நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றது. ஏற்கெனவே ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள் மத்திய அரசின் இந்த பொது விநியோகத் திட்டத்தில் இணைத்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வர வரும் 30-6-2020- வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ‘மோடி காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கக்’ காத்திருக்கும் எடப்பாடி அரசு தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தில் பயன்பெற்று வருபவர்களில் கணிசமானோரை அதில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தில் பல்வேறு மோசடியான தார்மீகமற்ற நிபந்தனைகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஓர் உறுப்பினராகக் கொண்ட குடும்பம், தொழில் வரி செலுத்துவோரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயியைக் கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், 4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், 3 அல்லது அதற்கு மேல் அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம் போன்றவற்றுக்கு இனி பொதுவிநியோக முறை மூலம் வழங்கப்பட்டு வரும் சலுகை நிறுத்தப்படும் எனத் தெரிகின்றது.
கடும் வறட்சியை சந்தித்து வரும் தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் மேல் அல்ல, 10 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் கூட விவசாயம் பொய்த்துப் போய் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் இருக்கும் நகர்ப்புறங்களுக்கு அத்துக்கூலிகளாக செல்லும் நிலைதான் தற்போது உள்ளது. விவசாயத்திற்கான இடுபொருள் விலை ஏற்றம், உற்பத்திப் பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமை, கடும் வறட்சி போன்றவற்றால் ஏற்கெனவே நிலத்தை எல்லாம் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிடம் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு விவசாயத்தை விட்டே வெளியேறிக் கொண்டு இருக்கும்போது அவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக இருந்த பொதுவிநியோக முறையில் அளிக்கப்படும் சலுகைகளை நிறுத்துவது அதை விரைவுபடுத்தவே உதவும்.
அதே போல 4 சக்கர வாகனம், ஏசி, மூன்று அறைகள் கொண்ட கான்கீரிட் வீடு, ஆண்டு வருமானம் 1 லட்சம் உள்ள குடும்பங்கள் போன்றவற்றிற்கு பொதுவிநியோக முறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்துவது என்பது இந்த அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் சலுகைகள் பெறுபவர்கள் அனைவரும் ஏதுமற்ற அன்னக்காவடிகளாக, அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சை எடுக்கும் நிலையிலும் இருக்க வேண்டும் என நினைக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இதன் மூலம் இந்த அரசு ஒட்டுமொத்தமாக பொதுவிநியோகத் திட்டத்தில் இருந்தே வெளியேறுவதற்கான சதியில் ஈடுபட்டிருப்பதாகவே தெரிகின்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சமச்சீரற்ற அசமத்துவமான வளர்ச்சியை எதிர்கொண்டிருக்கும்போது மத்திய மோடி அரசு இது போன்ற திட்டத்தைக் கொண்டு வருவதென்பது ஏற்கெனவே பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் மாநிலங்களின் அடிப்படை கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும். வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் நாட்டின் ஒட்டுமொத்த GDPக்கு செலுத்தும் பங்குக்கும், வளர்ச்சி அடையாத மாநிலங்கள் செலுத்தும் பங்குக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ளது போன்றது. அதே போல ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ளவர்களை எந்த அடிப்படையில் பிரித்து PDS-சை செயல்படுத்துகின்றது என்பது அந்தந்த மாநிலத்தின் உரிமையாகும். ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் பொளாராதார வளர்ச்சித் திறனுக்கு ஏற்ப BPL (வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்) மற்றும் APL (வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ) எனப் பிரித்து அதன் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை.
தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்த பொதுவிநியோகத் திட்டத்தை கூடுமான வரை பெரும் பொருட்செலவில் நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கும்போது பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்திற்கான மத்திய அரசின் உணவு தானிய ஒதுக்கீட்டின் 80 சதவீதம் கள்ளச் சந்தைக்கு திருப்பி விடப்பட்டதாக சமீபத்திய ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. 69 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் இந்தியா போன்ற அசமத்துவ வளர்ச்சி நிறைந்த நாட்டில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவது என்பதே மிகப் பெரிய வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் மக்கள், வளர்ச்சியடையாத மாநில மக்களின் சுமைகளை சுமப்பதாகவே இருக்கும்.
