கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சமூக மாற்றத்தை நோக்கியே பெரியாரின் வாழ்நாள் பயணம்

2003 மார்ச்சு 14 அன்று மு.இராமசாமி அய்யாவின் துணைவியான செண்பகம் அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மதுரை யாதவர் கல்லூரியில் முதல் நிகழ்த்துதலாக கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் அரகேற்றியது. இந்நாடகம் தொடர்ந்து இரண்டாண்டுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரகேற்றப்பட்டுள்ளது. “முப்பத்தைந்து நிகழ்வுகள்;, முப்பத்தொன்பது பத்திரிகை விமர்சனங்கள், முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், நிஜ நாடக இயக்க வரலாற்றில் கலகக்காரர் தோழர் பெரியார் ஒரு மைல்கல்! நவீன நாடக இயக்க வரலாற்றிலும் தான்! எனக்குப் பிடித்தமான ஒன்றில் நான் ஈடுபட்டிருந்தது இதுவரை வெறும் 300 - 400 பேர்களுக்கு மட்டுமே பிடித்தமானதாக இருந்தது மாறி, 35000 க்கும் அதிகமானவர்களுக்குப் பிடித்தமானதாக மாறிய விந்தையைச் செய்து காட்டியது ‘கலகக்காரர் தோழர் பெரியார்.’, செய்து காட்டியவர் பெரியார். பெரியாரின் சிந்தனைத் தேவையை முன்னெப்போதையும்விட மக்கள் இப்பொழுது கூடுதலாக உணர்கின்றனர் என்பதும் அதை இந்த நாடகம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்கிறது.” (மு.இராமசாமி : 2003).

mu ramasamy as periyarஇந்நாடகம், இருதுருவங்களில் தோன்றிய சமூக மாற்றுச் சிந்தனை மரபினை ஒன்றாக்கி கருப்பு, சிவப்பு எனும் நிறத்தை குறியீடாக் கொண்டு, கருப்பு எனும் இழிவு மாற சிவப்பு எனும் புரட்சி வெடிக்கும் எனும் நம்பிக்கையின் ஊற்றாய் உருவெடுத்துள்ளது. நிகழ்த்துக்கலை வடிவம் வழியாக அசாத்தியங்களையும் சாத்தியப்படுத்தும் ஆற்றலை உணர்ந்தவர் மு.இரா அய்யா.ஆதலால் தான் இவரின் நாடகங்களில் பொதுவுடமைச் சிந்தனை மைய இழையாகப் பின்னப்பட்டுள்ளன. பொதுவுடமைச் சிந்தனையின் ஊற்றுக்கண் காரல்மார்க்சு இறந்த தினமும் (மார்ச்சு-14) காரல் மார்க்சையும் பெரியாரையும் நேசித்த செண்பகம் அம்மாவின் இறந்த நாளும் ஒரே நேர்கோட்டில் ஒத்திசைந்து பயணப்பட்டிருப்பது, மு.இராமசுவாமி அய்யாவிற்கு கூடுதலான இயங்குதலை அளித்திருப்பதாக எண்ணுகிறார்.

செண்பகம் அம்மாவின் மீதான அளவில்லா நேசிப்பே மு.இராவின் இயங்குதலுக்கான கிரியாவூக்கி. இச்சூழலில்தான் கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் உருவாகியுள்ளது. மார்க்சையும் பெரியாரையும் இணைக்க வேண்டும் என்கிற எண்ணம் சமூக சீர்திருத்தத்தின் மீதும் பொதுவுடமைச் சிந்தனையின் மீதும் நம்பிக்கைகொண்ட மு.இரா நிகழ்த்துவெளியில் காட்சி வழியாக, தந்தை பெரியாரை காட்டியுள்ளது சினிமாவெனும் திரைமொழிக்கு முன்னரே நிகழ்ந்த ஒன்றாகும். இந்நாடகம் உருவாகி, நிகழ்த்துதலை பல்வேறு நகரங்களில் முற்போக்கு அமைப்புகளின் துணையோடு அரங்கேற்றியது நிஜநாடக இயக்கம். இதன் பின்னரே பெரியாரின் வாழ்க்கையை ஞானராஜசேகரன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

