கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய நேரத்திலிருந்து, காட்சிகள் மாறும் நாடகம் போலே பல மாற்றங்கள் நடந்துகொண்டே இருந்தன. வாக்குகள் எண்ணப்பட்ட போது, தொடக்கத்தில் விரைந்து மேலேறிய பாஜக, பிறகு மெல்லச் சரியத் தொடங்கியது. இறுதியில், அறுதி பெரும்பான்மைக்கு 112 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், 104 இடங்களை மட்டுமே பாஜக பெற்றிருந்தது. கங்கிரஸ் 78 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. ஆக மொத்தம், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மஜத கட்சியின் ஆதரவு யாருக்கு உள்ளதோ, அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
சட்டென்று காங்கிரஸ் கட்சி ஒரு முடிவெடுத்தது. மஜத ஆதரவைத் தான் கோராமல், அக்கட்சி ஆட்சி அமைக்கத் தான் ஆதரவு தருவதாகக் கூறியது. 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த மஜத-வின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராக ஒரு வாய்ப்பு வந்தது. இறுதிக் காட்சி இங்கு முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் பாஜக விற்கு இதனை ஏற்க மனமில்லை. எப்படியாவது தான் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று கருதிய அக்கட்சி, தன் ஆசைக்கு ஜனநாயகத்தைப் பலியிட முடிவு செய்தது. ஆளுநர் இருக்கப் பயமேன் என்று கருதி, ஒரு புதிய பின் வாசல் கதவைத் திறந்தது.
காங்கிரஸ் தன் ஆதரவை மஜத கட்சிக்கு வெளிப்படையாக அறிவித்த பின்னும், சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மை உள்ள கட்சி என்னும் அடிப்படையில் ஆளுநர், பாஜக வை ஆட்சி அமைக்க அழைத்தார். அதில் கூட ஒரு ஜனநாயக மரபு இருக்கிறது. ஆனால் அதற்குப் பின், பெரும்பான்மை இல்லை என்று வெளிப்படையாகத் தெரியும் நிலையில், பெரும்பான்மையை மெய்ப்பிக்க 15 நாள்கள் கால இடைவெளி வழங்கப்பட்டதே, அங்குதான் ஜனநாயகத்திற்கான புதைகுழி வெட்டப்பட்டது.
15 நாள்களில் 104 எப்படி 112 ஆகும்? 10 குதிரைகளையாவது காசு கொடுத்து வாங்கினால்தான் ஆகும் என்று ஆளுனருக்குத் தெரியாதா? அப்படி ஒரு குதிரை பேரம் நடப்பதற்கு மறைமுகமாக ஆளுநரே வழி செய்வதுதான் ஜனநாயகமா? ‘ஊழலற்ற பாஜக’ என்று பெருமை பீற்றிக்கொண்ட பாஜக வின் பொய் வேடம் இங்கு கலைந்து போயிற்று.
உச்சநீதி மன்றத்தின் தலையீட்டால் இன்று ஜனநாயகம் கர்நாடகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது. கடைசி நிமிடம் வரையில் காத்திருந்து பார்த்துவிட்டு, இனி ஏதும் வாய்ப்பில்லை என்று ஆனபிறகு, எடியூரப்பா பதவி விலகி உள்ளார். எனினும் இத்துடன் பாஜக தங்கள் ‘தகிடுதித்தங்களை’ நிறுத்தி விடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. அடுத்த கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை அவர்கள் தொடரவே செய்வார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயல்வதும் அவமானம். விலை போவதும் அவமானம்.