காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் ஆணையம் அமைத்ததை கர்நாடக அரசு ஏற்கமறுக்கிறது. கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்திலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் நாடாளுமன்றத்தில் விவாதமாக்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் மேல் முறையீடு செய்வோம் என்றும் அறிவித்திருப்பது பற்றிய தங்களுடைய கருத்து?

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஆணையத்தை எதிர்ப்பது குறித்த கருத்தைத் தீர்மானத்தில் அவர்கள் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தல் என்பது பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். தனித்த முறையில் முதலமைச்சர் நாடாளுமன்றத்தில் விவாதத்தைக் கிளப்புவோம் என்கிற கருத்தை வெளியிட்டிருக்கிறார். அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம் என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மேல் முறையீடு செய்வது, அதுவும் சட்ட ஆலோசகரிடம் கலந்தாலோசித்துவிட்டு மேல் முறையீடு செய்வது என்பதாகவே இருக்கிறது. ஆகவே அது பற்றி நமக்குக் கவலையில்லை.

pr pandianகர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்து வருகிறது. பருவகாலத்திற்குள் ஆணையம் அமைக்கப்பட்டு நீர் திறந்து விடப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரியைக் கர்நாடகத்தில் அரசியலாகப் பார்க்கிறார்கள். காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க வாக இருந்தாலும் சரி கர்நாடகாவிற்கு ஆதரவாகச் சட்டத்திற்கு விரோதமாகத்தான் செயல்படுகின்றனர். இந்தியா என்கிற நாட்டில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டது. தீர்ப்பை கர்நாடகா நிறைவேற்ற வேண்டும். அணைகள் கர்நாடகாவிற்குச் சொந்தம். அணைக்கு வரக்கூடிய தண்ணீரும் காவிரி நதியும் கர்நாடகாவிற்குச் சொந்தமில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டனர். தண்ணீரின் அளவைக் கணக்கிட்டு, இருக்கின்ற நீரைப் பிரித்துக் கொடுகின்ற அதிகாரம் ஆணையத்திற்குத்தான் இருக்கிறது. ஆணையம் தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா தடை செய்கிறது என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு. மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சரியான முறையில் இருக்கிறதா?

தமிழக அரசைப் பொறுத்த வரை சட்டரீதியிலான உரிமையைப் பெற வேண்டும் என்ற முடிவில் சரியான பாதையில் போகிறது. சில நேரங்களில் மந்தமான போக்கு நிலவினால் கூட சட்ட ரீதியாக நல்ல நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.

மற்ற அரசியல் கட்சியினர் குறிப்பாக எதிர்க்கட்சியான தி.மு.க. நடத்திய போராட்டங்களால் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கக் கூடிய பலன் பற்றி தங்களுடைய கருத்து?

காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒன்றாக நின்று ஒத்த கருத்தைக் கூறினோம். அதனால் எல்லா கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது. போராட்டங்களுடைய விளைவுதான் மத்திய அரசு ஆணையத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக அரசு ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாத நிலையில் நம்முடைய விவசாய அமைப்புகளின் செயல் திட்டங்கள் என்ன?

பிரச்சனைகள் தொடரும். பருவ மழை குறையும் போது பிரச்சனை வரத்தான் செய்யும். அப்பொழுது அரசு சட்டத்திற்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும். அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, கர்நாடக அரசாக இருந்தாலும் சரி. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் விவசாயிகள் தனித்த முறையில் போராடி வெற்றி பெற முடியாது. அரசியல் கட்சிகளோடு இணைந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும்.

தமிழ் நாட்டின் பங்கைக் குறைத்துக் கொண்டே சென்று, தற்போது 177.25 ஜிவிசி ஆக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பிரதிநிதியாக இந்த அளவு எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கும்?

போதுமானதில் 30% கூட இந்த அளவு இல்லை. மிகப் பெரிய துரோகம் தண்ணீரின் அளவைக் குறைத்தது. பல மாவட்டங்களில் காவிரி நீர்தான் குடிநீர். இருக்கின்ற நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் “காய்ச்சலும் பாய்ச்சலும்” முறையைக் கையாளுகிறோம். உரிய காலங்களில், கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அளவு நீரையாவது வழங்கினால் பருவமழையையும் எங்களுடைய சிக்கனமான முறையைப் பயன்படுத்தியும் சாகுபடியைச் சமாளிக்கலாம்.

காவிரி விவகாரத்தில் மற்ற மாநில விவசாயிகளின் நிலைப்பாடு என்ன?

கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவரிடம் பேசும்போது தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தருவதிலும் ஆணையம் அமைப்பதிலும் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்று தெரிவித்தார். கர்நாடக மாநில விவசாயிகளுடன் இணைந்து முயற்சிகளைத் தொடரலாம் என்று இருக்கிறோம். எங்களிடம் எந்த முரண்பாடும் இல்லை.

நேர்காணல்: மா.உதயகுமார்