அண்மையில் கர்நாடகத்தில் நடந்து முடிந்த மாநிலப் பொதுத் தேர்தலின் மூலம் பா.ஜ.கவைத் துடைத்து எறிந்து விட்டனர் அம்மாநில மக்கள். இது பா.ஜ.கவுக்குக் கிடைத்த மிகப்பெரும் அதிர்ச்சி. காரணம் தென் மாநிலங்களில் அக்கட்சிக்கு இருந்த ஒரே மாநிலத்தையும் அது இழந்துவிட்டது.
பா.ஜ.கவைத் தோற்கடித்துப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த காங்கிரசின் வெற்றி, இந்திய ஒன்றியம் முழுவதும் ஓர் உற்சாகத்தைத் தந்தது எதிர்க் கட்சியினருக்கு.
இன்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
பா.ஜ.க என்ற சர்வாதிகாரச் சக்தியை 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும். தவறினால் அதற்கு அடுத்த பொதுத் தேர்தல் நடக்குமா என்பது கேள்விக் குறியாக நிற்கிகிறது.
பா.ஜ.கவை ஒரு பாசிச சக்தியாகப் பார்க்கும் அதே நேரத்தில், கர்நாடகக் காங்கிரஸ் கட்சியினர் சற்று வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார்கள்.
பா.ஜ.க ஒரு தீய சக்தி. அது ஒரு தீட்டுப்பட்ட கட்சி என்று, அக்கட்சி ஆட்சி செய்த பெங்களூரில் சட்ட மன்றம் இருக்கும் விதான் செளதா கட்டிடத்தைத் தூய்மை செய்திருக்கிறார்கள்.
அதுவும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பாணியில், அதே வழிமுறையில் தீட்டுக் கழிக்கும் மந்திரங்கள் ஓதியபடி, மாட்டு மூத்திரத்தைச் (கோமியத்தை) சட்டமன்ற வளாகத்தில் தெளித்துத் தீட்டு கழித்து இருக்கிறார்கள்.
இப்படித் தீட்டுக் கழிப்பதன் மூலம், பா.ஜ.க எனும் தீட்டு நீங்கி, அம்மன்றம் புனிதம் பெற்று விடுகிறதாம்.
தன் வினைத் தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்பது போல, பார்ப்பனியத்தின் தீட்டும், புனிதமும் பா.ஜ.கவையே கழுவிட்டது, பெங்களூரில்.
சடங்கு, மந்திரம், தீட்டு, புனிதம் என்பதில் எல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லை. தீட்டு, புனிதம் எதுவும் உண்மையில்லை. காங்கிரஸ் கட்சியினர் இது போன்ற செயல்களில் இனி இறங்காமல் இருப்பது நல்லது.
இங்கு மேற்சொன்ன நிகழ்வைச் சுட்டிக் காட்டியதற்குக் காரணம், மக்கள் விரோத பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு இதுவும் ஒரு குறியீடாக இருக்கிறது என்பது தான்.