கலகக்காரர் தோழர் பெரியார் ஒத்திகைச் சூழல் :

நாடக நிகழ்த்துதலில் ஒத்திகை முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு நாடகச் செயல்பாடும் திறம்பட அமைய ஒத்திகை பார்ப்பது அவசியமாகும். “எச்சில் துப்பும் காட்சியாக இருந்தாலும் அதை முன்கூட்டியே எப்படி எச்சில் துப்ப வேண்டும் என ஒத்திகை பார்ப்பது அவசியம். எச்சில்தானே, துப்புவது போன்ற காட்சிதானே என்று சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் உண்டு.” என ஒத்திகையின் முக்கியத்துவத்தை மு.இராமசாமி அய்யா கூறியது நினைவுக்கு வருகிறது.

வழக்கமாக ஒத்திகை நிகழ்விற்குப் பார்வையாளர்கள் இன்றி நாடக நடிகர்களாக தங்களுடைய பாத்திரத்திற்கேற்றார்போல நடிப்பினைச் செழுமைப்படுத்தும் வரைப்படம் ஒத்திகையாகும். பம்மல் சம்பந்தம் நாடகங்களில் ஒத்திகை நிகழ்விற்குப் பார்வையாளர்களை அழைத்து நாடகத்தை நிகழ்த்திக் காட்டிய மரபினை அறிய முடிகின்றன. கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் பெரியாரின் வரலாற்று நிகழ்வுகளையும், பெரியாரின் சமூகநீதிக்கான களப்பணியையும், பொது வாழ்க்கைப் பயணத்தையும் மையப்படுத்திய உருவ உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகம் ஆகும். இந்நாடகம் ஒத்திகை பார்ப்பதுபோல் தொடங்கி பெரியாரின் சிந்தனையில் பயணித்து மீண்டும் ஒத்திகையும், நாடகமுமாக பல இடங்களில் முடிவின் உச்சத்தை எட்டி மீண்டும் தொடரக்கூடிய நிகழ்த்தல் பாணியில் அமைந்துள்ளது.

ஒத்திகை பார்க்கவேண்டி நேரமாகியும் பெரியார் வேடம் போடுபவர் வரவில்லை.கடைசியில் குழுவில் உள்ளவர்கள் சேர்ந்து முடிவெடுக்கின்றனர்.பெரியார் வேடத்திற்கு இவரே(மு.இரா அய்யாவே) பொருத்தமாக இருப்பதாகவும், அவரிடம் தாடி இயல்பாக பெரியாரைப் போன்று முளைத்திருக்கிறது. கைத்தடி, கண்ணாடி இவைகள் இருந்தால்போதும் பெரியார் வேடம் தயார் ஆகிவிடும் என நாடக நடிகர்கள் கலந்து நாடகத்திற்கு பெரியார் வேடத்தை மேடையிலேயே தயார் செய்த பின்னர் நாடகம் நடக்கின்றது. இந்நிகழ்வு ஒத்திகைப் புனைவாக உருவாகி நிகழ்த்துதலில் சேர்கின்றது.

கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தை நிகழ்த்திய நாடக இயக்கம் :

மு.இரா அவர்களுடன் நாடக ஆர்வலர்கள் ஒன்றுகூடி Real Theatre Movement என்கிற நாடக அமைப்பைத் தோற்றுவித்து நாடகங்களை உருவாக்கியுள்ளனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத சூழலில் ஒருசில நாடக ஆர்வலர்களைக் கொண்டு நிஜ நாடக இயக்கம் எனும் நாடக அமைப்பை உருவாக்கியுள்ளார்.

