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர்.

மோடியோ உலக நாடுகளில் இந்தியா ஒன்றாக அடுத்த மூன்று ஆண்டுகளில் இடம் பெறப் போகிறது. அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் நானே கொடியேற்றுவேன், மணிப்பூர் பெண்களுக்காக நாடே அவர்களின் பின்னால் நிற்கிறது என்றெல்லாம் வெத்து வேட்டு வாய்ச்சவடல்களை பேசியிருக்கிறார். அடுத்தமுறையும் நானே பிரதமர் என்று தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு, செங்கோட்டையில் கொடியேற்றுவது நான் தான் என்கிறார்.

விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு திட்டத்தை மட்டும் அவர் அறிவித்திருக்கிறார். அதன் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்ற பாரம்பரிய தொழில் புரிபவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறியிருக்கிறார். குலத் தொழிலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இழுத்துச் செல்லும் வர்ணாசிரம திட்டமே இது.

ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறார் மோடி. ஆனால் இவர்கள் ஊழலற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களா? HCLP என்ஜின் தயாரிப்பில் ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பரனூர் உட்பட்ட 5 சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ரூ.154 கோடி பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 7.5 இலட்சம் பேர் ஒரே தொலைபேசி எண்ணை இணைத்து மெகா மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒன்றிய தணிக்கை வாரியம் (CAG) வெளியிட்ட அறிக்கைகளாகும்.

உதான் திட்டத்தின் மூலம் 33 வழித்தடங்களில் இதுவரை விமான சேவை தொடங்கப்படவே இல்லை, ரூ.1089 கோடி செலவிட்டும் பல வழித்தடங்களில் இந்த விமான சேவை தொடங்கப்படவில்லை. பாரத் மாலா எனும் சாலை அமைக்கும் திட்டத்தின் மூலம் டெல்லி - அரியானாவை இணைக்கும் 29 கி.மீ துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியில் சுமார் ரூ.6500 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய தணிக்கை வாரியம் (CAG) அறிவித்திருக்கிறது.

தணிக்கை வாரியம் ஊழல் நடந்திருப்பதாகவே குற்றம் சாட்டியிருப்பதை கவனிக்க வேண்டும்.

இப்படி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி நிற்கிறது மோடி ஆட்சி. சாதனைகளை பட்டியலிடுகிறது திராவிட மாடல் ஆட்சி.

விடுதலை இராசேந்திரன்