மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு 1924 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற சாவர்க்கர், அரசு நிபந்தனைக்கு உட்பட்டு மகராஷ்டிரம், ரத்தினகிரியில் தங்கி இருந்தார். அப்போது சில பணக்காரர்கள் உதவியுடன் 'பதித்பாவன்' என்ற கோயிலைக் கட்ட முன்முயற்சி எடுத்த அவர், கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அண்ணல் அம்பேத்கரை அழைத்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். *காரணம் கோயில் திறப்பு விழாவில் தீண்டப்படாதவர்கள் கலந்து கொள்வதனால்*
இதன்மூலம் சாவர்க்கரின் வரலாற்றாசிரியர் தனஞ்சய்கீர், அம்பேத்கரும், சாவர்க்கரும் இந்துசமுதாயத்தைச் சீர்படுத்தப் பாடுபட்டதாக சித்திரிக்க முயற்சி செய்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். தனஞ்சய்கீர் ஒரு சாவர்க்கரியவாதி என்கிறார் எஸ்.வி.ராஜதுரை.
சாவர்க்கரின் அழைப்புக் கடிதத்திற்கு (இக்கட்டுரையின் தொடக்கத்தில் காணும்) அம்பேத்கர் 18-02-1933 அன்று பதில் எழுதியிருக்கிறார். அந்தப் பதில் கடிதத்தில் அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார் :
"தாமோதர் ஹால்,
பரேல்,
பம்பாய்- 12,
18-2-33
அன்புள்ள சாவர்க்கர்,
ரத்னகிரிக் கோட்டையில் தீண்டப்படாதவர்களுக்கான கோயிலைத் திறக்க எனக்கு அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு மிகுந்த நன்றி. ஏற்கெனவே ஒத்துக்கொண்ட சில நிகழ்ச்சிகள் இருப்பதால் உங்கள் அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். எனினும், சமூகச் சீர்த்திருத்தப் பாதையில் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தீண்டப்படாதவர்களின் பிரச்சினை என்று நான் பார்க்கும் விஷயங்களை, உண்மையில் இந்து மதத்தை மறுகட்டமைப்புச் செய்வதோடு தொடர்புடைய கேள்விகளாகவே உணர்கிறேன். தீண்டப்படாதவர்கள் இந்துச் சமூகத்தில் ஒருங்கிணைய வேண்டுமென்றால், வெறுமனே தீண்டாமையை மட்டும் ஒழித்தால் போதாது, சதுர்வர்ணக் கோட்பாட்டையே ஒழிக்க வேண்டும். அல்லாமல் அவர்கள் இந்துச் சமூகத்தின் வெறும் பின்னிணைப்பாகவே இருப்பார்களென்றால் கோயிலைப் பொறுத்தவரை தீண்டாமை தொடரவே செய்யும். இதை உணர்ந்து கொண்ட வெகுசிலரில் நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தகுதி அடிப்படையில் சதுர்வர்ண உளறலை இன்னமும் போற்றும் உங்கள் தன்மை துரதிர்ஷ்டவசமானது. இருந்தும் சிறிது காலங்களுக்குப் பிறகு தேவையற்ற சேட்டையான இந்தப் பிதற்றலை நீங்கள் கைவிடுவீர்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துகள், உங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்.
உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்
(அம்பேத்கர் கடிதங்கள், காலச்சுவடு பதிப்பகம்-பக்கம்: 165)"
என்று சொல்லி இந்து மகாசபைத் தலைவர் சாவர்க்கர் அழைப்பை நிராகரித்தார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.
- எழில்.இளங்கோவன்