மதுரை நிஜநாடக இயக்க வரலாற்றில் இதுவரைக்குமான நாடகங்கள் (துர்க்கிர அவலம், ஸ்பார்ட்டகஸ், இருள்யுகம், கலிலியோ, கட்டுண்ட பிராமதியஸ்) கனத்தன்மையோடும், படிமத் தன்மையோடும் காட்சிகளின் வழி நாடகத்தினைப் பூடகமாக நிகழ்த்தியதற்கு மாறாக கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் அமைந்துள்ளது. இந்நாடகத்தின் வசனங்கள் காட்சியமைப்புகள் பெரியாரின் சிந்தனைகள், பெரியாரின் வாழ்வில் நடந்த அனுபவங்கள், மக்களுக்காகப் போராடும் போராளிகளின் நிலைகள், புரட்சிகர காட்சியமைப்புகள், சனாதனத்திற்கு எதிரான பெரியாரின் கருத்துக்கள், பெரியாரின் வாழ்வில் நடந்த முற்போக்கு நிகழ்வுகள்  முதலியவை நேரடியாகப் பார்வையாளர்களைச் சென்றடையும் நோக்கில் அமைந்துள்ளது. பார்வையாளர்களே நாடகத்தில் நடிகர்களாக மாறும் விதத்திலும், பார்வையாளர்களின் மனதைத் தொடும் விதத்திலும் அமைந்துள்ளது. நாடக ஆசிரியரின் (மு.இராமசாமி) உணர்வுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பார்வையாளர்களின் மன ஓட்டத்தோடு ஒத்திசைந்து செல்லும் கலைநேர்த்தியால் தான் இந்நாடகம் 38 இடங்களில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிஜ நாடக இயக்கம் தொடங்கி 42 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பெரியார் நாடகத்தினைத் தொடர்ந்து ‘தோழர்கள்’ நாடகத்தை நிகழ்த்தியுள்ளது. நிஜநாடக இயக்கமும் தஞ்சை ஒத்திகை நாடக இயக்கமும் இணைந்து ஒருசில நாடக முன்வைப்புகள் நிகழ்ந்துள்ளது. மேலும் மதுரை காமராசர் பல்கலை மாணவர்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலை மாணவர்கள், சென்னைப் பல்கலை நண்பர்கள், பாண்டிச்சேரி நாடக நண்பர்கள், பள்ளி மாணவிகள், நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் முதலானவர்களைக் கொண்டு கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் அரங்கேறியுள்ளது.

இந்நாடகத்தில் கலகக்காரர் தோழர் பெரியார் எனும் சொல்லிற்கான விளக்கங்களை நிரூபிக்க, பெரியாரின் குடியரசு இதழ்களில் உள்ள சிந்தனையை வாசித்துக் காட்டியும் அவரின் பொதுவாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வினையும் அவர் அணிந்த கருப்புச் சட்டைப் எனும் குறியீடை மாற்றி அவரின் சிவப்பு சிந்தனையின் குறியீடாய் சிவப்புச் சட்டை பெரியாராக மாற்றியிருப்பது அனைவரின் மத்தியில் ஒர் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலில் மொழிபெயர்த்து குடியரசு இதழில் வெளியிட்டவர் பெரியார் என்றும் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூன்றுபேரையும் ஆங்கில அரசாங்கம் தூக்கிலிட்டபோது பகத்சிங் கொள்கையே சுயமரியாதைக் கொள்கை என்று பெரியார் சொன்னார் என்றும், சமூக விடுதலையை எண்ணுகிற இயக்கங்கள் பிளவுண்டு இருப்பதால்தான் மனிதகுல விடுதலையும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்றும் சமூக நீதியை மறுக்கின்ற இன்றைய சூழலில் பார்ப்பனியத்தை வேரறுக்க, பெரியாரியமும் வர்க்கமற்ற சமுதாயத்தை விரும்புகிற மார்க்சியமும் கைகோர்த்து இயங்க வேண்டிய தேவை அனைத்துத் தோழமை இயக்கங்களுக்கு வேண்டுமென்றும் கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் காட்டுகிறது.

