“எங்கள் பகைவர்

       எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள்

       ஒன்றாதல் கண்டே”

– என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

பகைவென்ற தமிழர்களை ஆரியத்தால் வீழ்த்த முடியவில்லை என்றாலும், அப்பகை ஆரிய-திராவிடப்  பகையாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் முகமூடியான பா.ஜ.க.வின் ஆட்சி ராமராஜ்யம் என்ற பெயரில் ஒரு பார்ப்பனிய, மனுவின் ஆட்சியமைக்க முயன்று கொண்டு இருக்கிறது. அதற்காக ராமன், கிருஷ்ணன், அனுமன் என்ற போர்வையில்  இந்துமத வெறியை வளர்த்துக் கொண்டு இருக்கிறது.  இதே போர்வையில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயல்களை முன்னெடுக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாட்டுணவு, அணியும் ஆடை, மத அடையாளங்கள் உள்ளிட்டவைகளை முன்னிறுத்திக் கலவரங்களை உருவாக்குவதும், தாக்குதல்களை நடத்துவதும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இவையெல்லாம் வட மாநிலங்களில்தான் நடந்துள்ளன, தமிழ்நாட்டுக்குள் இதுவரை நுழையவில்லை. காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான்.

தந்தை பெரியாரையும், திராவிடச் சித்தாந்தத்தையும் தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பனர் அல்லாத இந்துக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது “இந்துத்துவா”வைத் தடுத்து நிறுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தி, தமிழக விவசாயிகள், தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு என்று பல்வேறு நிலைகளில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசை நோக்கி மாநில சுயாட்சி என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது.

முதல்வர் ஸ்டாலின் கரங்களில் “திராவிட மாடல்” ஆட்சியின் செங்கோல் வலிமையாக இருக்கிறது.

புரட்சிக் கவிஞர் எச்சரிக்கிறார்

“பொங்கு தமிழர்க்கு

         இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமென்று

          சங்கே முழங்கு !”

Pin It