அன்றே சினம் கொண்டு பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் இப்படி:

“தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்ததில்லை, இந்தத் தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ? எப்பக்கம் வந்து புகுந்துவிடும்?

இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்? “

இன்று அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் நுழையப் பார்க்கிறது, இந்தி. FSSAI எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அரசின் பால் கூட்டுறவுச் சங்கமான ஆவின் நிறுவனத்திற்குப் புத்தி சொல்ல வந்துவிட்டது.

அதாவது ஆவின் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டுகளில் இனி தமிழில் தயிர் என்று எழுதக்கூடாதாம். மாறாக ‘தஹி’ என்று இந்தியில்தான் இருக்க வேண்டுமாம். ‘வேண்டுமானால்’ அடைப்புக் குறியில், அதுவும் சிறிதாகத் தயிர் என்று தமிழில் போடலாமாம்.

இதற்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “எங்கள் தாய்மொழியைத் தள்ளி வைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்” என்று இறுக்கமாகப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பால்வளத் துறை அமைச்சர் நாசர், ‘அப்படி எல்லாம் இந்தியில் போட முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். தமிழை உச்சி முகர்ந்து, திருக்குறள் சொல்லி, காசியில் கூட்டம் போட்டு, புளகாங்கிதம் அடைந்த மோடி அரசின் இரட்டை வேடமும், முகமூடியும் தயிர் பாக்கெட்டில் வந்து நிற்கிறது.

அன்று ‘உப்பில்’ கைவைத்தார் காந்தி. நிலை குலைந்தது ஆங்கில அரசு. இன்று தயிர் பாக்கெட்டில் கை வைக்கிறது மோடி அரசு ? அடுத்து வரும் ஆண்டு 2024!

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன.

இந்தியின் ஆதிக்கத்தை, மாநிலங்களின் மொழிகள் ஒடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

கடும் எதிர்ப்பு காரணமாக ஒன்றிய அரசின் FSSAI நிறுவனம், தன் உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தி இப்போது கிடைத்துள்ளது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It