கோயபல்ஸ் உயிரோடு இருந்திருந்தால், இன்று பொய் சொல்வது என்பதில் மோடியிடம் அவர் கையேந்திப் பிச்சை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும்.

தான் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை எல்லாம் கொண்டு வந்து, ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் வங்கியில் போடுகிறேன் என்றார் மோடி.

இந்தப் பச்சைப் பொய்யை நம்பி வாக்களித்த மக்கள் மீது, தன் கையாலாகாத் தனத்தைக் காட்டி அவர்களை வீதியில் நிற்க வைத்து விட்டார் அதே மோடி, நவம்பர் 8ஆம் தேதி முதல்.

நாள் தோறும் பிரதமரும், ரிசர்வ் வங்கியும் மாற்றிமாற்றி அறிவிப்புகளை வெளியிட்டனர் ரூபாய் நோட்டுகள் குறித்து, எல்லாமே குழப்பங்கள்தான்.

25.12.2016 இன்று ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் மதிப்பில் பத்துத் தாள்கள் வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையாம்.

தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின் எப்போதும் பயன்படுத்தக்கூடியவை. அதை வைத்திருந்தால் தண்டனை என்பது அறிவுடமை.

தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள், தடை செய்யபட்ட நாளிலிருந்து செல்லாக்காசாகி விடுகின்றன. அவைகளை யாரும் பயன்படுத்த முடியாது. பிறகு அவற்றை வைத்திருந்தால் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன? இரண்டும் ஒன்றுதான்!

அவைதான் பயனற்றவை ஆயிற்றே. இதற்கா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை. இது அறிவுடமை அன்று.

இன்னொரு குழப்பமும் இருக்கிறது. டிசம்பர் 31ஆம் தேதியுடன் ரூபாய்த் தாளின் தடை நடைமுறைக்கு வருகிறது. மறுநாள் கையில் பணம் இருந்தால் கைதுதான்.

அப்படியானால் மார்ச் 31ஆம் தேதி வரை செல்லாத பணத்தை ரிசர்வ் வங்கியில் மாற்றலாம் என்று சொல்லும் அதே அறிக்கையின்படி, மார்ச் 31 வரை கையில் செல்லாப் பணம் வைத்திருக்கலாம் என்பதுதானே பொருள். பின் எப்படிக் கைது செய்ய முடியும்.

இது குழப்பம் அன்று. பைத்தியக்காரத்தனமான அறிக்கை, செயல்.

துக்ளக் ஆட்சி என்பார்கள். மன்னன் துக்ளக்கின் சிந்தனை சரியாக இருந்தது. செயல்படுத்திய முறைதான் குழப்பம் நிலவியது.

மோடி ஆட்சி என்றால் சிந்தனையும் இல்லை, செயல் முறையும் சரி இல்லை.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் சொல்கிறார் “மக்களுக்கோ உயிரின் வாதை.” இதுதான் மோடியின் ஆட்சி.

Pin It