புதைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடிப் பிடித்து புதிய தலைமுறையின் சிந்தனைக்கு ஆவணங்களாக முன் வைக்கும் புதுமையான நாடக முயற்சியில் ‘மரப்பாச்சி’ குழு வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நாடகத்தின் பெயர் ‘காலக் கண்ணாடி’. முழுதும் பெண்களே பங்கேற்று வரலாற்று ஆவணங்களை மட்டுமே கருத்தாடல்களாகக் கொண்டுள்ள, நாடகம் ஒன்றரை மணி நேரம் நிகழ்த்தப்பட்டபோதும் பார்வையாளர்களை உட்காரச் செய்வதில் நாடகத்தை நெறியாள்கை செய்துள்ள தோழர் மங்கை வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நாடகத்தின் பனுவல் பெரியாரியல் ஆய்வாளர் வ.கீதா, தனது கடும் உழைப்பில் உருவாக்கியிருக்கிறார். பெண்ணியப் பார்வையில் விருப்பு வெறுப்பின்றி கருத்துகள் முன் வைக்கப்பட்டிருப்பது, இந்நாடகத்தின் சிறப்பு.

பாரதியோட புதுமைப் பெண்ணை ஒரு தொடக்கமா வச்சுக்கலாமே தவிர “பெண் விடுதலைக்கொரு புலவன் பாரதி என்று சொல்லி இனியும் வரலாற்றுக் கணக்கை அவ்வளவு எளிதாகத் தீர்த்து விட முடியாது” என்ற சரியான கருத்தாக்கத்தை முன் வைக்கிறது. பாரதி பாட்டும் சொல்லும் எடுபடாத சூழல்களிலும், பெண் கல்வியும் விடுதலையும் பேசப்பட்டது.

அயோத்திதாசரோட ‘ஒரு பைசா தமிழனில்’ (அவர் நடத்திய பத்திரிகை) சாதி, பவுத்தம், தமிழ் ஆகிய மூன்று செய்திகளைப் பேசுகிறார். அதிலே எழுதிய சுவப்னேசுவரி என்ற பெண், ‘தமிழ் மாது’ என்கிற பத்திரிகையையும் நடத்தியிருக்கிறார். அந்த அம்மையார் பாரதியை அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

19-ம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் - இந்து சமய பிற்போக்குத்தனங்களை விமர்சித்த கிறிஸ்தவர்கள் தங்களை முற்போக்கானவர்களாக உணர்ந்து அந்த உணர்வுக்கு ஏற்ப வாழவும் முற்பட்டனர்.

கிறிஸ்தவர்களின் தொண்டு

1778 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. தஞ்சையில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த, ஒரு பார்ப்பனப் பெண், கணவர் இறந்தவுடன், அவர் எரிக்கப்பட்ட நெருப்பில் வீழ்ந்து ‘உடன் கட்டை’ ஏற முயன்றார். அப்போது கிழக்கிந்திய கம்பெனியைச் சார்ந்த ராணுவ வீரன் ஒருவன், அந்தப் பெண்ணைக் காப்பாற்றி, தஞ்சையிலிருந்து நெல்லைக்குத் தூக்கிச் சென்றான். விதவையாகிப் போன அந்தப் பார்ப்பனப் பெண், நெல்லை பாளையங் கோட்டையில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, ‘கிளாரிண்டா’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தன்னைக் காப்பாற்றிய அந்த ராணுவ வீரருடன் காதல் வாழ்க்கை வாழ்கிறார். அப்போது - சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நின்றது, ஒரே ஒரு தோழி தான்.

