சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு தனி மனிதரையும் சமூகத்தில் நிகழும் சாதிய வன்முறைகள் கடுமையாக பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பின் ரணங்களையும் குமுறல்களையும் ஆற்றாமையும் ஒரு நிகழ்த்துக்கலைஞர் படைப்பின் வழியாக பதிவுசெய்து வெளிப்படுத்துவது கலை வெளியில் இயல்பாக நடந்துவிடுகிறது. சமகால கருத்தியலை, சமூக யதார்த்தத்தை கோஷங்களாக பிரதிபலிக்காமல் கலையாக நவீனப்படுத்துவதற்கான ஒரு நவீன மாற்று வடிவத்தை உருவாக்கும் பயணத்தில் உருவானதே இந்த சமகால நடனம். காலங்காலமாக நம் சமூகத்தின் பல அடுக்குகளை கொடூரமாகத் தாங்கி இருக்கும் சாதியம், மனித வாழ்வில் அக, புறவெளிகளில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஒரு தனிமனிதனின் வாழ்வில் உடலளவிலும் மனதளவிலும் சாதியம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் முன்வைக்கிறது தீண்டத் தீண்ட. இந்த ஈருடல் நடன நிகழ்வில் சாதி ஆதிக்கத்திற்குள்ளாகும் உடல்கள், போராட்டத்தினூடாக, சாதியம் கடந்த ஒரு சமத்துவத்தை பேச முயல்கிறது. இந்த நடன மொழியில் இடத்தையும், காலத்தையும் கொண்ட வார்த்தைகளற்ற உடல்மொழியே கருத்தியலாக முன்மொழியப்படுகிறது என்கிற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு செயலாக்க வடிவம் கொடுத்து சமகாலத்திய நவீன நடனத்தை நடனக்கலைஞர் அகிலா நெறியாள்கை செய்தும் தானே நிகழ்த்துநராகவும் நிகழ்த்தியுள்ளார். நடனக்கலைவழி சாதியாதிக்கமற்ற சமத்துவத்தை நிலைநாட்ட எண்ணியுள்ளது சிறப்பிற்குரியதாகும்.

virali drama 454இந்திய சமுதாயத்தில் சாதி இறுக்கம் பெற்று அழிக்க முடியாத தன்மையில் இருப்பதற்கு வர்ணாசிரமக் கொள்கை ஒரு காரண கர்த்தாவாகும். பிறப்பாலும் தொழிலாலும் உயர்வு தாழ்வு கட்டமைத்து மனிதசமூகத்தினை பிளவுபடுத்தி, பாகுபாட்டைக்கட்டவிழ்த்த பார்ப்பனியம் சாதி இந்துக்களின் வழியாகக் கோரமுகம் கொண்டு செயல்படுகிறது. மற்ற மதத்தைக் காட்டிலும் இந்து மதம் கூடுதலான சமூக முரண்பாட்டினையும் ஏவுகிறது. குடியிருப்பு தொடங்கி அனைத்து செயல்பாடுகளிலும் சாதியம் பார்ப்பனியத்தை உள்வாங்கி, உழைக்கும் மக்களை ஒடுக்கப்பட்ட மக்களாக்கி அவர்களை ஒடுக்குமுறைக்குள் தன்வயப்படுத்தி கீழானவர்களாக, தாழ்ந்த வர்க்கமாக, தீட்டுக்கு உரியவர்களாக இந்திய-தமிழ்ச் சமூகத்தில் நீடிக்கின்ற ஒடுக்குதலை அம்பேத்கர்-பெரியார் கடுமையாக எதிர்த்தனர். சாதிகளாக சமூகம் இறுக்கம் பெற்றிருப்பதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் தலையாய பின்பற்றுதலை அண்ணல்அம்பேத்கர் முன்வைக்கின்றார். அவை, ஒடுக்குமுறையை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்து மதத்தை விட்டு வெளிவருதல், சாதியத்தை மாற்ற அகமண முறையையும் குலவழி சப்பிரதாயங்களைக்குள் சிக்குண்டு இருப்பதலில் இருந்து விடுபடவேண்டும் என்பதாகும். மதங்களும் சாதிகளும் அடிமை நிலையை உருவாக்கிறது என்பதால் இவைகளை எதிர்க்கவேண்டும் என்றார் அண்ணல். ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்கிற புரிதலை நடனத்தின் வழியாக உணரமுடிகிறது. மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை எதிர்த்து காதல் கொள்ளும் தன்மையிலேயே காட்சிகள் விரிகிறது.

