சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் தமிழக காக்கிகளுடன் சேவா பாரதி என்ற ஆர்எஸ்எஸ் காக்கிக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றன. அரசிடம் நேரடியாக சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களை ஒடுக்கும் பாசிச அமைப்பும், இந்தியப் பெருமுதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறுபான்மையின மக்களையும், தலித்துகளையும் ஒடுக்கும் பாசிச அமைப்பும் இந்திய அளவில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் கரம் கோர்த்து செயல்படுவது போல, பாஜகவின் பினாமிகள் ஆட்சி செய்யும் தமிழகத்திலும் கரம் கோர்த்து, படுகொலைகளில் ஈடுபட்டு வருவது இதன் மூலம் அம்பலமாகி இருக்கின்றது.
சினிமாவில் வரும் லட்சிய போலீஸ்களைப் பார்த்து, நாமும் ரவுடிகளையும், பொறுக்கிகளையும், சமூக விரோதிகளையும் அழித்து துவம்சம் செய்து உலகத்தை ரட்சிக்க வேண்டும் என மனப்பிரம்மையில் உழன்று கொண்டிருக்கும் கூட்டம்தான் தமிழக காவல் துறை இயக்கி வரும் ஆள்காட்டி மற்றும் அடியாள் அமைப்பான Frinds of police (FOP) இன் இலக்கு. சமூகத்தைப் பற்றிய எந்தவித அரசியல் பார்வையும் அற்ற இளைஞர்கள், காவல் துறை தன்னுடைய குற்றச் செயல்களுக்கு கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்வதற்குத்தான் வலை விரிக்கின்றது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு அதில் சேர்ந்து விடுகின்றனர். பின்னர் வழக்கம் போல காவல் துறையை லட்சியத் துறை என்று நம்பி வந்து சீரழிந்த காவல் துறையினர் போல, இவர்களும் அவர்களோடு சேர்ந்து வழிப்பறி செய்வது, அடித்துப் பிடுங்கிய காசில் கூத்தடிப்பது என சுகபோகமாக வாழ கற்றுக் கொண்டு விடுகின்றார்கள். இதனால் காவல் துறை கைநீட்டுபவர்களை அடிப்பது, சித்திரவதை செய்வது, ஆள்காட்டி வேலை பார்ப்பது, மாமூல் வாங்கித் தருவது, புரோக்கர் வேலை பார்ப்பது என காவல் துறையின் நகலாகவே மாறி விடுகின்றனர்.
தனக்குக் கீழ் அரசே ஓர் அடியாள் படையை நடத்திக் கொள்ள அனுமதி தருவதால், லத்தியை அவர்களிடம் கொடுத்துவிட்டு வேறு பல ‘முக்கிய பணிகளில்’ காவலர்கள் மூழ்கி விடுகின்றார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து பல இடங்களில் காவலர்களைப் போலவே கையில் தடியுடன் மக்களை அடித்து உதைத்தது இந்த நிழல் காவலர்கள்தான். தமிழக காவல் துறையின் இந்த யோக்கியதையை முற்போக்குவாதிகளைவிட ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிசக் கும்பல்கள்தான் நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றன. அதனால் மிக எளிமையாக இன்று தமிழகம் முழுக்க பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் தன்னுடைய ஆட்களை உள்நுழைக்க முடிந்திருக்கின்றது.
சாத்தான்குளம் படுகொலையில் காவல் துறையினருடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சேவாபாரதியைச் சேர்ந்த கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா என்ற நான்கு பேரும் ஈடுபட்டதாகவும், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இதை 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சங்கத்தின் மாநில நிர்வாகி லுார்துசாமி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக போலீசாருக்கு உதவியாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப் பட்டுள்ளன. அடையாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளன. இருவரின் உயிரிழப்புக்கும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஊழியர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தற்போது, காவல் நிலையங்களில் போலீசாருக்கு உதவியாக தன்னார்வலர்கள் பலர் பணியாற்றுகின்றனர். துாத்துக்குடி சம்பவத்தை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஊழியர்களுடன் தொடர்புப்படுத்தி வெளியாகி வரும் தகவல்களை மறுக்கின்றோம்" என்று கூறியுள்ளார்.
இவர் சொல்வது போல பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்றால் கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா என்ற இந்த நான்கு பேருக்கும் காவல் நிலையத்தில் என்ன வேலை என்பதும், அவர்கள் எதற்காக காவல் நிலையத்துக்கு வந்து மற்ற காவலர்களுடன் சேர்ந்து ஜெயராஜையும், பென்னிக்சையும் தாக்கினார்கள் என்பதும், அவர்களுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கும் என்ன தொடர்பு என்பதையும் அவர் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எங்கே உண்மை வெளியே தெரிந்தால் தமிழகம் முழுக்க காவல் துறையில் ஊடுருவி உள்ள தங்கள் வானரங்களின் பெயர்கள் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றது தமிழக அரசு.
டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி.எஸ். அவர்கள் 1993 ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது துவக்கப்பட்டதுதான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு. தற்போது இந்த அமைப்பில் 4000க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள நான்கு காவல் மண்டலங்களையும் சேர்த்து 1432 காவல் நிலையங்களிலும் தற்போது இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசார் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு அரசு சார்பாக எந்தவித ஊதியமும் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சம்பளம் வாங்கும் காவல் துறையே லத்தியை ஆசனவாயில் விட்டு கிழிக்கும் போது, இப்படி எவ்வித ஊதியமும் இல்லாமல் காவல் துறையினர் தரும் காசை மட்டுமே எதிர்பார்த்து சுற்றும் இந்தக் கும்பல், அவர்களை குஷிப்படுத்தி காசு கறக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும். நாட்டுக்கு சேவை செய்தே தீர வேண்டும் என்று லட்சிய தாகத்தோடு ஒருவன் திரிந்தால், அதை நிறைவேற்ற எவ்வளவோ வழிகள் உள்ளன. உழைக்காமல் அரசியல்வாதிகளோடு கூட்டு சேர்ந்து ஊரை அடித்து உலையில் போட்டு வயிறு வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்தான் காவல் துறையை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். காவல் துறை என்பது எந்த வகையான கட்டுப்பாடும் அற்ற அங்கீகரிக்கப்பட்ட வன்முறை அமைப்பாக இருப்பதால் அதன் மேல் ஒரு கிளர்ச்சி மனோபாவம் அரசியலற்ற அற்ப மனிதர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
பிரண்ட்ஸ் ஆப் போலீசை தன்னார்வலர்கள் என்றும், காவல் துறைக்கும் மக்களுக்குமான இணைப்புக் கண்ணி என்றும், சமூக ஆர்வலர்கள் என்றும் காவல் துறையினர் சாத்தான்குளம் படுகொலைக்குப் பின்பும் இன்னமும் கூச்சமே இல்லாமல் கூறி வருகின்றனர். ஒரு வேளை ஊரில் உள்ள பொறுக்கிகளுக்கும், ரவுடிகளுக்கும், புரோக்கர்களுக்கும், மத வெறியர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று பெயரென்றால், நாமும் அந்தப் பெயரிலேயே அவர்களை அழைப்பதுதான் அவர்களுக்கும் மரியாதை; அவர்களை ஆள்காட்டிகளாகவும், அடியாளாகவும் பயன்படுத்தும் காவல் துறைக்கும் மரியாதை.
தற்போது தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்கள் என்றால், பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு இந்த அரசு அடிபணிந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசின் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டுகின்றோம். அதே வேளையில் சாத்தான்குளம் படுகொலையில் தொடர்புள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் செயல்பட்ட அந்த ரவுடிகள் கைது செய்யப்படுவதோடு, அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக தமிழக மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் இந்தியா முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளை இயக்கி வருகின்றது. இப்படி பல்வேறு அமைப்புகளை அது இயக்குவதன் நோக்கமே, குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பித்துக் கொள்வதற்குத்தான். அதிகார வர்க்கத்தோடு கரம்கோர்த்து, மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதில் ஏறக்குறைய நூறு ஆண்டுகள் அநுபவம் பெற்ற கும்பல்தான் ஆர்.எஸ்.எஸ்.
தமிழகம் பார்ப்பன எதிர்ப்பு மரபின் தளப் பிரதேசமாக இருப்பதால் அதை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக பார்ப்பனியமும் அதன் அடிவருடிகளும் போராடி வருகின்றார்கள். கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். கடந்த பத்தாண்டுகளாக கோவை, சேலம், திருப்பூர், வேலூர் என பல இடங்களில் கலவரத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ் எப்படி முயன்றது என்பதை நாம் பார்த்துதான் வருகின்றோம்.
அதனால் தமிழக காவல் துறையில் பிரண்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் உள்நுழைந்திருப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டு தமிழகத்தை ஒரு அடிமை நாடாக மாற்றிய அதிமுக அடிமைகள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த செயல்திட்டத்திற்கு எல்லா வகையிலும் உதவி இருப்பார்கள். ஏற்கெனவே அதிமுகவில் பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தீவிரமான ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்பதால் இதில் நாம் சந்தேகப்பட எல்லா முகாந்திரங்களும் உள்ளன.
அதிமுக பிஜேபியாக மாறும் போது, காவல் துறை காக்கிகள் ஆர்.எஸ்.எஸ் காக்கிகளுடன் கைகுலுக்குவதுதானே தார்மீக அறம். எனவே தமிழக மக்கள் தங்கள் ஆசனவாய்களை தமிழக காவல் துறையிடம் இருந்து மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்-இடம் இருந்தும் வரும் காலங்களில் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டிய நிலை வரும்.
- செ.கார்கி