மத்திய மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்தத் திட்டம் என்பது அரசு பொதுவிநியோகத் திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உலக வங்கியின் உத்திரவுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும் சதியின் ஒரு பகுதியாகும். தற்போது எப்படி கேஸ் சிலிண்டர் மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு, மக்கள் சந்தை விலையில் முதலில் வாங்கிக் கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றார்களோ, அதே போல நாளை ரேசன் பொருள்களுக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் மக்களை அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவுப் பொருட்களை சந்தை விலையில் வாங்கிக் கொள்ள இந்த அரசு நிர்பந்திக்கப் போகின்றது. இதன் மூலம் உணவு தானியக் கொள்முதலில் இருந்து அரசு வெளியேறி, அந்த இடத்திற்கு இந்திய தரகு முதலாளிகளும், பன்னாட்டு பெருந்தொழில் கழகங்களும் வரப் போகின்றன. இவர்கள் நாளை ஒட்டுமொத்தமாக உணவு தானிய கொள்முதல் சந்தையை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டி அவர்களை மரணத்தை நோக்கி தள்ளப் போகின்றார்கள். ஏற்கெனவே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உலகமயமாக்கலுக்ப்கு பலி கொடுத்திருக்கும் இந்திய அரசு, இந்தத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக இந்திய விவசாயிகளை அழித்தொழிக்கப் போகின்றது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக இந்த அரசு சொன்னதன் உள்ளார்ந்த பொருள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு சாவதை இரட்டிப்பாக்குவதுதான்.
தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் ஏறக்குறைய முப்பத்தி அய்யாயிரம் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏறக்குறைய 2,04,26,547 குடும்ப அட்டைகள் பிணைக்கப்பட்டு 6,65,79,185 பேர் பயன்பெற்று வருகின்றார்கள். தமிழ்நாட்டில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருவது இதன் மூலம் தெரிகின்றது. ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தின் மூலம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் சேர்த்து மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் சுமை தமிழக அரசின் மீது விழும். பிகார், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் தமிழகத் தொழிலாளர்கள், இனி வருங்காலங்களில் அரசின் நியாயமற்ற விதிமுறைகளால் பொது விநியோகத் திட்டத்திலிருந்து விடுபட்டு, பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படப் போகின்றார்கள்.
மாநில மக்களின் உயிரைவிட மத்திய பாசிச மோடி அரசின் திட்டங்களை சிரமேற்கொண்டு செயல்படுத்துவதுதான் தங்களின் கடமை என நினைக்கும் ஓர் அடிமை அரசு தமிழகத்தை ஆட்சி செய்து வருவதன் வினையைத்தான் நாம் பார்த்து வருகின்றோம். தமிழ்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும், சுற்றுச்சூழலை நாசம் செய்யவும் திட்டமிட்டிருக்கும் மத்திய மோடி அரசின் பாசிசத் திட்டத்தின் ஒரு பகுதிதான் தமிழகத்தின் மீது ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தைத் திணிப்பதும். ஏற்கெனவே கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தையும், வறட்சியையும், விலைவாசி உயர்வையும், உழைப்புக்கேற்ற ஊதியமின்மையையும் சந்தித்து வாழ்க்கையே போராட்டமாக வாழ்ந்து வரும் தமிழக மக்களை கொஞ்சம் கூட இரக்கமின்றி கொல்லத் துடிக்கின்றது அடிமை எடப்பாடி அரசு. ஒரு பக்கம் தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளை திறந்து வைத்து, தமிழக மக்களின் வருமானத்தை சூறையாடி, அவர்களை மிக விரைவாக சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கும் தமிழக அரசு அதை இன்னும் விரைவு படுத்தவே பொதுவிநியோகத் திட்டத்தில் தற்போது கைவைத்துள்ளது.
ஊழல், அதிகார முறைகேடு, பார்ப்பன மற்றும் முதலாளித்துவ அடிமைத்தனம் இவற்றின் மொத்த உருவமாக எடப்பாடி அரசு திகழ்ந்து வருகின்றது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- செ.கார்கி