தலைவர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கான உணவுத் திட்டத்தை, கலைஞர் படித்த திருக்குவளை ‘ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி’ யில் தொடங்கி வைத்தார் முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள்.

அப்போது பேசிய அவர் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதி “ஒதுக்கீடு அல்ல, முதலீடு” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். இதன் மூலம் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வருண பேதமாக சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டக் கல்வித் தடையை உடைத்து எறிந்தது திராவிட இயக்கம், தந்தை பெரியார்.

இன்று கல்விக் கூடங்களில் சாதிக்குரிய கல்வி என்றும், வேலை வாய்ப்புகளில் சாதிக்குரிய வேலை என்றும் எதுவும் கிடையாது. சமத்துவத்தை நோக்கிச் செல்கிறார்கள் மக்கள். ஆனால் கோயில்களில் அப்படியில்லை. இதில் ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ‘ என்ற உணர்வை முதல்வரின் பேச்சில் காண முடிந்தது.

தமிழ்நாட்டில் சிறப்பாகக் கல்வியின் தரத்தை முன்னெடுத்து நடைமுறைப் படுத்துவதைப் பொறுக்க முடியாமல் தகுதித் தேர்வு, நீட் தேர்வு என்ற தடைச்சுவர்களை எழுப்பும் விபீஷ்ணர்களுக்கு இங்கு வேலையில்லை என்று சொல்லும் முதல்வர், இதன் மூலம் இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் நாளை உயர் கல்விக்குப் போகும்போது எந்தத் தடையும் இருக்காது என்பதை உணர்த்தி இருக்கிறார்.

கடமைக்காகச் செய்வது வேறு, கடமையை உணர்ந்து செய்வது வேறு. மாணவர்களுக்கான இவ்வுணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவது மனநிறைவாக இருப்பதாகக் கூறுகிறர்.

திருக்குவளையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் அந்தக் குழந்தைகளோடு அமர்ந்து இந்தப் ‘பெரிய குழந்தை’ யும் சாப்பிடும் போது, “உன் பெயர் என்ன? “எந்த வகுப்பு படிக்கிற “ “ முதல்ல ஸ்வீட் சாப்பிடு” “நல்லாருக்கா” என்று குழந்தைகளுடன் பேசிக் கொண்டு சாப்பிடும் போது, ஒரு குழந்தையிடம் “என்பேரு தெரியுமா?” என்று கேட்க, அந்தக் குழந்தை “ஸ்டாலின் “ என்று சொன்னபோது முகமலர்ந்த அவர், முதலமைச்சரா இல்லை ‘பெரிய எல்.கே.ஜி மாணவரா’ என்று உருக வைத்துவிட்டார்.

கல்வியில் தமிழ் நாட்டைச் சிறக்கச் செய்து கொண்டு இருக்கும் தமிழ்நாடு அரசைப் பாராட்டுவோம், நம் முதல்வரை வாழ்த்துவோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It