thiyaguகடந்த சனவரி 20 அன்று சுமார் 70 அமைப்புகள் ஒன்றுகூடி “பாசிச பாசகவை வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்ற முழக்கத்தை அறிவித்தன. இதன் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பின் ஒருங்கிணைந்த அமைப்புகள் “மக்கள் இயக்கங்கள்” என்ற பெயருடன் முன்னகர்ந்தன.

அடுத்தடுத்த மண்டலக் கூட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், பிப்ரவரி 7ஆம் நாள் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் உள்ளிட்ட தோழர்கள் ஓராண்டுக்கு முன்பு போடப்பட்ட பொய் வழக்கு ஒன்றில் ’ஊபா’ பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆயினும் இந்த கூட்டுச்செயல்பாடு முடங்கி விடவில்லை. ஈரோடு, தஞ்சை, மதுரை, கோவை என கலந்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன. பாசிச பாசக எதிர்ப்புப் பரப்புரையைத் தேர்தல் களத்தில் மேற்கொள்வதற்கு ஓர் உத்தியாக மக்கள் இயக்கங்கள் சார்பாக பாசக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

ஒருகட்டத்தில் பாசக 20 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியானது. வேட்பு மனுத் தாக்கலுக்கு வெறும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் இருந்தது. பாசக போட்டியிடும் 20 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், பாசிச கொள்கை கொண்டவர்கள் போட்டியிடுவனவற்றில் மக்கள் இயக்கங்கள் வேட்பாளர்களை நிறுத்த முயன்றது.

மார்ச் 17 அன்று சென்னையில் தியாகராய நகரில் மக்கள் இயக்கங்கள் சார்பாக நடத்தப்பட்ட எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் பாசிச பாசகவைத் தமிழக மக்கள் இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்தப் பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் தோழர் அருண் மாசிலாமணி உரையாற்றினார்.

ஆயிரம்விளக்கு:

பாசிச பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் செய்த 12 நாள் பரப்புரைக்கு மக்கள் தந்த பேராதரவு !

சென்னை மண்டலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதியில் பாசக வேட்பாளர் குஷ்பூக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் சார்பாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் பரிமளா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

மார்ச் 20ஆம் நாள் அன்று நேர்க்காணல் முடிந்தது. 23 முதல் ஆயிரம்விளக்கு தொகுதியில் ”பாசகவைத் ஏன் தோற்கடித்தாக வேண்டும்?” என்ற பரப்புரை தொடங்கப்பட்டது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 4 வரை பரப்புரை செய்யப்பட்டது.

தாமஸ் ரோடு, டாக்டர் கிரியப்பா சாலை, நமச்சிவாயபுரம், புஷ்பா நகர், கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், டிரஸ்ட் புரம், சூளைமேடு, செளராஷ்டிரா நகர், ஹபிபுல்லா சாலை, ஆர்.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரப்புரை செய்யப்பட்டது.

இவை பெரும்பாலும். அடித்தட்டு மக்கள் வாழக் கூடிய பகுதிகளாகும். அன்றாடம் பெண் தோழர்களின் பங்கேற்பு கணிசமாக இருந்தது. பரப்புரை தொடங்கிய உடனேயே “அரண் செய்” யூடியூப் சேனல் இந்த செய்தியை வெளியுலகம் அறியத் தந்தது.

31-3-2021 அன்று டாக்டர் கிரியப்பா நகர் பகுதியில் நடந்த பரப்புரையில் சைவ, கிறித்தவ, இஸ்லாமிய சமயப் பெரியவர்கள் கலந்து கொண்டு பாசகவை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்று விளக்கினர்.

தமிழ் சைவப் பேரவையின் தலைவர் திருமதி கலையரசி நடராஜன், அருட்தந்தை குழந்தைசாமி, இமாம் உலமாக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கமாலுதீன் மன்பஈ மற்றும் இமாம் முகம்மது யாகூப் பைஜி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அன்றைய பரப்புரை நிகழ்வு ‘ரெட் பிளிக்ஸ்” யூடியூப் சேனலில் வெளிவந்து பரவலான மக்களைச் சென்றடைந்தது.

பரப்புரையின் போது மக்களிடம் துண்டறிக்கை கொடுத்து ”பாசகவுக்கு வாக்களிக்காதீர்கள், குஷ்பூக்கு ஓட்டுப் போடாதீர்கள்” என்று சொன்ன போது, மக்கள் சொன்னவற்றில் சில:

“இலட்ச ரூபாய் கொடுத்தாக்கூட அவுங்களுக்குப் போட மாட்டோம்”

“அவுங்க வந்தா முழுக்க இந்திக்காரங்க வந்துருவாங்க”

“நாங்க போடவே மாட்டோம்”

“குஷ்பூவெல்லாம் வராதுப்பா..”

பாசக மீதான கோபத்தை மக்கள் இப்படிப் பலவிதமாக வெளிப்படுத்தினார்கள். விலைவாசி உயர்வு, 500 ரூ, 1000 ரூ செல்லாக் காசு அறிவிப்பு, சரக்கு சேவை வரி, தமிழர் வேலைவாய்ப்பு பறிப்பு, கொரோனா கால இரக்கமற்ற ஊரடங்கு முதலானவற்றின் காரணமாக மக்களிடம் பாசக மீது கடுங்கோபம் இருப்பதைக் காண முடிந்தது.

