mk stalin 401தந்தை பெரியார் நினைவு நாளான நேற்று, அவர் சிலைக்கு மாலையணிவித்த தமிழ்நாடு முதலமைச்சர், தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி, பெரும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தருவதாக உள்ளது. அந்தச் செய்தி இதுதான் -

“ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவு நாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்!”

அதே போல, நேற்று மாலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழங்கிய ‘அம்பேத்கர் சுடர்’ விருதினைப் பெற்றுக் கொண்ட நம் முதல்வர், “திராவிட - அம்பேத்கரிய - பொதுவுடைமைக் கொள்கைகளின் வழித்தடத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பதே என் கடமை என நான் செயலாற்றுவேன்” என்று உறுதி கூறியுள்ளார்.

இவ்விரண்டு செய்திகளும் முதல்வர் விடுத்துள்ள சித்தாந்த முழக்கங்கள் என்றே கொள்ள வேண்டும்.

“திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காப்போம்” என்பது எவ்வளவு பெரிய செய்தி! மறைந்த நம் இனமானப் பேராசிரியர், “நான் தமிழன் என்னும்போது பெருமை கொள்கிறேன், திராவிடன் என்னும்போது உரிமை பெறுகிறேன்” என்பார்.

இந்தச் செய்திகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான், சமூகநீதி என்னும் உரிமையை, சமத்துவம் என்னும் மான உணர்வைத் திராவிடம் என்னும் சித்தாந்தத்தின் மூலம் ஒவ்வொரு தமிழரும் பெறுவதற்கு வழிவகை செய்வேன் என்கிறார் முதல்வர்.

அதே நேரம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம் ஆகிய முக்கூட்டுக் கொள்கையின் தேவையையும் அவர் உணர்த்தத் தவறவில்லை. கருப்பு, நீலம், சிவப்பு ஆகிய மூன்றும் வெறும் வண்ணங்களில்லை, சமூக மேம்பாட்டிற்கான எண்ணங்கள் என்பதும் முதல்வர் பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், திராவிடத்தின் உயர்வையும், சிறப்பையும் உணர்த்திக் கொண்டே இருக்கும் தளபதியார், பதவிகளில் மயங்கிக் கொள்கைகளை ஒருநாளும் இழந்துவிட மாட்டோம் என்பதை ஆரியக் கூட்டத்திற்கு அடிக்கடி நினைவுப்படுத்துகிறார்.

தளபதி அவர்களே, உங்களைத் தலைவணங்கி வாழ்த்துகிறோம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It