அந்த ராணுவ வீரனும் இறந்து போகிறான். அந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நின்றவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிச்சைமுத்து பாண்டியன் என்ற வண்ணார், நாகல நாய்க்கன் என்ற பறையர், ராயப்பன் என்ற பள்ளர், ஞானமுத்து என்ற ஈழவர், அச்சாயி என்ற பிச்சைக்காரப் பெண், பட்டி என்ற வடுகர் இனப் பெண். இவர்களை மய்யமாகக் கொண்ட அந்த சின்னஞ்சிறு சமூகத்தில் கிளாரிண்டா தஞ்சையிலிருந்து தான் கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டு ஏழை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நிறுவி, கிறிஸ்தவ மதநெறிகளைப் பரப்பி, நாடார் இன மக்கள் - சாதி இழிவிலிருந்து விடுபட, முதன் முதல் மதம் மாறுவதற்குக் காரணமாக இருந்தார்.

கிறிஸ்தவம் வளர்த்த தன் மதிப்பை நாடார் இனப் பெண்களும் உணர்ந்தனர். அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘மார்சீலை’ (ரவிக்கை) அணிய நாடார் சமூகப் பெண்களுக்கு தடை செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து கிறிஸ்தவ மதம் தந்த சமத்துவ உணர்வில் போராடினர்.

இறுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானம் சாணார் பெண்கள் மார்புத் துணி அணிந்து கொள்ள உரிமை வழங்கியது. ஆனால், உயர்சாதிப் பெண்கள் உபயோகிக்கும் அதே மேலாடையைப் போல் பயன்படுத்தத் தடை விதித்தது. வெட்கம், தன்மானம் என்று மட்டும் இல்லாமல் எளிய மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி பெண்களுக்கு கிறிஸ்தவம் அன்று புதிய சமூக அடையாளத்தை வழங்கியது.

தேவதாசிகளின் நிலை

கோயில்களுக்கு நேர்ந்து விட்டு பிறகு, தேவதாசிகளாக மாற்றப்பட்ட பெண்களை அந்த ‘அடிமை சிறையிலிருந்து’ கிறிஸ்தவ உபசேதிகள் மீட்டனர். ஊர் ஊராய் திரிந்து சேவை செய்த - இந்த கிறிஸ்தவ பெண் உபசேதிகள் மீது அன்று - ‘பிள்ளை பிடிப்பவர்கள்’ என்ற பழி சுமத்தப்பட்டது. இவர்களை ஏமிகார் மைக்கேல் என்ற வெள்ளை இன கிறிஸ்தவப் பெண் வழி நடத்தினார். அவர் ஒரு மதப்பிரசாரகர்.

அன்றைக்கு தேவதாசிகளின் அவல வாழ்க்கைக் குறித்து திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். ஒரு பெரும் நிலக்கிழாரின் வைப்பாட்டியாக, ஓர் இசை வேளாளப் பெண் இருந்தார். கருவுற்ற அந்தப் பெண், குழந்தை பெற்றார். குழந்தையை காவிரி ஆற்றில் எறியச் சொன்னார் அந்த நிலக்கிழார்.

அந்தப் பெண்ணோ, குழந்தையை ஓரிடத்தில் பத்திரமாக விட்டுவிட்டு, ஆற்றில் எறிந்து விட்டதாக பொய் சொன்னார். ஓர் இசைவேளாளப் பெண் தாசியாக இருக்க விரும்பாமல், மனம் திருந்தி, ஆசிரியையானதால் ஒரு மிராசுதாரர் அவரது அழகிய முகத்தைக் கீறி, அசிங்கப்படுத்தினார்.

அறிவொளி வீசும் முகத்துடன் திகழ்ந்த ஓர் இசை வேளாளர் பெண்ணைச் சந்தித்த திரு.வி.க. பள்ளியில் படிக்க விரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் நினைத்துக்கூட பார்க்க முடியாது; தலை போய் விடும் என்றாள் அந்தப் பெண். உன் தலையை வாங்குவோர் எவர் என்று கேட்டபோது, அருகிலிருந்த அவரின் தோழி - ஒரு ‘மடாதிபதியின்’ பெயரைச் சொன்னார். இதைக் கேட்ட திரு.வி.க. அதிர்ந்து போனதாக எழுதுகிறார்.

