பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார். டில்லி சென்றார். அமித்ஷா சென்னை வந்தார். அதிமுக-பாஜக கூட்டணியை அறிவித்தார். பக்கத்தில். பேசாமல் உட்கார்ந்து இருந்தார் திருவாளர் எடப்பாடி.
அப்போது " *2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். தமிழ்நாட்டில் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்.* எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைகிறது..." என்று அமித்ஷா பேசியது நாளிதழ்களில் வந்துள்ளது.
அப்போது அமைதிச் சாமியாராக இருந்த எடப்பாடி இப்போது பதறிப்போய், 'கூட்டணி ஆட்சியென்று அமித்ஷா கூறவில்லை, தேர்தல் கூட்டணி என்றுதான் சொன்னார்' என்று சொல்கிறார்.
ஏனிந்த பதற்றம்? ஏனிந்த குழப்பம்? ஏனிந்த தடுமாற்றம்? பாஜக கூட்டணிக்கு முன்னர் சட்டமன்றத்தில் ஒன்றிய வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்த முதல்வரின் தீர்மானத்தை ஆதரித்தார் எடப்பாடி. ஆனால் கூட்டணிக்குப் பின் பேரறிஞர் அண்ணாவின் கொள்கையான மாநில சுயாட்சி குறித்தத் தீர்மானத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார் அவர்.
அண்ணா பெயரில் கட்சி வேண்டும், அண்ணா பெயரில் கொடி வேண்டும், அவைகளைக் காட்டி ஓட்டு கேட்க வேண்டும். ஆனால் அண்ணாவின் கொள்கையான மாநில சுயாட்சி, மாநில உரிமையைத் தூக்கி வீச வேண்டும். ஓ! இதுதான் ராஜ விசுவாசமா!
சாராயக் கடைகளையும், மந்திரிகளை நீக்கு என்று உலுத்துப்போன போராட்டங்களை நடத்தும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராட வரமறுக்கிறார்.
ஒரு பக்கம் கட்சித் தலைமைப் பதவி பறிபோய் விடக் கூடாது. மறுபக்கம் செங்கோட்டையன் குழிதோண்டுவதாகத் தகவல். இதற்கு நடுவில் 'முதலாளி' அமித்ஷாவின் குடைச்சல் வேறு! என்னதான் செய்வார் எடப்பாடி? தாமரைப்பூவும், இரட்டை இலையும் வாடிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து உதிக்கப் போகிறது உதயசூரியன் ஆட்சி.
- கருஞ்சட்டைத் தமிழர்