கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாய் சொல்லி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மோடி தடை செய்ததும், அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய தொடர் போராட்டங்களும் அதன் இறுதி முடிவை நெருங்கிவிட்டதாகத் தெரிகின்றது. சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள், நாங்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று பெரும்பாலான எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டன; நாடாளுமன்றத்தையே நடத்தவிடாமல் முடக்கின. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தக் கட்சிகள் தங்களுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால் உண்மையில் அவை எதற்காகப் போராடின என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. அரசியல் கட்சிகள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்வதற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களைத் தவிர பெரும்பாலான எதிர்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மெளனம் சாதித்து வருகின்றன.

old man crying

 தமிழ்நாட்டில் கூட மோடியின் பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராக வாய்கிழிய எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் தற்போது அமைதியடைந்து இருக்கின்றன. இதில் இருந்தே இவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்பது நன்றாகத் தெரிகின்றது. எப்படி பெருந்தொழில் நிறுவனங்களும், இன்னும் சாராய வியாபாரிகள், மணல் மாஃப்பியக்கள், ரியல் எஸ்டேட் முதலைகள் போன்றவர்களும் முறைகேடான வழிகளில் ஈட்டப்படும் தங்கள் வருவாய்க்குப் போதிய கணக்குக் காட்டாமல் அவற்றை கருப்புப் பணமாக மாற்றுகின்றார்களோ, அதே போல இவர்களின் தொழிலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் தங்களது பெரும் நிதிக்கு எப்போதுமே முறையான கணக்குகளைக் காட்டுவது கிடையாது. 20000 ரூபாய்க்குக் குறைவான நன்கொடைகளுக்கு அதை அளித்தவரின் அடையாளத்தை சமர்பிக்க தேவையில்லை என்ற விதியைப் பயன்படுத்தி அவை முறைகேடான வழிகளில் பலநூறு கோடிகளை 20000-க்கும் குறைவாக ஒவ்வொரு நபரிடம் இருந்து பெற்றதாக கணக்குக் காட்டி மோசடி செய்கின்றன. ஆனால் அவை எப்போதுமே அந்தத் தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு சமர்பிப்பது கிடையாது. காரணம் அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்றதாக சொல்லும் நிதியில் பெரும்பகுதியை இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அழித்துக் கொண்டிருக்கும் அயோக்கியர்களிடம் இருந்தே பெருகின்றன. காங்கிரஸ் கட்சி தாங்கள் பெற்றதாக சொல்லும் நிதியில் 88 சதவீதம் தெரியாத மூலங்களில் இருந்து பெற்றதாக வருமானவரித் துறையிடம் தெரிவித்துள்ளது. முறையே பாஜக 78 சதவீதமும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 96 சதவீதமும் இதுபோன்ற யாரென்றே தெரியாத நபர்களிடம் இருந்தே நிதிபெற்றதாக குறிப்பிட்டுள்ளன. இது ஒன்றே போதும் இவர்களின் நேர்மையை நாம் தெரிந்துகொள்ள.

 இப்போது பிரச்சினை என்னவென்றால் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்வதற்கு முன்பாகவே பாஜக அது இருப்பு வைத்திருந்த தொகையில் கணிசமான பணத்தை மாற்றிவிட்டது. ஆனால் மற்ற கட்சிகள் தாங்கள் வைத்திருந்த பணத்தை மாற்றாமல் வைத்திருந்தன. மோடியின் திடீர் அறிவிப்பால் அவை தங்களிடம்  இருந்த பல நூறுகோடிகளை எப்படி மாற்றுவது என திணறிக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில் தான் அவை மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற போர்வையில் மோடிக்கும் எதிராக களம் கண்டன. அவர்களின் கோபமெல்லாம் “நீ மட்டும் பத்திரமாக உன்னுடைய பணத்தை மாற்றிவிட்டாய், நாங்கள் எல்லாம் என்ன தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போவதா” என்பதுதான். “ஒழுங்காக எங்களுடைய பணத்தை மாற்றுவதற்கு வாய்ப்பு கொடுத்துவிடு; இல்லை என்றால் எங்களுக்கும் அரசியல் பண்ணத் தெரியும்” என்று அவை எச்சரித்தன. மற்ற திருடர்களை ஒழித்துக் கட்டிவிட்டு தனிப்பெரும் திருடானாக உருவாக நினைத்த பிஜேபியின் இந்த அல்பத்தமான ஆசைதான் அதற்குப் பிரச்சினையைக் கொண்டு வந்தது.  அதுமட்டும் அல்லாமல் ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்ததற்குப் பின்னால் கடும் பொருளாதார நெருக்கடியும், வேலையிழப்பும், மக்கள் உயிரிழப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் நாய்களுடன் சண்டை போடுவதை விட, நாய்களுக்குத் தேவையான எலுப்புத் துண்டுகளை போடுவதே புத்திசாலித்தனமானது என்று யோசித்த மோடி அரசியல் கட்சிகள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வரி எதுவும் இன்றி டெபாசிட் செய்யலாம் என அறிவித்து நாக்கில் எச்சில் ஒழுக காத்துக் கொண்டிருந்த நாய்களை ஆற்றுப்படுத்தி உள்ளார்.

