thirumavalan 350இந்திய நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பாதுகாப்புச் சட்டம் தான் எஸ்.சி./எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Prevention of Atrocities Act 1989) ஏற்கனவே நடைமுறையில் இருந்த இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை. இன்று ஒரு சதவீதம் கூட இந்த சட்டத்தை இந்த அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். முறையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இச்சட்டம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாநில அளவில் முதலமைச்சரை தலைவராகக் கொண்ட 25 பேர் கொண்ட குழு இருக்க வேண்டும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழக்குகளின் நிலை குறித்து ஆராய வேண்டும், மாவட்டங்கள் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள், சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் போன்ற வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் உள்ள விதிமுறைகள் எந்த ஒரு மாநிலத்திலும் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. உண்மை நிலை இவ்வாறு இருக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதியன்று நீதிபதி அ.கு.கோயல், வ.லலித் இவர்களைக் கொண்ட  அமர்வு தலித் மக்களின் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கும் அளவில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து அறிவித்திருக்கிறது.

அதன்படி அரசு ஊழியர் ஒருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை உடனடியாகக் கைது செய்யக்கூடாது என்றும் அரசு ஊழியர் என்றால் அவரின் நியமன நிர்வாகத்தில் அனுமதி பெற்ற பின்னரே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தலைமையில் உரிய விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் மேற்கொண்ட இத்திர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களான மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், டெல்லி உட்பட பல வட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி ‘பாரத் பந்த்” அறிவிக்கப்பட்டு தலித் அமைப்புகளை ஒன்று கூடி போராடினர். பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. நாடு முழுவதும் 12 பேர் கொல்லப்பட்டனர். முதலில் பலியானவர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாகக் கூறப்பட்டது. பின்னர் ஒரு தொலைக்காட்சி துப்பாக்கிச் சூட்டை பா.ஜ.க.வினர் நடத்தியதாக உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும்  அன்றைய தினம் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன.

ஏப்ரல் 16-ஆம் தேதி சென்னையில் எதிர்கட்சியினர் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மைய அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் வன்கொடுமைகள் தடுப்புச்சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சித் தலைவர்களான ஆசிரியர் கி.வீரமணி, தொல். திருமாவளவள், திரு. வை.கோ, திருநாவுக்கரசர், ஜவாகிருல்லா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வடமாநிலங்களில் நடைபெற்ற வீரியமிக்க போராட்டங்கள் தமிழகத்திலும் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தலித் மக்களிடையேயும், தலைவர்களிடையேயும் மேலோங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய தலித் தலைவர்கள் ஒன்று கூடி ஏப்ரல் 24 அன்று சென்னை பனகல் மாளிகையில் மாபெரும் எழுச்சிப் பேரணி நடத்துவது என தீர்மானித்தனர்.

திட்டமிட்டவாறு ஏப்ரல் 24 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணிக்காக ஆயிரக்கணக்கில் நீலக்கொடியை ஏந்தி பெண்களும் இளைஞர்களும், குழந்தைகளும் எழுச்சியோடு கலந்துகொண்டனர். நீல நிறக்கடல் திரண்டு வந்தது போன்றும், நீல நிற வானமே இறங்கி வந்தது போலும் எங்கு பார்த்தாலும் புரட்சியின்அடையாளமென நீல நிறமாகவேக் காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணி என்று குறிப்பிடுவதை விட அடக்குமுறைகளுக்கு தயாராகக் குவிக்கப்பட்டிருந்தனர். அவ்வப்போது காவல்துறை உயரதிகாரிகள் நேரத்தை நினைவுப்படுத்திச் சென்றனர். வலைதளப் பக்கங்கள் பேரணி பற்றிய செய்திகளால் நீல நிறமாகவே மாறியிருந்ததன.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பேசும்போது... வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தீர்ப்பைச் செல்லாததாக்க வேண்டும் என்றால் மோடி அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். எந்தக் காலத்திலும் இந்தச் சட்டத்தைச் சீண்டிப்பார்க்காத அளவுக்கு இதை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.

பிரதமர் மோடியோ இத்தீர்ப்பை ஆதரிக்க முடியாது என்கிறார். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்த முயற்சி நடந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அப்பட்டமான அநீதி. இது ஒரு வன்கொடுமை. இதை எதிர்த்து 500 மாவட்டங்களில் ராகுல் காந்தி போராட்டம் நடத்துகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை 9-ஆவது அட்டவணையில் இணைக்கத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர்களைக் கேள்வி கேட்காத பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திமுக-வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கேள்வி எழுப்புகிறார். அகில இந்திய அளவில் முலாயமோ, லாலுவோ, மம்தாவோ வடமாநிலத் தலைவர்கள் யாரும் இதனை எதிர்க்கவில்லை.

