கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திவிகவின் சமூக ஊடகப் பொறுப்பாளர் தோழர் பரிமளராசன் அவர்களின் மறுப்புக்கு பதில்!!

தேர்தல் முடிவுகள் பற்றிய அலசல் / அரசியல் கருத்துக்கள் / மதிப்பீடுகளுக்கான என்னுடைய மறுப்பை, 'அவதூறு' என்று கருதியது தவறு.

அதுவும், ஒட்டுமொத்த முற்போக்கு அமைப்புகள் மீதும் பொதுவாக நான் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல் / ஆற்றாமையை திவிக மீதான தனிப்பட்ட 'அவதூறு' என்று கருதியது மிகப்பெரிய பிழை. திவிகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதால் மட்டுமே என்னுடைய பதிவு தனிப்பட்ட திவிக மீதான அவதூறு என்று கருதியது எவ்வகையில் சரி/நியாயம் என்பது புரியவில்லை. திவிக மீது 'அவதூறு' பரப்பும் கடைசி ஆளாக நானாகத் தான் இருப்பேன். மேலும், திமுக மீது எனக்கு வெறுப்பா, பாசமா என்பதற்கும் என்னுடைய பதிவின் நோக்கத்துக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதுதான் உண்மை. மேற்கொண்டு இதைப் பற்றி விளக்கமளிக்க ஒன்றுமில்லை.

முற்போக்கு அமைப்புகள் மீதான விமர்சனங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்திய விதம் தவறாக இருக்கிறது, பயன்படுத்திய வார்த்தைகள் சரியல்ல என்பதை நான் ஏற்கிறேன். இவ்விதமான வெளிப்பாடு என்னுடைய கருத்துக்களின் நோக்கத்தை சீர்குலைப்பதாக அமைவதால் அவ்வாறான எழுதுதலை மாற்றிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். எழுதிய பதிவில் என்னுடைய நடை மற்றும் நான் பயன்படுத்தியிருந்த சொற்கள் பொதுவாகவே அனைவரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமும் தடையும் துளியளவும் இல்லை.

இப்போது விடயத்துக்கு வருவோம்.

தோழர் பரிமளராசன் அவர்கள் மட்டுமல்ல, பாஜக 11% வாக்கு பெற்றுள்ளது என்பதையும், பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது என்பதையும் ஏற்க மறுக்கும் தோழர்களுக்கு....

கீழே இருக்கும் அட்டவணை மற்றும் தேர்தல் தொடர்பான பிற புள்ளிவிவரங்கள் இணைப்பு - https://en.wikipedia.org/wiki/2024_Indian_general_election_in_Tamil_Nadu . கீழே கொடுக்கப்பட்டிருக்கும் துல்லியமான புள்ளி விவர அட்டவணையை சரியாகப் புரிந்து கொண்டாலே தெரியும், பாஜக பெற்ற வாக்கு சதவீதம் என்னவென்பது.tn election results 700

1. பாஜக பெற்ற வாக்கு சதவீதம் பாஜக பெற்றது அல்ல, அதன் கூட்டணியில் இருக்கும் பாமக மற்றும் ஒன்றிரண்டு சாதிக் கட்சிகளுக்கு விழுந்த வாக்குகள் என்று கூறுவது எவ்வளவு பெரிய பிழை என்பது மேற்கண்ட புள்ளிவிவர அட்டவணையினை அலசி ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும். NDA கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு சதவீதம் பெற்றிருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த NDA கூட்டணியும் பெற்ற வாக்குகள் 11% என்று நினைத்து, அதில் பாமக ஓட்டு, சாதி ஓட்டுக்கள் இருப்பதாக வாதம் செய்கின்றனர். அது தவறு. ஒட்டுமொத்த NDA கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 18.28%. இந்த 18% வாக்குகளில் தான், நீங்கள் கூறும் அனைத்து சாதி வாக்குகள் அடக்கம். எனவே 11% என்பது பாஜக மட்டுமே பெற்ற வாக்குகள் தான் என்பது தான் உண்மை. மேலும் பாமக வின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதமே 4 முதல் 5% தான். எந்தத் தேர்தலிலும் அவர்கள் அதைத் தாண்டியதில்லை. இவ்வகையில் பார்த்தால் பாமகவின் வாக்குகளைத் தாண்டி ஆறு சதவீதம் வாக்குகளை பாஜக அதிகமாகப் பெற்றிருக்கிறது என்று கூறலாமா? பாமக தவிர அந்தக் கூட்டணியில் இருந்த ஒன்றிரண்டு சாதி அமைப்புகளுக்கு அந்ததந்த தொகுதியைத் தாண்டி செல்வாக்கு இல்லை. இவையெல்லாம் சேர்ந்துதான் 11% வந்தது என்று கூறுவது நேர்மையா?