mu ramasamy in periyar dramaதீண்டாமை ஒழிப்பது என்று சொல்வது பஞ்சமர்களை (தலித்துகளை) மாத்திரம் முன்னேற்ற வேண்டும் என்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்க வேண்டும் என்பதுதான் தீண்டாமை விலக்கின் தத்துவம். “மொழி கருத்து பரிமாற்றக் கருவியே ஒழிய அவற்றிற்கு எந்த விதமான வணங்குதலுக்கும் போற்றதலுக்கும் உடைய தெய்வீகத் தன்மை கிடையாது. பழமையான விசயங்களிலிருந்து வேறுபட்டு மூடத்தனம், மதம் இவைகளிலிருந்து எப்போது மொழி விடுபடுகின்றதோ அப்பொழுதுதான் உலக மொழிகளில் தலைசிறந்த மொழியாகத் திகழ முடியும்”. பெரியாரின் சிந்தனையைக் காட்சிகளாகக் கொண்டே இந்நாடகம் நீள்கிறது. மொழியின் சீர்திருத்தம் போன்றவற்றை பெரியார் செய்திருந்தாலும் மொழியின் இயங்கியல் பூர்வமானவைகளை மறுக்கின்றார். மொழி என்பது நாம் ஒருவருக்கு ஒருவர் நம் வீட்டில் ஒரு கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்காகவே மொழி தவிர மொழிக்கு எந்தவித தெய்வீகத்தனம் இல்லை என்கிற பெரியாரின் வாதத்தினை நாடகத்தில் பெரியார் ஆவேசமாகப் பேசுகிறார்.

கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் நிகழ்த்தப்பட்ட விபரம்

வ.எண்            நாள்     அமைப்பும் நிகழிடமும்

  1. 14-03-2003 செண்பகம்அம்மாவின் 5வது நினைவுநாள் நாடகம், யாதவர் கல்லூரி, மதுரை.
  2. 09-08-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இராசா அண்ணாமலை மன்றம், சென்னை.
  3. 14-03-2003 முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திருவண்ணாமலை.
  4. 16-09-2003 வாணி விலாச சபை, திரையரங்கம், விஜயலட்சுமி, கும்பகோணம்
  5. 17-09-2003 தமிழர் கண்ணோட்டம் ஏற்பாடடில் சங்கீத் மஹால், தஞ்சாவூர்.
  6. 24-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
  7. 26-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
  8. 27-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
  9. 28-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
  10. 29-11-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
  11. 30-11-2003 வரவேற்புக்குழு, மதுரை புறநகர், மதுரை.
  12. 30-11-2003 ராஜா முத்தையா மன்றம், மதுரை.
  13. 23-12-2003 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கலைஇலக்கிய பெருமன்றம், நியூலுக் திரைப்பட சங்கம், திருப்பூர்.
  14. 25-12-2003 அறிவியல் கலை இலக்கிய மன்றம், புதுக்கோட்டை.
  15. 27-12-2003 கலைஇலக்கிய பெருமன்றம், மன்னார்குடி.
  16. 29-12-2003 தந்தை பெரியார் திராவிடக் கழகம், காமராசர் அரங்கம், சென்னை.
  17. 30-12-2003 கனிப்பிரியா திரையரங்கம், உத்தமபாளையம்.
  18. 31-12-2003 என்டி.ஆர் திருமண மண்டபம், தேனி
  19. 31-12-2003 சென்றல் திரையரங்கம், போடி
  20. 09-01-2004 காலை-இந்திய வாலிபர் ஜனநாயக சங்கம், நெல்லை
  21. 09-01-2004 இரவு -இந்திய வாலிபர் ஜனநாயக சங்கம், நெல்லை
  22. 11-01-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சேலம்
  23. 14-02-2004 பாரதி சங்கம், வ.உ.சி கல்லூரி , மைதானம், தூத்துக்குடி
  24. 15-02-2004 இந்திய வாலிபர் ஜனநாயக சங்கம், ச.கோவில்பட்டி
  25. 16-02-2004 கலை இலக்கியப்பெருமன்றம், காரைக்குடி.
  26. 18-02-2004 தந்தை பெரியார் திராவிடக் கழகம், நகராட்சிக் கலையரங்கம், கோவை
  27. 19-02-2004 தந்தை பெரியார் திராவிடக் கழகம், நகராட்சிக் கலையரங்கம், மேட்டூர்.
  28. 20-02-2004 தமிழர் பேரவை, சேலம்.
  29. 21-02-2004 மக்கள் கலை இலக்கியக் கழகம்.திலகர்திடல், தஞ்சாவூர்.
  30. 21-03-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாண்டிச்சேரி.
  31. 29-02-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கோவை.
  32. 14-03-2004 செண்பகம் அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நாடகம், யாதவர் கல்லூரி, மதுரை.
  33. 15-08-2004 முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மயிலாடுதுறை.
  34. 17-09-2004 கலை இலக்கியப்பெருமன்றம், பட்டுக்கோட்டை.
  35. 18-09-2004 தாய்த்தமிழ்ப் பள்ளி, இறையியற் கல்லூரி வளாகம், மதுரை.