வடமாநிலங்களில் எந்தத்  தலைவரின் அழைப்புமில்லாமல் இலட்சக்கணக்கில் தலித் மக்கள் திரண்டனர். துப்பாக்கிச் சூட்டில் 12 பேரை கொன்றீர்கள். இளைஞன் ஒருவன் பட்டேல் சமூகத்தினரை லட்சக்கணக்கில் திரட்டி குஜராத்தில் போராட்டம் நடத்தினார். குஜ்ஜார் இன மக்கள் நான்கு நாட்கள் இரயிலை நிறுத்திப் போராடினர். ஒட்டு மொத்த இந்தியாவே துண்டாடப்பட்டது.

அப்போதெல்லாம் தடியடி, துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்பாவி ஏழை எளிய மக்கள் போராடினால் துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரைப் படுகொலை செய்திருக்கிறீர்கள். ஒரு சதவீதம் பேர்  கூட இச்சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. உண்மையில் நடைமுறைக்கே வராத சட்டத்தால் பாதிப்பு பாதிப்பு என அலறுகிறார்கள். எந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை?

வருமான வரிச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லையா? அமலாக்கப்பிரிவுச் சட்டம், ஐ.பி.சி. சட்டம், குடும்ப வன்முறைச் சட்டம் ஆகியன தவறாகப் பயன்படுத்தப்படவில்லையா? எந்தச் சட்டத்தை காவல்துறை முறையாகப் பயன்படுத்தியிருக்கிறது. நாங்கள் எந்த குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல... சாதி வெறிக்கு எதிரானவர்கள், மதவெறிக்கு எதிரானவர்கள் என்று பேசினார்.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் பேசுகையில்:

1949 முதல் 1955, 1984, 2012 என ஏறத்தாழ 60 ஆண்டுகள் மாறிமாறி வலுச்சேர்க்க வேண்டும் என வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 1989, வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை தனி நபரின் வழக்கிலே உச்சநீதிமன்றத்தில் இதை நீர்த்துப்போகச் செய்யும் அளவுக்கு தீர்ப்பு வழங்கியிருப்பது ‘‘வன்கொடுமை’’ என்று குறிப்பிட்டார்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பேசுகையில்,

தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பாகக் கொடுக்கப்படும் தீர்ப்புகள் சரியாக இருக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் யாரையும் எதையும் எதிர்ப்போம் எதிரடி கொடுப்பதே எம் வேலை என்றார்.

புரட்சிப்பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேசுகையில் :

மதுரை மேலவளவிலே ஏழு பேர் கொல்லப்பட்டனர். விழுப்புரம் கலவரம் நடந்தது, தர்மபுரி இளவரசன் விவகாரம் இதிலெல்லாம் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.

இது போன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் எஸ்.டி.கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர்.

முடிவில் ஆளுநர் மாளிகை வரை தலைவர்கள் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போதும், பேரணியின் போதும் இடையிடையே பறை இசை, வாள் வீச்சு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டுக்கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. ‘‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வஞ்சிக்காதே” என விண்ணை முட்டும் அளவில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலித் மக்கள் துப்பாக்கிகளுக்குப் பயப்படக்கூடியவர்கள் அல்ல. அரசியலையும் தாண்டி ஒன்று திரளக்கூடியவர்கள்  என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு சான்று. தலித் மக்களும் தலைவர்களும் அரசியலுக்காக ஆளுக்கொரு பக்கம் சிதறிக் கிடக்கிறார்கள் என எண்ணியிருந்த நிலையில், எல்லாக்காலத்திலும் நாங்கள் பிரிந்து கிடக்க மாட்டோம், சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் ஒன்றிணைவோம்  என சூளுரைத்து அமைந்ததாக இருந்தது இந்த எழுச்சிப் பேரணி....

தமிழ்நாட்டில் தற்போது தேவையினடிப்படையில் தமிழக தலித் தலைவர்கள், அமைப்புகள் ஒன்றிணைந்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் குறைய வேண்டுமானால் தலித் மக்களின் அரசியல் பலம் அதிகரிக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் தலித்துகள் வரவேண்டும்.

தலித் இயக்கங்கள் சிதறிக்கிடப்பது சாதிய சக்திகள் கொள்ளிக்கட்டைகளையும், வீச்சறிவாள்களையும் வீசுவதற்கு ஏதுவாக அமையும்.

பொது எதிரிகளை அடையாளங்கண்டு புரட்சிகரமான நீல நிறக் கொடிகளை பறக்க விட்டு காவிகளை இறக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தலித் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஒற்றுமைக்காக பல வருடங்கள் காத்திருந்தோம், இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்பது போன்ற குரல்கள் பேரணியில் கேட்க முடிந்தது.

செய்தித்தாள்களும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த மாபெரும் தலித் எழுச்சிப் போராட்டத்தை மறைக்க முயன்றாலும் வரலாறு இப்போராட்டத்தை தன் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் எழுதும்.       

Pin It