தமிழகத்தில் ஆதிக்க மனநிலை படைத்த சாதியினர் தன் சுயசாதி ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன்சாதியை சேர்ந்த ஒரு ஆண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை காதல் கொள்ளும்போது அவர்களைப் பலிவாங்குதல் குறைவாகவே நடக்கிறது. இதே போன்று ஆதிக்கசாதியை சேர்ந்த ஒரு பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் காதல் கொள்ளும் பட்சத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சாதிக்கு எதிராக இருக்கும் காதலை எதிர்ப்பதோடு தம்சாதிப் பெண் வயிற்றில் தாழ்த்தப்பட்ட சாதியின் கரு வளர்வதா?எனப் பெண்ணின் குடும்பமும் ஆதிக்க சாதிக்குழுக்களும் கடுமையாக எதிர்ப்பதோடு இல்லாமல் சாதி இந்துக்கள் என்று சொல்லக்கூடிய ஆதிக்க சாதிகள் தங்கள் ஆதிக்க உணர்வினை வெளிப்படையாகவே காட்டுகிறார்கள. ; இது இன்று நேற்று நடப்பதல்ல சாதியம் தோற்றம் பெற்று அதைக் கட்டிக்காக்கும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் என்று உருவானதோ அன்றிலிருந்தே சாதியின் பெயரால்தாக்குவதுண்டு. இந்தத்தாக்குதல் மறைமுகமாக நிகழாமல் வெளிப்படையாகவே பொதுவெளியில் நிகழ்கிறது.

இளவரசன் திவ்யா, உடுமலைப்பேட்டை சங்கர்கௌசல்யா, கோகுல்ராஜ், பழனியைச் சேர்ந்த பத்திரகாளி சிறிப்ரியா, சிவகங்கை சிவக்குமார் மேகலா இப்படி எண்ணற்ற காதல் மணம் கொண்டவர்களைப் பிரித்து அவர்களை ஆணவப் படுகொலை செய்வது என்பது ஆதிக்க சாதியினரிடம் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் எண்பதிற்கு மேற்பட்ட சாதிய ஆணவக் கொலைகள் நடந்துள்ளதை அறியமுடிகின்றன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகமாகவே சாதிய வறட்டுக் கௌரத்தைக் காப்பதற்காக கொலைசெய்வது பெருகிவருகிறது. இந்த மனப்போக்கை மாற்றுவது என்பது சட்ட ரீதியான தண்டனை வழங்குவதன் மூலமாக மாற்றுவதற்கு அப்பாற்பட்டு மனம் திருந்துதலை அடிப்படையாகக்கொண்டு கருத்துப் பரவல் மூலமாகவும் கலை வடிவத்தின் மூலமாகவும் சமுத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கையோடு பயணப்பட்டிருக்கிறது விறலி நவீன நடனக்குழு. இதில் நடனக் கலைஞர் அகிலா, சந்திரன் நடன கலைஞர்களுடன் சேர்ந்து இந்நடன நிகழ்வை முன்னெடுத்து வருகிறார். பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று எனக்கடந்து செல்லக் கூடியதல்ல இந்நிகழ்வின் மையப்பொருள் இந்திய-தமிழ்ச் சமூகத்தில் வேர்பிடித்து வளர்ந்து அழிக்கமுடியாத தன்மையில் நிலைகொண்டுள்ள சாதியை மாணவர்களை நோக்கிய கலைச்செயல்பாட்டில் ஈடுபடுவதும் பொதுத்தளத்தில் அரங்கேற்றுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சாதிய சமூகம் கட்டமைத்த ஏற்றத்தாழ்வு சமுதாயத்தை மாற்றி சமமான சமுதாயமாக விழைதல், தலித் மக்கள் நெடுங்காலமாக பண்பாட்டுத்தளத்தில் ஒதுக்கப்பட்டதால் அவர்களுடைய வாழ்க்கை முறை உயர்த்தப்பட்ட சாதியினரிடமிருந்து வேறுபட்டிருப்பதையும், ஒடுக்குண்டிருக்கும் வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளும் விடுதலையும் ஒவ்வொரு செயலும் மரபு மீறலும் ஒட்டுமொத்த அடிமை வாழ்விலிருந்து மீளும் தன்மை கொண்டதாகும். இதனை ஈருடல் உடல்மொழியாக-அசைவியக்கமாக சாதியத்திற்கொதிரான மாற்று உடல்மொழியை முன்வைப்பதோடு சாதி இந்துவாகப் பிறந்த பெண்களும் ஒடுக்கப்பட்ட பெண்களாகப் பிறந்த பெண்களும் பிறப்பால் ஒன்றே, சகஉயிரிகளே என்பதை முதலில் பெண் உணர வேண்டும் என்கிற அகிலாவின் எண்ணம் சாதிய விடுதலையோடு பெண்ணின விடுதலையும் மையப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பிற்குரியதாகும்.

