dictatorshipவாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வழி செய்யும் தேர்தல் சட்டத்திருத்த மசோதா, மக்களவை-மாநிலங்களவை, இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் கள்ள ஓட்டுகளைத் தவிர்க்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய, ஒன்றிய அரசைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இச்சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதில் முதன்மையானதாக 3 முக்கியப் பிரச்சினைகள் இருப்பதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகிறன. அவை:

  1. குடிமக்களின் அந்தரங்க உரிமை மீறல்;
  2. வாக்காளர் விவரக்குறிப்பு (voter profiling) செய்யப்படுதல்;
  3. அதன்மூலம் வாக்காளரின் அரசியல் பின்னணியைத் தெரிந்து கொண்டு, ஓட்டு உரிமையைப் பறிக்கும் அபாயம்.

 முதலாவதாக, குடிமக்களின் அந்தரங்க உரிமை தொடர்பாக ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் புட்டசாமி வழக்கின் தீர்ப்பு இருப்பதால், இது கட்டாயமாக்கப்படாது; வாக்காளரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண் இணைப்பு செயல்படுத்தப்படும்; இது கட்டாயமில்லை என்றும் ஒருவர் தகுந்த காரணங்களால் ஆதார் எண்ணைக் கொடுக்க முடியாவிட்டால் அவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு மறுக்க முடியாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இது நடைமுறையில் எப்படி இருக்கும் என்பது நாடறிந்த ஒன்றே. யாருக்கும் இது கட்டாயம் இல்லை என்றால், பிறகு எப்படி இவர்கள் கள்ள ஓட்டுகளைத் தவிப்பார்கள்? எனவே இது சமாளிப்பதற்கான காரணமாகவே இருக்கிறது.

வாக்காளர் பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தனியாக உள்ளன. தேர்தல் ஆணையமே அவற்றைச் சரிபார்க்கும் நடைமுறைகளை மேற்கொள்கிறது. அரசின் மற்ற தகவல்களிலிருந்து வாக்காளர் பட்டியல் விவரம் தனியாக உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர் பற்றிய விவரங்கள் ஆணையத்திற்கும் கிடைக்கும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நபரின் அரசியல் பின்னணியைத் தெரிந்து கொண்டு அரசியல் நோக்கத்தோடு அவர்களது வாக்குரிமை பறிக்கப்படலாம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மவுனமாகக் கடந்து சென்றுவிட்டது ஒன்றிய அரசு.

இந்த இணைப்பில் இன்னொரு பேராபத்தும் ஒளிந்திருக்கிறது. ஒரே நாடு, ஓரே தேர்தல் என்ற ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் திட்டத்திற்கு எளிதில் வகைசெய்யவும் இது பெரிதும் துணைபுரியும்.

வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கையைத் தனி நிகழ்வாகப் பார்க்க முடியாது. இது குடிமக்களின் அனைத்துத் தரவுகளையும் கைக்குள் வைத்துக் கொண்டு, அவர்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்ற உளவியல் உணர்வுக்குள் வைத்திருப்பதற்கான ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கைகளுள் ஒன்றுதான்.

இன்னொரு பக்கம், தனிநபர் அந்தரங்க தரவுப் பாதுகாப்புச் சட்ட மசோதா (The Personal Data Protection Bill, 2019), ஒன்றிய அரசுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்டு, அது இன்னும் சட்டமாக்கப்படாமல் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

உலகின் மற்ற நாடுகளில் எல்லாம் இப்படி அனைத்துத் தரவுகளையும் அரசு கைக்குள் வைத்திருக்கும் சட்ட ஏற்பாடுகள் இல்லை. தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுவாக இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கே ஒன்றிய அரசு, மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. மக்களைத் தொடர்ந்து தன்னுடையக் கண்காணிப்பிற்குள் வைத்திருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்கிறது.

மா.உதயகுமார்

Pin It