 இனி நாய்கள் தங்களுடைய குரைக்கும் ஒலி அளவை குறைத்துக் கொண்டே வந்து, இறுதியில்  வாலை சுருட்டிக்கொண்டு படுத்துக்கொள்ளும். கருப்புப் பணத்தை ஒழிக்கும் மோடியின் லட்சணம் இப்படி பல்லிளித்துக் கொண்டு கேவலமாக இருக்கும் போதே தனது அடுத்த கோமாளித்தனத்தை மோடி அரசு அரங்கேற்றி உள்ளது. கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தை மார்ச் 31 க்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து 50 சதவீத வரியுடன் அதை வெள்ளையாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த மானங்கெட்ட திட்டத்திற்கு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்று பெயராம். கேட்டாலே வயிறு வாயெல்லாம்  பற்றிக் கொண்டு எரிகின்றது. நூறுக்கும் மேற்பட்ட சாமானிய மக்களை கொன்று போட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை இன்றி நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, நாட்டு மக்களை சொல்லொண்ண துயரத்தில் ஆழ்த்திவிட்டு கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லாமல் திரும்பவும் முதலாளிகளின் காலை நக்கும் வேலையை மோடி அரசு செய்துள்ளது. மக்கள் எங்கே  “அப்புறம் என்னா மயித்துக்கு ரூபாய் நோட்டுக்களை தடை செய்தாய்” என கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி இங்கேயும் ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கின்றார். அது என்னவென்றால் இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையில் 25 சதவீத தொகை நான்கு ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் வைத்திருக்கப்படுமாம். அதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் இருந்து பாசனம், வீடு, ஆரம்பக் கல்வி போன்ற மக்கள் நலத்திட்டத்திற்குச் செலவு செய்யப்படுமாம். எவ்வளவு வக்கிரமும், கேடுகெட்ட சிந்தனையும் இருந்தால் மோடியால் இப்படி சொல்லமுடியும்?

  50 சதவீதம் வரிசெலுத்திவிட்டால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படாது என்று வருவாய் துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தெரிவித்து இருக்கின்றார். ஆக, ஒட்டுமொத்தமாக நாசாமாய்ப் போனவர்கள் சாமானிய மக்கள்தான். மோடியின் இந்த கேடுகெட்ட முட்டாள்தனமான அறிவிப்பால் அவர்கள் மட்டும் தான் பெரும் இழப்புகளை சந்தித்து இருக்கின்றார்கள். பணக்கார நாய்கள் பணத்தை வீசி எறிந்தாலே போதும், ஆளும்வர்க்க அயோக்கியர்கள் அவர்களை விட்டுவிடுவார்கள். பணம் இல்லை என்றால் நீங்கள் வங்கி வாசலிலும் ஏடிஎம் வாசலிலும் சாகத்தான் வேண்டும். உங்கள் வேலையை நீங்கள் இழந்துதான் ஆக வேண்டும் இது எல்லாம் இந்த நாட்டில் உள்ள வரி ஏய்ப்பு செய்யும்  நல்ல மனிதர்களுக்காக நீங்கள் செய்யும் தியாகங்கள்.  

கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்ணான பெரும் முதலாளிகளுக்கும் சலுகையை அளித்தாகிவிட்டது. அவர்களிடம் இருந்து கணிசமான தொகையை நிதியாகப் பெற்று மக்களின் ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் அரசியல் கட்சிகளுக்கும் சலுகையை அறிவித்தாகி விட்டது. பின் இந்தக் கருப்புப்பண போராளி எந்தப் பணத்தைப் பிடிக்க இந்த திட்டத்தை அறிவித்தார் என்பதை அறிவுள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தின் கடைசி கட்டம். அது வழக்கம் போலவே பெருமுதலாளிகளுக்கு சுபமாகவும், சாமானிய மக்களுக்கு சாபமாகவும் முடிந்திருக்கின்றது.

- செ.கார்கி