nirmalasitharamanbudget 21மிகுந்த ஆரவாரத்தோடு தாக்கல் செய்யப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காற்றடைத்த பலூனாக கிழிந்து மத்திய பாஜக அரசின் கையாலாகாத தனத்தையும், கார்ப்பரேட் மீதான அதன் கரிசனத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக என்று நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட் தான் ஒருவேளை இந்தியாவில் கோடிக்கணக்கான அடிதட்டு, விளிம்புநிலை மக்களின் எதிர்காலத்தை அழிக்கும் வரலாற்றை படைக்கப் போகிறதோ என்னவோ?

நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் மீதான நேரடியான தாக்குதலாகவே இந்த பட்ஜெட்டை பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் உழைக்கும் வர்க்கம் மீள முடியாத வறுமைக்குள் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர்களை மீட்க முடியாவிட்டாலும், குறைந்தபட்ச உதவிகளையாவது இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தனையையும் புறந்தள்ள கார்பரேட்டுகளின் நலன்களுக்காகவே இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் எதிர்கால முதலீடு எனப்படும் குழந்தைகள் நலன்கள் மீதான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் வேலையின்மை போன்றவற்றால் அவதிப்படும் குடும்பங்கள் முதலில் கை வைப்பது பெண் குழந்தைகளின் வாழ்க்கை மீது தான் என்பது நிதர்சனமான உண்மை.

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் போன்றவற்றை களைய வேண்டிய அரசு அதனை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் நலனுக்கான நிதியை குறைத்திருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 900 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சியில் 2010-11 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 4.06 விழுக்காடு நிதி குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 2.46 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 விழுக்காட்டில் இருந்து 74 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டு மக்களைத் தவிர அனைத்து துறைகளும் விற்பனைக்கு வந்துவிட்டன.

பொன்முட்டை இடும் வாத்து என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மரணத் தறுவாயில் போராடிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கேனும் நிலை நிறுத்தி வந்த பொதுத்துறை வங்கிகள் தனியாரிடம் விற்கப்பட போகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு அரசுகளால் சிறுக சிறுக கட்டியெழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் ஒரே மூச்சில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட உள்ளன.

பாஜகவின் ஆட்சி முடியும் போது பாராளுமன்ற கட்டிடம் மட்டும் தான் பாக்கி இருக்குமா இல்லை அதுவும் ரிலையன்ஸின் போர்டு மீட்டிங்கிற்கு வாடகைக்கு விடப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒருவேளை அடுத்து வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை சீரமைக்கவே 60 ஆண்டுகள் தேவைப்படும் போல.

இப்படி நாட்டு மக்களுக்கு எதிரான இந்த பட்ஜெட்டை தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் இரண்டு அடிமைகள் போட்டி போட்டுக் கொண்டு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்பிற்குள்ளான எட்டுவழிச் சாலைத் திட்டத்தை பெயரை மாற்றி விரைவுச்சாலை என்ற புதிய மொந்தையில் கொண்டுவரத் திட்டமிடுகிறது மத்திய பாஜக அரசு. அதனை தன்னுடைய சொந்தபந்தங்களுக்கு டெண்டர் விட்டு கல்லா கட்ட வரவேற்கிறது அதிமுக அரசு.

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் எதையும் இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தொலைவே 3000 சொச்சம் கிலோ மீட்டர் தான் என்கிற போது தமிழகத்தில் 3500 கி.மீ. சாலைகள் அமைப்போம் என்பதெல்லாம் யாரை ஏமாற்ற? ஏற்கனவே இருக்கும் சாலைகளை மேம்படுத்தாமல் திட்டங்களை அறிவிப்பது அதற்கு நிதி ஒதுக்குவது எல்லாம் கார்பரேட்டுகளுக்கு டெண்டர் விடத்தானோ?

பல ஆண்டுகளாக திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை போடப்பட்டு வருகிறது. அதனை இன்னும் முடித்தபாடில்லை. அந்தரத்தில் நிற்கும் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் என்னவாயிற்று என்பதே தெரியாமல் கிடக்கிறது. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மதுரை - போடி அகலப்பாதை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பெரும்புதூர் - சிங்கபெருமாள் கோயில், சென்னை - கடலூர், திண்டிவனம் - நகரி, மொரப்பூர் - தருமபுரி, கிருஷ்ணகிரி - ஓசூர், கும்பகோணம் - விருத்தாசலம், மதுரை - தூத்துக்குடி, ஈரோடு - பழனி போன்ற எண்ணற்ற ரயில்பாதை கோரிக்கைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படவே இல்லை.

மீட்டர்கேஜ் பாதையாக இருக்கும் போது இயக்கப்பட்ட பல ரயில்கள் இன்னும் காரைக்குடி - திருவாரூர், மதுரை - கொல்லம், திண்டுக்கல் - பொள்ளாச்சி வழித்தடங்களில் இயக்கப்படவேயில்லை. இவற்றை எல்லாம் கேட்டுப்பெற வேண்டிய நிலையில் இருக்கும் அதிமுக அரசோ பாஜக அரசுக்கு ஜால்ரா அடிப்பதிலேயே காலத்தை ஓட்டுகிறது.

இப்படி எந்த வகையிலும் தமிழகத்திற்கு உதவாத பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டை ஆஹா ஓஹோ எனப் புகழ்வதன் மூலம் அதிமுக கட்சியும் தமிழகத்திற்கு உதவாத கட்சி என்பதை நிரூபித்திருக்கிறது. இனியாவது தமிழகத்திற்கு பாஜக - அதிமுக கூட்டணியிடமிருந்து விடுதலை கிடைக்குமா?

- இரா.வெங்கட்ராகவன்