இந்திய ஒன்றியத்தை இந்து நாடாக மாற்றி அதன் ஆட்சி மொழியாக, ஒரே மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் - இன் முகமூடியான பா.ஜ.கவின் திட்டம்.

சமஸ்கிருதத்தை இப்பொழுது நேரடியாகக் கொண்டு வரமுடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதனால் எப்படியும் இந்தியைத் திணித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.

முன்பொரு முறை இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நான் ஒரு குஜராத்தி. ஆனால் என் தாய் மொழியை விட இந்தியை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆங்கில மொழியில் பேச முடியாத குழந்தைகளின் மனங்களில் தாழ்வு மனப்பான்மை விதைக்கப்படுகிறது என்று பேசியிருக்கிறார்.

இதன் மூலம் ஆங்கிலத்தையும் ஓய்த்துவிட்டு ஒரே மொழி இந்தி (சமஸ்கிருதம் ) என்பது அவர்களின் திட்டம் என்பது விளங்குகிறது.

அண்மையில் பேசிய அமித்ஷா பட்டப் படிப்புகளைத் தாய் மொழியில் எழுத வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

அதாவது ஆங்கிலத்தை ஒதுக்கிவிட்டுத் தாய் மொழி என்று இன்று சொல்பவர்கள், நாளை இந்திதான் அனைவருக்கும் தாய்மொழி என்று சொல்லப் போகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைதான் இறுதியான முடிவு என்பதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நாடாளுமன்றத்தில் தி.மு.கழக உறுப்பினர் கனிமொழி அவர்கள் தமிழில் பேசும் போது, இந்தியில் கூச்சலிட்ட பா.ஜ.க.உறுப்பினர்ளைப் பார்த்து, நீங்கள் எது சொன்னாலும் தமிழில், அல்லது ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்று நறுக்குத் தெறித்தாற்போலச் சொன்னார்.

அதாவது இரு மொழிக் கொள்கையை மிக நுட்பமாகச் சொல்லி விட்டார்.

மும்மொழி என்று சொல்லிக் கொண்டு எந்தத் திரிசூலமும் இங்கே நுழைய முடியாது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It