இந்நாடகம் முப்பத்தைந்து நிகழ்வுகளைத் தாண்டியும் மதுரை, சென்னை, சேலம் ஆகிய ஊர்களில் அரங்கேறியுள்ளது.

“கலகக்காரர் தோழர் பெரியார்” என்னும் நாடகம் சமூகச் சீர்தருத்தக்கருத்தினை முன்வைப்பதோடு மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுகிறது. பார்வையாளர்களின் மனவெளி சமூக நிகழ்வின் மீதான அக்கறையை ஏற்படுத்தி, பார்வையாளர்களை  உணர்வுரீதியாக ஒன்றிணைத்து, அறிவு ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமுத்து அய்யாவின் சமூக விடுதலைக்கான கொள்கையான மார்க்சையும் பெரியாரையும் இணைத்துப் பார்க்கும் பார்வை போன்று இந்நாடகம் அமைந்திருக்கின்றது. மதவாதம், சாதியாதிக்கம் புரையோடிய சமூகத்தை மாற்றி பொதுமைச் சமூக உருவாக்கத்திற்கும், மனிதகுல விடுதலைக்கும் அம்பேத்கரியமும் இணைத்து சமத்துவத்தை வென்றெடுக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டுத் தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அயோத்திதாசப் பண்டிதர், லெனின், ஏங்கல்ஸ், மாவோ, சேகுவேரா, சாவித்திரிபாய், மகாத்மா பூலே ஆகிய ஆளுமைகளையும், சமூகவியலாளர்களின் சிந்தனைகளையும் நாடகமாக்கும் முயற்சி தொடரவேண்டும். “தோழர்களே துணிவு கொள்ளுங்கள்! சாகத் துணிவு கொள்ளுங்கள்! சொந்த வாழ்வையும், சொந்த நலனையும் விட்டு விட்டு சமூகத்திற்குத் தொண்டாற்ற, துணிவு கொள்ளுங்கள்! வெறும் உற்சாகம், வீரம் இவைகள் மட்டும் இருந்தால் போதாது. கால தேச வர்த்தமானங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், நன்மை, தீமை, சாத்தியம், அசாத்தியம் இவைகளைப் பகுத்துணரும் பேராற்றல் மட்டும் இருந்தால் தான் இன்றைய இளைஞர்கள் பொது வாழ்க்கைக்குப் பயன்படுவார்கள். இல்லையென்றால் சுயநல சூழ்ச்சிக்கு இரையாகி விடுவார்கள்” எனப் பெரியார் பேசிய இறுதிச் சொற்பொழிவு நாடகத்தில் கூடுதல் விழிப்புணர்வைத் தருவதோடு பெரியாரின் இறுதிப்பேச்சு மக்கள் மத்தில் கரைந்து போகாமல் பார்வையாளராகிய மக்களிடம் எழுச்சி பெறுகிறது.

நாடகம் பெரியாரின் இறுதிப்பேச்சோடு நாடகம் முடியவில்லை. பார்வையாளர்கள் அரங்கிலுள்ள வெண்திரையில் பெரியார் இறப்பு நிகழ்வின் இறுதி ஊர்வலக் காட்சிக் காட்டப்படுகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் கூடுதல் இறுக்கத்தைத் தருவதோடு பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் திரள் பெரியாரின் இறப்பின் பின்னான காட்சியினைப் பார்த்தறியாதவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இக்காட்சி அமைகிறது. “மானம் தடுப்பாரை! அறிவைக் கெடுப்பாரை! மண்ணோடு பெயர்த்த கடப்பாரை, மண்ணுக்குள் போச்சுதே நம் கண்முன்னே.” எனும் வரி பாலகிருட்டிணன் குரலாய் ஒலிக்கும்போது பெரியார் தன்சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட தருணத்தை பாடல் வழியாகவும், அரங்கின் திரையின் காட்சி வழியாகவும் எல்லோரிடத்திலும் உள்நுழைகின்றது.

