தொங்கும் பொம்மைகள் அலங்காரமானவை; ஆனால் அவசியமானவை அல்ல. ஜனநாயகத் தேரில் அச்சு, சக்கரம், அச்சாணியாக - மக்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் விளங்குகின்றனர். இதில் ஆளுநர் என்பவர் அந்தத் தேரின் இயக்கத்திற்கு எந்தவிதத்திலும் பயன்படாத அலங்காரத் தொம்பை.

governor ravi dollவெள்ளையரின் காலனி ஆதிக்கத்தின் போது அவர்களின் அதிகார மையமாக ஆளுநர் செயல்பட்டார். ஆனால் வெள்ளையர் வெளியேறி மக்கள் ஆட்சி அமைந்த பின்னாலும் ஆளுநர் பதவி தேவையற்றது; எனினும் ஒன்றியத்தை ஆளும்கட்சி தாங்கள் கௌரவிக்க விரும்பும் மூத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க இயலாத போது அவர்களை மாநில ஆளுநர்கள் ஆக நியமனம் செய்து வந்தனர்.

தமிழ்நாட்டுக்கு மைசூர் மகாராஜா ஜெய சாமராஜ உடையார் போன்ற பெருமக்களும் பிரபுதாஸ் பட்வாரி போன்ற எளிமை விரும்பிகளும் ஆளுநர்களாக இருந்துள்ளனர் . அதில் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பெருமை மேதகு உஜ்ஜல் சிங் அவர்களைச் சாரும். 1991இல் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா. அம்மையார் ஜெயலலிதா, சு சாமி, சோ சாமி, குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் ஆகிய பார்ப்பனர் கூட்டம் தற்காலிகப் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில் கலைஞரின் நேர்மையான தூய்மையான ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தனர். அப்போது அவர்களின் சதிக்கு உடன்பட மறுத்ததுடன் ஆளுநர் பதவியைத் துச்சமெனத் தூக்கி எரிந்தவர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா.

வயது முதிர்வு சரியாக நிற்கவும் நடக்கவும் முடியாத ஆளுநர் சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்கின்ற அபாண்ட பழி சுமத்தி அவர் மீது தாக்குதல் தொடுத்தது அதிமுக ஆட்சி.

ஆளுநர் பதவி என்பது “ஆண்டவன் படைத்தான்

என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜான்னு

அனுப்பி வைத்தான்” என்ற திரைப்படப் பாடல் போன்று ஆளுநர் பதவியை தங்களின் சுகபோக உல்லாச வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது பாஜக ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வாடிக்கை. அந்த வகையில் மேகாலயா ஆளுநராக இருந்த தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ் பேர்வழி சண்முகநாதன் ஆளுநர் மாளிகையை இளம் பெண்களின் உல்லாச கேளிக்கை விடுதியாக மாற்றிய கொடுமை நிகழ்ந்து பின்னர் அவர் துரத்தியடிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் கூட கடந்த அதிமுக ஆட்சியில் ராஜ் பவனையும் அம்மாதிரி உல்லாச கேளிக்கை விடுதியாக மாற்ற சில நிர்மலாதேவிகள் பயன்படுத்தப்பட்டனர் .

ஏழரை கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகிய 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மனதாக இயற்றிய தீர்மானங்களை - தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒற்றைத் தொகுதியில் கூட கட்டுத் தொகையை திரும்பப் பெற முடியாத பாஜகவின் பிரதிநிதி தன் காலடியில் போட்டுத் தூங்கிக் கொண்டிருப்பது எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடு. அதனால்தான் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது.

பெரும்பான்மையிலும் பெரும்பான்மையான மாநில மக்களின் ஒட்டுமொத்த உணர்வான நீட் தேர்வு விலக்கு பற்றிய தீர்மானம் ஒருமுறைக்கு இரு முறை ஒருமனதாக நிறைவேற்றிய பின்னாலும் அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைக்கிற ஆளுநரின் அடாவடித்தனம் வன்மையான கண்டனத்திற்கு உரியது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும்போது “தமிழ்நாட்டில் எவருக்கும் அந்த தகுதி இல்லை” என்று வெளிமாநிலங்களில் இருந்து “ஊழல் சூரப்பா”க்களை இறக்குமதி செய்தார். அந்த சூரப்பாக்கள் செய்த ஊழல்கள் இன்றைக்கு அம்பலப்பட்டு வருகின்றன. உலக அளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் ஆகும் தகுதி தமிழ்நாட்டில் எவருக்கும் இல்லை என்று புரோகிதர்கள் முடிவெடுத்தபோது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அதனைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டது. மறுத்துப் பேசவும், எதிர்த்துக் கேள்வி கேட்கவும் வக்கற்ற, வகையற்ற, திறனற்ற, முதுகெலும்பில்லாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது.

ஆனால் இன்றைக்கு ‘மானமும் அறிவும்‘, ‘சூடு சொரணை’யும் உள்ள திராவிட ஆட்சி தளபதி முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறுவதால் இனிமேல் தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்குத்தான் உள்ளது; அந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்கின்ற துணிவுமிக்க தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி துணைவேந்தர்களை அழைத்து தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவது பற்றி கலந்து ஆலோசிக்கின்றார். தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசும், அதன் முதல்வரும், கல்வித்துறைக்கான ஒரு அமைச்சரும், அமைச்சக்கமும், அந்தத் துறையை நிர்வகிக்கும் செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் இருக்கும்போது இவர்கள் எவரையும் மதிக்காமல் ஆளுநர் துணைவேந்தர்களை அழைத்து மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை பற்றி பேசுவது என்பது அக்கிரமம்; அடாவடித்தனம்.

இவர் யார்? எந்த ஊர்? இவருக்கு இந்த மண்ணைப் பற்றி, மக்களைப்பற்றி, மக்களின் உணர்வுகளைப் பற்றி மக்களின் உரிமைகள் பற்றி என்ன தெரியும்? ஒன்றிய அரசின் ஒற்றை நியமனத்தில் ஆளுநராக வருபவர் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து செயல்படுவது அறிவீனம். ஆளுநரின் வேலையெல்லாம்... மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானங்களை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது மட்டும்தான். கிட்டத்தட்ட அது ஒரு தபால்காரர் அளவிலான அதிகாரப் பதவி. மாநில அரசு நிறைவேற்றுகின்ற தீர்மானங்களைக் கிடப்பில் போடுவதும், திருப்பி அனுப்புவதும், மாநில அரசின் கருத்துகளுக்கு எதிராக தனிப்பாதை அமைப்பதும் மிகவும் தவறான செயல்களாகும்

ஏற்கனவே 1970-71களில் மாநில சுயாட்சி பற்றி நீதியரசர் ராஜமன்னார் கமிஷன் அமைத்து அறிக்கையைப் பெற்று ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தவர் அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலுப்படுத்தி அனைத்து மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டிய காலம் கனிந்து கொண்டு இருக்கிறது.

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It