முந்தைய ஆண்டு முடிந்து விட்டது. புதிய ஆண்டு வந்து விட்டது. மாற்றம் என்பது இயற்கையின் நியதி, மறுக்க முடியாது.
மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் இருக்காது.
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கல்விக்கு குறிப்பாகப் பெண்கல்விக்கு மிக முன்னுரிமை கொடுத்து மாற்றங்களைச் செய்து வருகிறார். மகளிருக்கான வளர்ச்சி, மருத்துவத் துறையில் வளர்ச்சி, சென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 'டைடல் பார்க்', அந்நிய முதலீடுகளை பெருமளவு தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பது,
இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் வளர்ச்சியை நோக்கிய மாற்றங்களைச் செய்து கொண்டு இருக்கிறார் அவர், தமிழ்நாட்டில்.
ஒன்றியப் பிரதமர் மோடியின் ஆட்சியில் இப்படிப்பட்ட வளர்ச்சிகள் எதுவும் வரவில்லை.
வழக்கம்போல வெளிநாடுகளில் சுற்றுவதும், நேரம் கிடைத்தால் நாடாளுமன்றம் வருவதும், அப்படி வந்தால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்', என்று உருப்படாத மசோதாக்களைக் கொண்டு வருவதும், நாடாளுமன்றத்தில் அதானி முறைகேடுகள், மணிப்பூர் வன்முறை போன்றவைகள் பேச அனுமதிக்க மறுப்பதும், இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கரை இழிவு படுத்துவதில் சுகம் காண்பது இவை எல்லாம் மாற்றத்திலும் அடங்காது, வளர்ச்சியிலும் வராதது!
அண்மையில் 'மன்கீ பாத்' நிகழ்ச்சியில் தமிழ்மொழியை ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார், மோடி. இது கொஞ்சம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, நமக்கு.
அறிவுச் சூரியன், 'பேரறிவுச் சிலை' திருவள்ளுவரைப் பார்க்க ஒவ்வொரு நாளும் எழுந்து வந்து, 'திருக்குறளைப் படி - படி' எனச்சொல்லும் 'உதயசூரியன்' உள்ளவரை, குறள்வழியான ஆட்சியில் தமிழ்நாட்டில் மாற்றங்கள் வரும், வளர்ச்சியைத் தரும்.
அனைவருக்கும் உலகப் புத்தாண்டு வாழ்த்துகள்.
- கருஞ்சட்டைத் தமிழர்