2. இதற்கும் மேல், உங்கள் வாதத்தின் அடிப்படையில் பாஜக பெற்ற 11% ஓட்டில், பாமக ஒட்டு மற்றும் சாதி ஓட்டுக்கள் அடங்கியிருப்பது உண்மை என்றால், திமுக பெற்றிருக்கும் 26.9% வாக்குகளில் அதனுடைய கூட்டணிக்காக விழுந்த வாக்குகளும் அடக்கம் என்று கருதலாமா? அதாவது திமுக என்ற தனி கட்சிக்காக விழுந்த ஓட்டு வெறும் 15% என்று கருதலாமா? இது சரியென்றால் உங்களுடைய வாதமும் சரி. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும், அத்தொகுதியில் வசிக்கும் பிரதான சாதிக்கான, சாதிப் பிரதிநிதியை வேட்பாளராக நிறுத்தும் பழக்கம் திமுகவில் அறவே இல்லை என்ற பொய்யை கூறிக் கொள்ளலாமா? சாதிக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் என்ன? சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை அறிவித்தால் என்ன? இரண்டும் ஒன்று தானே?அப்படியென்றால் சாதி ஓட்டுக்கள் திமுக வாக்கு சதவீதத்திலும் அடக்கம் தானே. உங்களுடைய வாதம் சரியென்றால் இதுவும் சரி என்று எடுத்துக் கொள்ளலாமா?

3. பாஜக பெற்ற 11% வாக்குகளில் 60-70% வாக்குகள் இளையோர் வாக்குகள் என்றுதான் குறிப்பிட்டேனே தவிர, தமிழகத்தின் ஒட்டுமொத்த இளையவர் வாக்குகளில் 60-70% வாக்குகளை பாஜக பெற்றுள்ளது என்று நான் குறிப்பிடவில்லை. இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இளையோருக்கு முந்தைய தலைமுறையினர் எவரும் பாஜக-வுக்கு வாக்கு செலுத்த வாய்ப்பே இல்லை (அதுவும் தமிழகத்தில்) என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. அது என்ன என்று தெரியவில்லை, தோழர்கள் கோவையில் 2014இல் சிபி ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்கு சதவீதத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லி, அதே தொகுதியில் அண்ணாமலை இப்போது அத்தனை வாக்குகள் பெறவில்லை என்று ஒரே ஒரு தொகுதி நிலவரத்தை மட்டும் ஒப்பீடு செய்து வாதமாக வைப்பது மட்டும் மிக அதிகமான தேர்தல் அரசியல் அறிவா?

4. பாஜக ஓட்டு சதவீதம் மட்டுமல்ல, நாம் தமிழர் ஓட்டு சதவீதம் அதைவிட ஆபத்தாக வளர்ந்திருக்கிறது. எவ்வாறு ஆபத்து என்றால், அவர்கள் ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை, யாருடனும் கூட்டணியும் இல்லை. எனவே அவர்கள் பெற்றிருக்கும் 8% ஓட்டு என்பது அவர்களுக்கே உரித்தான ஓட்டு. மேலும், அக்கட்சிக்குத் தொடர்பில்லாத நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவர்கள் இத்தனை சதவீதம் பெற்றுள்ளார்கள் என்பதும் அனைவரின் சிந்தனைக்கானது. தந்தை பெரியார் மீது அவதூறு பரப்புவதை நாம் தமிழர் பொதுத்தளத்தில் மட்டும் நிறுத்திக் கொண்டதால் அவர்களுடைய சாதிவெறி, இனவாதம், போலி தமிழ்த்தேசியம், தூய்மைவாதம் ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இவர்களுடைய வளர்ச்சியையும் ஏற்றுக் கொள்ளலாமா? "இல்லை, இது அவர்களுக்கு விழுந்த ஓட்டு அல்ல, இதில் வேறு ஓட்டு இருக்கிறது, இது அந்த எதிர்ப்பில் வந்தது, இது இந்த விடயத்தால் வந்தது" என்று இதற்கும் விளக்கம் கொடுத்து நம்மை நாமே denial இல் வைத்துக் கொள்ளப் போகிறோமா? இதுவும் விவாதத்துக்கு உட்பட்டதுதான். மேலும், கடந்த தேர்தலைவிட எவ்வாறு திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என்பதும், பாஜக, நாம் தமிழர் வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதும் தெளிவாக மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது (கீழிருக்கும் படத்தில் தேர்தல் வருடங்கள் வாரியான comparision).tn election results 701