மேலும் நடுவண் பாசக அரசு அதிமுக தலைமையிலான தமிழக அரசை அடிமை போல் நடத்துகிறது, அதிமுகவை தன் விருப்பம் போல் வளைக்க முயல்கிறது போன்ற முன்வைப்புகள் அதிமுக ஆதரவாளர்களையும் கூட செவிமடுக்க வைத்தன.

ஹபிபுல்லா சாலையில் உள்ள ஆர்.கே.புரம் என்ற ஒரே ஒரு பகுதியில் மட்டும் பாசக மற்றும் அதிமுகவினரால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

சூளைமேடு F5 காவல்நிலையத்தினர் மட்டும் பிஜேபியை விமர்சிக்கக் கூடாது என்று நமக்குப் பாடம் எடுத்தனர். நம் பரப்புரைக்கு இயன்ற வரை இடையூறு செய்தனர். அப்பகுதியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசகவினருகு அந்தளவுக்கு அஞ்சி நடந்தனர்.

மொத்தத்தில், பாசக வேட்பாளர் குஷ்பூ வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதே கள நிலவரம். பாசகவை தேர்தலில் தோற்கடிப்பதில் இந்த 12 நாள் பரப்புரை ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஒருபுறம். பாசிஸ்டுகள் அச்சத்தை விதைப்பதன் மூலம் மக்களை வாய்மூடச் செய்யலாம் என்று நம்புபவர்கள்.

பாசிச பாசகவுக்கு எதிராக ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தெருக்களில் முகமறியாத இளைஞர் கூட்டம் “பாசகவை தோற்கடிப்போம், அம்பானிக்கு நாட்டை விற்கும் மோடி கட்சியை தோற்கடிப்போம், தமிழர்களுக்கு எதிரான பிஜேபியை தோற்கடிப்போம்” என்று முழங்குவது பாசிச பாசகவால் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சத்தைப் போக்கத் துணை செய்திருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

சங் பரிவார பாசிசத்திற்கு எதிரான நீண்டகாலப் போரில் 2021 சட்டப்பேரவை தேர்தல் என்பது முக்கியமான திருப்புமுனையில் நடந்த சமர் ஆகும். இதில் பகைவன் தோற்கடிக்கப்பட்டால் அது நீண்டகாலப் போருக்கான உத்திசார் வெற்றியாக அமையும்.

இந்த 12 நாள் பரப்புரை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் அடுத்தடுத்த களங்களைச் சந்தித்து முன்னேறிச் செல்வதற்கான ஊக்கத்தையும் பயிற்சியையும் இயக்கங்களிடையிலான நம்பிக்கையையும் செறிவான படிப்பினையையும் களத்தில் பணியாற்றிய உறுப்பு அமைப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பாசிச பாசக எதிர்ப்பு இயக்கத்திற்கான ஒருங்கிணைவை அடுத்தடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் காலக் கூட்டுச் செயல்பாடு உரமிடுவதாக அமையும். முன்னேறிச் செல்வோம்!

பரப்புரையில் பங்குபெற்ற அமைப்புகள்:

மக்கள் இயக்கங்கள், சென்னை மண்டலம்

(தமிழ்த்தேச மக்கள் முன்னணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சிபிஐ(எம்-எல்) செந்தாரகை (ரெட் ஸ்டார்), திராவிடர் ஒன்றிய சமத்துவக் கழகம், மக்கள் குடியரசு இயக்கம், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், வெல்பேர் பார்டி ஆப் இந்தியா)

ஆயிரம்விளக்குத் தொகுதியில் ததேவிஇ சார்பில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மகிழன் 12 நாள் பரப்புரையிலும் முழுமையாகக் கலந்து கொண்டார். கதிர். சதீஷ் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.

திருவையாறு:

திருவையாறு தொகுதியில் தோழர் அருண் மாசிலாமாணி மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து பாசிச பாசக எதிர்ப்புப் பரப்புரையில் தொடக்கமுதல் கடைசி வரை இயக்கத்தின் சார்பில் முனைப்புடன் பங்காற்றினார். மார்ச் 29ஆம் நாள் பரப்புரையில் தோழர் தியாகு பூதலூரில் பேசினார். அவர் பேசிச் சென்ற பின் அதே இடத்தில் பாசக வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தி எதிர் பரப்புரை மேற்கொண்டனர்.

கோவை தெற்கு:

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் இயக்கங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரப்புரையில் ததேவிஇ பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஏப்ரல் முதல் நாள் மூன்று தெருமுனைக் கூட்டங்களில் பேசினார். தோழர் சுதா காந்தி, பாரதி, ஆறுச்சாமி ஆகிய தோழர்களும் பரப்புரையில் தொடர்ந்து பங்கேற்றனர், பரப்புரையின் இறுதி இரு நாட்களில் தோழர் பாரதி கலந்து கொண்டு பல கூட்டங்களில் பேசினார்.

- தியாகு

Pin It