தலித்தியத்தின்படி தலித்துகள் தங்கள் அவல நிலையிலிருந்து விடுதலை பெற மேற்கொண்டுள்ள குறிக்கோள்களும் வழிமுறைகளும் மற்ற சாதியினர் இடமிருந்து வேறுபட்டவையாக இருக்கும். குறிக்கோளில் அடிப்படையான வேறுபாடு சாதி சமன்பாட்டிற்கு பதில் சாதி ஒழிப்பை வேண்டுவதாகும். சாதி அமைப்பின் உயர் இடத்தைப் பெறுவதற்கு பதில் சாதி அமைப்பை உடைப்பது இல்லையென்றால் சாதி அமைப்பில் இருந்து வெளியேறுவது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையாகும். முரண்பாடுகளைக் கட்டிக்காக்கும் மதக்கொள்கைகளையும், சாதி சங்கங்களையும், சாதிச்சடங்குகளையும் வாழ்க்கை மதிப்பீடுகளையும் உருவாக்கும் தொன்மங்களையும் உயர்ந்தவையாகக் கருதுவதும், பண்பாட்டு பழக்கங்களையும் சாதிய விதிமுறைகளையும் எதிர்த்து மறுத்து உதறி எறியும் போக்கு மனிதர்களிடத்தில் வரவேண்டும் என்பதை நடன உடல்கள் வழியாக முன்மொழியப்பட்டுள்ளன. காதல்மணம் கொள்பவர்கள் உணர்வு ரீதியாக ஒன்றிணைவதோடு அறிவு ரீதியாகவும் சமூக இயங்கியலைப்புரிவதோடும், முன்மாதிரியான வரையறைகளை வளர்த்துக் கொள்வதும் அவசியமானவைகளாகும். இல்லையென்றால் கலப்புமணமும் சாதியத்தை உடைக்காமல் மீண்டும் சாதியத்திற்குள் செல்வதாகிவிடும். இதை நவீன நடனத்தோடு ஒப்புநோக்கமுடிகிறது. நடனத்தின் இறுதியாக சாதிய அடையாளமாக இருக்கும் இரு துண்டுகளையும் வேண்டாம் என்று எறிவது சாதிகளைத் தூக்கி எறிவது என்பதான காட்சி அழுத்தம் பெற்றுள்ளது.

நடனக்காட்சிவெளியில் சமூகப்பண்பாட்டு, பொருளாதாரத்தளங்களில் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மனநிலையினை வெளிப்படுத்தும் விதமாக அர்த்தப்படுகிறது. ஆதிக்க சாதியிடமும் துண்டு இருக்கின்றது. அதனுடைய அர்த்தம் என்பது வேறாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் துண்டு இருக்கிறது அதனைப் பயன்படுத்தும் முறை ஆதிக்கசாதியினர் பயன்படுத்தும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையை பெற்றிருப்பதை துண்டு குறித்த எதிர் கருத்தியலை முன்வைக்கிறது. நிறங்களின் வழியாக அர்த்தப்படும் துண்டு குறித்த அரசியலையும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொட்டால் பார்த்தாலும, ;ஆதிக்கசாதிக் குடியிருப்புகளில் நடந்தாலும் அவர்களின் மூச்சுக்காற்றுகூட மேல்பட்டால் தீட்டாக நினைக்கக் கூடிய பொதுப்புத்தி சார்ந்த கருத்தியல் இந்துத்துவ பார்ப்பனிய-சாதி இந்துக்களின் செயல்பாடாக இன்றளவிலும் நீடிக்கின்றது. தீண்டாமை எனும் வடிவம் இன்றைய சூழலில் மாற்றுவுரு கொண்டு செயல்படுவதை பல்வேறு நகர்வுகளின் மூலமாக தீண்டத்தீண்ட காட்சிப்படுத்துகிறது.