திராவிடர் இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்ட மூவலூர் ராமாமிர்தம் தேவதாசிகள் குலத்தில் பிறந்து தாசித் தொழிலில் இளம் வயதில் ஈடுபடுத்தப்பட்டு, பிறகு அதிலிருந்து வெளியே வந்து போராடினார். 15 வயது ராமாமிர்தத்தை 60 வயது ஆண், தனது வைப்பாட்டியாக்க முயலும்போது, அதிலிருந்து விடுபட்டு, தனக்கு சங்கீதம் பயிற்றுவித்தவரை, மணம் முடிக்கிறார்.

ஒரு தாசி திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதியை மீறியதற்காக ராமாமிர்தத்தை, ஒரு கொலை வழக்கில் வஞ்சகமாக சிக்க வைக்கிறார்கள். கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணைத் தேடி பிடித்து நேரில் நீதிமன்றத்தில் நிறுத்தி, ராமாமிர்தம் பொய் வழக்கிலிருந்து விடுதலை பெற்றார்.

தேவதாசி குலத்தில் பிறந்த முத்துலட்சுமி டாக்டருக்கு படித்து இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை சட்டமன்றத்தின் பெண் உறுப்பினரானார். அவர்தான் 1927 இல் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தவர். தேவதாசிகளின் கோயில் பணிக்காக வழங்கப்பட்ட நிலத்தை, தேவதாசிகளுக்கு சொந்தமாக்க வேண்டும் என்று வாதிட்டார்.

(1928 நவம்பர் 6 ஆம் தேதி சென்னை சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதா சட்டமானது. பிறகு இந்து அறநிலையத்துறை சட்டத்தைத் திருத்தி - தேவதாசி தொழிலுக்காக வழங்கப்பட்ட கோயில் சொத்துக்களை தேவதாசிகளிடமே ஒப்படைக்க வலியுறுத்திப் போராடினார். தேவதாசிகள் மட்டும் கோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்காக கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட சொத்துக்கள் வழங்கப்படவில்லை - ஆர்.)

தாசிகளை தனிப்பட்ட முறையில் ஏசுவதைத் தவிர்த்து, அவர்களைப் பரத்தையராகவும், மனைவியரை பத்தினிகளாகவும் அடையாளப்படுத்திய அறவாய்ப் பாட்டை முதன் முதலில் விமர்சனப்படுத்தியவர் பெரியார் தான். தேவதாசி முறை ஒழியக் கூடாது என்று வாதிட்டவரிடம் பெரியார், அதை ஏன் ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகம் மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டும்?

“தேசாபிமானமும் நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் முறைப்படி வரட்டும்” என்று பெரியார் கேட்டார். தேசபக்தியாளர்களை தேசாபிமானிகள் என்று கூறுவதுபோல கற்பு மீது பக்தி உள்ளவர்களுக்கு ‘கற்பாபிமானிகள் என்ற பெயரை பெரியார் சூட்டினார்.

தனது சங்கீத அறிவாலும், ஆற்றலாலும், வளர்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள் - அவரது பாடலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆண் நடிகர்களும், ஆண் பாடகர்களும் திணறினர். அவர் தேவதாசி வகுப்பினரா என்பது தெரியாது. ஏற்கனவே திருமணமான பிரபல பார்ப்பன பாடகர் கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பார்ப்பன கிட்டப்பா தனது குடும்பத்தின் அழுத்தத்தால் சுந்தரம்பாளிடம் சுமூகமான வாழ்வைத் தொடரவில்லை. தனக்கு மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காமல் போன நிலையில் கே.பி. சுந்தரம்பாள் உள்ளம் உடைந்து நின்றார். கிட்டப்பா, மரணத்துக்குப் பிறகு துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

அன்றைக்கு காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட பல பெண்களில் கே.பி.சுந்தரம்பாளும் ஒருவரானார். தேசிய போராட்டத்தின் விளைவாக சைவம் - தனித்தமிழ் இயக்கங்களும் தோன்றின. மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார், 12 குழந்தைகளையும், கால்மாட்டில் ஒரு குந்தையையும் வைத்துக் கொண்டே படித்தார்; எழுதினார்.

சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்

தாம் சார்ந்திருந்த சமூகத்தையும், உலகத்தையும் விமர்சிக்கவும், மறுவரையறை செய்யவும், பண்பாட்டு வெளியையும், தளங்களையும் தேடிக் கொண்டிருந்த பல பெண்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் நாடிச் சென்றனர். அந்த அமைப்புகளை அவர்கள் சார்ந்து நின்றாலும், தமக்கென புதிய இலக்கணங்களை அவர்கள் வகுத்துக் கொண்டனர்.

சமதர்மத்தை கொள்கை நெறியாக முன் வைத்த சுயமரியாதை இயக்கம் இஸ்லாமிய சமூகத்தையும் ஏற்றுக் கொண்டது. இஸ்லாமிய மார்க்கம் - சமதர்ம அடையாளத்தைப் பெற வேண்டுமானால், ஏற்கப்பட வேண்டியவைகளை, இஸ்லாமியர் பலரே பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் கட்டுரைகளாக எழுதினர்.

வைதீகத் திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதை திருமணத்தை அறிமுகம் செய்து ‘வாழ்க்கை ஒப்பந்தங்களை’ நடத்தியது சுயமரியாதை இயக்கம். சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தும், 70000 சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணத் தம்பதிகளின் படங்களோடு காலண்டரை வெளியிட்டது சுயமரியாதை இயக்கம்.

குஞ்சிதம், நீலாவதி, இந்திராணி, கண்ணம்மாள், அன்னபூரணி, ராமமிர்தம்மாள், மரகதவல்லி, ரெங்கநாயகி, விசாலாட்சி, பொன்னம்மாள், சுந்தரி, அஞ்சுகம், சிவகாமி, மேரி, மகாலட்சுமி, மஞ்சுளா பாய், வள்ளியம்மை, சுலோசனா, சிதம்பரம்மாள், மீனாட்சி, கிரிஜாதேவி, பினாங்கு ஜானகி, ஜெயசேகரி, ஆண்டாள் அம்மாள் என்று பல பெண்கள் சுயமரியாதை இயக்க மேடைப் பேச்சாளர்களாக திகழ்ந்தனர்.

இவ்வளவு முற்போக்காக இருந்த பொது வெளி எங்கே போச்சு? இந்த வரலாற்றுத் தொடர்ச்சி எப்படி அறுபட்டது? இந்த முறிவினால்தான் பெண் விடுதலை மட்டுமின்றி, பல பிரச்சினைகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கால வெளிப் பயணத்தின் சரடுகளை உணர்ந்து - இன்று செயல்படுவதே நம் முன் உள்ள சவால்.... கேள்விகளுக்கு முடிவில்லை என்ற கேள்வியோடு, இந்த ஆவண நாடகம் நிறைவடைகிறது.

தோழர்கள் கல்பனா, கவின் மலர், பொன்னி, ரேவதி, சரசுவதி, இவர்களோடு பார்வையாளர்களும் இணைந்து நிகழ்த்திய இந்த நாடகம் ஒரு எதிர்நீச்சல் முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஆவணங்களின் உள்ளடக்கம் உரையாடல்களாக வெளிப்படும்போது வார்த்தைகள் தவறாமல் - உரிய அழுத்தங்கள், பாவனைகளோடு வெளிப்படுத்துவதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை.

ஒன்றரை மணி நேரத்தை கேளிக்கைகள் பக்கம் திருப்பிவிட்டு விடாமல் உள்ளத்தில் சுமைகளைப் படிப்படியாக இறங்கச் செய்து - ஏக்கம் - கவலைப் பெருமூச்சுக்கு உள்ளாக்கி விடுகிறது. காலக் கனவு, இந்த நாடகம் இளம் தோழர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை, திருச்சி, மதுரை, சேலம், தஞ்சை நகரங்களில் நிகழ்த்தப்பட்டு, பேராதரவைப் பெற்று வருகிறது, இந்த நாடகம்

Pin It