5. மேலும், தோழர்கள் தெரிவிக்கும் இன்னொரு கருத்து "பாஜக களத்தில் இல்லவே இல்லை, எனவே இது அவர்களுக்கு விழுந்த ஓட்டு அல்ல" என்பது. பாஜக-வின் 'களம்' என்பது நாம் நினைக்கும், நாம் களமாடும் "conventional ground work" அல்ல. எந்தப் பகுதியில் சென்று பார்த்தாலும் அவர்களுடைய கொடிக் கம்பம் இருக்காது, தொண்டர்கள் இருக்க மாட்டார்கள், அலுவலகம் இருக்காது, எதுவும் இருக்காது. தேர்தல் பிரச்சாரக் களத்தில் கூட அவர்களைக் காண முடியாது. எனவே பாஜக கண்ட 'களம்' என்பதற்கு அர்த்தம் முற்றிலும் வேறு. எந்தக் களத்தில் களம்கண்டு அவர்கள் இத்தனை வளர்ச்சி பெற்றார்கள் என்றால்,

பாஜக-வின் களம்:-

a) visual media - tv news channels

b) social media - முதன்மையாக youtube, மற்றும் இதர

c) print media - newspapers (பார்ப்பன)

d) மேற்கொண்ட அனைத்து ஊடகங்களிலும் தீவிரமாக promote செய்யப்பட்ட, மிக அதிகளவிலான பாஜகவின் "Press Meets" - இந்த press meet-களில் அண்ணாமலை தன்னை எதிர்க்கட்சியாகப் பாவித்து திமுகவுக்கு எதிராக செய்த எதிர்க்கட்சி வேலைகள்/ கேள்விகள்/ வாதங்கள் மற்றும் பாஜக-வின் திமுகவுக்கு எதிரான அறிக்கைகள்.

இக்காலத்தில் அனைவரிடமும் கைபேசி இருப்பதால், மேற்கண்ட அனைத்தும் அவரவர் கைபேசியில். பாஜக-வின் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிட்டது. ஒரு சொட்டு வியர்வை சிந்த வேண்டியதில்லை. இளையோரின் polarization இவ்வாறுதான் மிகச் சுலபமாக நடந்தேறியுள்ளது. print media கூட அவசியமில்லை. கைபேசியில் youtube போதும்.

6. இப்போதும் திமுக கோவையில் நடத்திய முப்பெரும் விழா பற்றி, அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே அண்ணாமலை, முப்பெரும் விழாவை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். link - https://news7tamil.live/dmk-tribune-festival-a-festival-used-for-vain-advertising-annamalai-review.html#google_vignette
வழக்கத்துக்கு மாறாக கோவை மாவட்டப் பிரச்சனைகள், தொழிலாளர் பிரச்சனைகளை பட்டியலிட்டிருக்கிறார் (என்னமோ பாஜக-வுக்கு உண்மை அக்கறை இருப்பது போல). நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பாஜக தன்னை எதிர்க்கட்சியாகப் பாவித்து ஆளும்கட்சியை கேள்வி கேட்பதாக அமைத்திருக்கிறது அந்த அறிக்கை. இந்த பாஜக அறிக்கையினுடைய எதிரொலி, முப்பெரும் விழாவில் அப்படியே வெளிப்பட்டது. மண்ணின் மைந்தரான கொங்கு ஈஸ்வரன், கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையையும், தேர்தல் வெற்றியையும் மட்டுமே பறைசாற்றி இருக்க வேண்டிய மேடையில், "கொங்கு மண்டலம் தொழில்கள் நிறைந்தது, தொழிலாளர்கள் நிறைந்தது. இங்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே இந்த மாவட்டத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி சிறப்பு நிதி ஒதுக்கி பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்" என்று முழங்கினார். இது அண்ணாமலை அறிக்கையின் தாக்கம். இல்லையென்றால் அந்த மேடையில் அந்த அறிக்கையைப் பிரதிபலிக்கும் விதமாக இக்கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் கொங்கு ஈஸ்வரன் அவர்களுக்கு என்ன வந்தது? கொங்கு மண்டலப் பிரச்சனைகளை பேசுவதற்கான மேடை அதுவல்லவே. அவர் பேச்சு பல youtube channel-களிலும் இருக்கிறது. இதுதான் பாஜக அண்ணாமலை கொடுத்த அறிக்கைக்கான impact. இதுதான் பாஜக-வின் களம்.