நாடகத்தின் இறுதியாக நாடகக் குழுவிடம் நிருபர்கள் பேட்டி எடுப்பதுபோன்ற காட்சி அமைந்துள்ளது. கடவுள் இல்லை என்று சொல்றீங்க. ஆனால் உங்க பேரு ராமசாமினு இருக்கே?, இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற்றிருக்கா? தோல்வியடைந்து இருக்கா? உங்க நாடகத்துல இதுவரை இல்லாத பிரச்சார நெடி இதுல கொஞ்சம் அதிகமா இருக்குன்னு சொல்றாங்களே? சிகப்பு சட்டை போட்டதற்கு நாடகத்துல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் இன்னும் கூடுதல் விளக்கம்?, பெரியார் உருவாக்கிய கொடியைப் பற்றி கூறுங்கங்கள். பெரியார் நாடகம் போட வேண்டிய தேவை இப்ப என்ன? இக்கேள்விகளுக்குப் இயக்குநரின் பதிலாக, “சாதிய மதவாத அச்சுறுத்தல் மேலோங்கியிருக்கிறது இன்றைய சூழ் நிலையில் மத அடிப்படையிலான மதவாதத்திற்கு எதிராகவும் இந்துமத பயங்கரவாதத்திற்கு எதிராகவும் செயல்பட வேண்டிய அவசியம் தேவை, இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது. அதுக்கு பெரியார் சிந்தனைகள் தான் உடனடியான தேவையாக இருக்கும் என்று நினைக்கிறோம். இந்துத்துவ சக்திகளால் நெருங்க முடியாது நெருப்பாய் இருப்பவர் தந்தை பெரியார் மட்டும்தான். பெரியாரின் தேவை அவசியமாகிறது. ஆதலால்தான் இந்த நாடகம்.” “பெரியார் ஒரு கம்யூனிஸ்ட் வெறும் வார்த்தைகளால சொல்லி இருந்தா. அது காத்துல கரைஞ்சு போயிருக்கும் நாடகம் என்பது ஒரு பார்வை வடிவ ஊடகம். சிவப்புச்சட்டை பார்வை வடிவமாக உங்களுக்குள்ள கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கணும். அதுக்குத்தான் பெரியாருக்கு சிவப்பு சட்ட. பெரியாரோட சட்ட தாங்க கருப்பு. மனசெல்லாம் சிகப்பு தாங்க.” “பெரியார் உருவாக்கின கருப்பு கொடியின் நடுவில் இருக்கிற சிவப்பு தான் பெரியார் போட்டிருக்கிற இந்த சிவப்பு சட்டை. சிவப்பு என்கிற புரட்சி வளர வளர கருப்பு என்ற இழிவு மறையும்” எனப் பதிலுரைக்கப்படுகிறது. முழுவதாக திரையில் சிகப்பு நிறம் வெளிப்படுகிறது. நாடகம் நிறைவடைகிறது.

சமூக மாற்றத்தை விரும்பிய பெரியாரின் விருப்பம் நாடகத்தில் நிறைவேறினாலும் ஜனநாயகம் மறுக்கப்பட்டு சனாதனம் கோலொச்சுகின்ற இன்றைய சூழலில் பெரியார், அம்பேத்கார், மார்க்சு இவர்கள் தேவைப்படுகிறார்கள். கலகக்காரர் தோழர் பெரியார் இன்றைய தேவையும் சமூக விடுதலையின் விளைச்சலுமாக அரங்கேற்ற வேண்டும்.

- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், அருள் அனந்தர் கல்லூரி, கருமாத்தூர் - 625514