7. திமுகவுக்கு கண்மூடித்தனமாக ஆதரவாக இருப்பதா அல்லது critical ஆக இருக்க வேண்டுமா, இது நேரடியாக பாஜக-வின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதே என்பதை சுட்டிக் காட்டுவதும், அதைப் பற்றி சிந்திக்க வைப்பதும் என்னுடைய முந்தைய பதிவின் நோக்கமாக இருந்தது. ஏதோ தனிப்பட்ட திவிகவின் திமுக ஆதரவு பற்றிய விமர்சனம், 'அவதூறு' அல்ல. தேர்தல் முடிவுகளை முற்போக்காளர் அலசும் விதம் கண்மூடித்தனமானது என்று நான் சாடியதும், பாஜக வளர்ந்திருக்கிறது என்ற எதார்த்தத்தைக் கூறுபவரை, எந்தத் தரவும் இல்லாமல் எழுதுகிறார், கற்பனை செய்கிறார், முக்கியமாக அறிவில்லை என்று கூறுவது, பெரியாரிஸ்டுகள் / முற்போக்காளர் மட்டும் தான் இந்த உலகத்திலேயே மிகப் பெரிய அறிவாளிகள், மிகவும் exclusive என்று காட்டுவதாகவும், பெரியாரிஸ்டுகளை விமர்சனம் செய்யுமளவுக்கு வேறு யாருக்கும் அறிவில்லை, சக முற்போக்காளருக்குக் கூட அறிவில்லை என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான எண்ணம்!! இன்னும் ஒரு படி கீழே இறங்கி, ஐயா, அய்யா என்ற ஏதுமற்ற, வாதத்துக்கு தொடர்பற்ற தமிழ் பிழைகளை சுட்டிக்காட்டி ஏளனம் செய்வது, உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொண்டதாகும். இது தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் அரசியலுக்குமே எதிரானது. என்னுடைய பதிவில் இருப்பது உள்ளக்குமுறல்/ஆதங்கம், பாஜக வளர்வதை ஏதேனும் செய்து தடுத்து விட மாட்டோமா என்கிற வேட்கை. அதை நான் வெளிப்படுத்திய முறை தவறாக இருந்தாலும் நோக்கம் தெளிவு. நீங்கள் அதற்கு மறுப்பாக பதிவு செய்திருப்பது ஏளனம் மட்டுமே!!

8. அப்பதிவை எழுதியதுடன், களத்தில் மிகத் தீவிரமாக பாஜக மற்றும் நாம் தமிழர் (இது போதாதென்று விஜய் கட்சி வேறு வேண்டுமென்றே ஊதிப் பெருக்கப்படுகிறது) வளர்வதைத் தடுக்க எவ்வாறான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே பார்ப்பனப் பேச்சாளர்களும், அதன் ஊடகங்களும் "இனிமேல் தேர்தல் களம் திமுக vs பாஜக " என்ற narrative-வை வெளிப்படையாக அறிவித்து, அதையே திரும்பத் திரும்ப அழுத்தமாகப் பதிய வைத்து பயணித்தனர். இந்த நோக்கத்தினை வென்றெடுக்க அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடத் தயாராக இருப்பார்கள், அதுதான் அவர்களுடைய வரலாறு (the're radicals and the're marathon runners). எனவே அதற்கு எதிராக, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எந்த தீய சக்திகளெல்லாம் தேர்தல் களத்தில் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும், எவருடனெல்லாம் கூட்டணி வைத்துக் கொள்ளவே பிறர் அச்சப்பட வேண்டும் என்ற narrative-வை தீர்மானிக்கும் சக்தியாக முற்போக்கு கட்சிகள், அமைப்புகள் இருக்க வேண்டும் என்று கருதினேன். 'தமிழக தேர்தல் முடிவுகள் அலசல் ஆலோசனை கூட்டம்' நடத்தப்பட்டு, இதற்கான முன்னெடுப்புகளுக்கான திட்டங்கள் strategy வகுக்கப்படலாம் என்றெல்லாம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பாஜக வளர்ந்து விட்டதா, இல்லையா என்பதே விவாதமாக ஆகும் என்பதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதீதமான பாஜக எதிர்ப்பு தேவைதான், ஆனால், அக்கட்சி வளர்த்திருப்பதையே ஏற்க மறுத்து, strategy changeக்கு கூடத் தயாரில்லாத அளவுக்கான கண்மூடித்தனமான denial பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

- தேன்மொழி