உயர்த்தப்பட்ட சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மனவெளியில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் உள் நுழைந்து நேசிப்பின் பரிசம் பெறுவது இயலாத காரியமாகவே ஆதிக்க மனநிலை கருதியது. காதல் என்பது மானுடத்தின் இயற்கை ஆதலால் காதல் செய்வீர் என்று எண்ணிய பாரதியின் எண்ணத்தோடு ஒப்பிடத்தக்கதாகும். காதலால் தான் சமூகத்தை மாற்றமுடியும் என்றெண்ணியே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலப்புத்திருமணம் செய்து கொண்டால் சலுகை வழங்கவேண்டும் என தந்தைபெரியார் கூறியது இதன் வழியாக சாதியற்ற நிலை அமைவதற்கான சாத்தியம் ஏற்படும் என்பது பெரியாரின் எண்ணமாக இருந்தது. இவ்வெண்ணத்தோடு ஒப்பிடும் வகையில் ஈருடல் நடனம் அமைந்துள்ளது. மௌனத்தின் வழியான திசைகளற்ற நிலையில் தங்களுக்கான திசைகளைக் காதலின் வழியாக சாதியற்ற சமூகம் படைக்க உருவாக்கப்பட்ட காட்சிகள் தமிழ்த்தொன்மை இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணர்வின் வெளிப்பாடுகளாக வெளிப்பட்டுள்ளன.

virali drama 636பரஸ்பரப்புரிதல், வாழ்வைப் பகிர்ந்து கொள்ளுதல், பெண் ஆண் சமத்துவமான நேசிப்பின் தன்மை ஒருவருக்கு ஒருவர் துன்பங்களை சுமந்து கொள்ளுதல், வாழ்வைப் பரிமாறிக்கொள்ளுதல், தன் வாழ்வின் திசைகளை பெண்ணே தேர்ந்தெடுத்தல், உடன்போக்கு மேற்கொண்டு அக வாழ்க்கையில் இருந்து இல்வாழ்க்கையில் நுழைதல் இவ்வாறான தொன்மை இலக்கியங்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக கொண்டுவந்து நடன நகர்வின் வழியாக காடசிப்படுத்தியதோடு காதலுக்குப் பின்னான இருவேறு குடும்பத்தின் செயல்பாடுகளையும் சாதியத்தால் வதைபடும் நிலையினையும் ஆதிக்க மனநிலை படைத்தவர்களின் செயல்பாடாக இருப்பதை இரு உடல்களின் காதல் காட்சிகளில் அர்த்தம் புலப்படுகிறது. இதற்குஅடுத்த காட்சி நிகழ்வாக சாதியத்தால் இருவரையும் பிரித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்குவது என்பது சாதி இந்துக்களால் நிறைவேற்றப்படுகிறது. அடக்குமுறையின் ஒட்டுமொத்தத்தையும் இருவரின் மேல் செலுத்துவது ஆதிக்க உணர்வின் வெளிப்பாடாகும் என்பதை இதன்வழிப் புரியமுடிகிறது. இரு உடல்கள் இணைவதால் இருஉயிர்களைக் காவு வாங்கும் அளவிற்கு சாதியம் செயல்படுகிறத. சட்டங்களால் தண்டிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இது அரசின் மெத்தனப்போக்கு என்றே சொல்லலாம். இந்த நிலையினால் எண்ணற்ற சாதிய ஆணவப் படுகொலைகள் வெளிச்சத்திற்கு வராமலேயே தற்கொலைகளாக மாற்றியமைக்கப்படுவதையும் பார்க்கமுடிகிறது. தற்கொலைகளாக மறைத்த நிகழ்வும் நடந்தேறிவருகிறது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை தீண்டத் தீண்ட நாங்கள் காதலாலும் மீண்டெழுவோம் என காட்சிகளின் வழியாகப் புரிதலுக்கு இட்டுச் சொல்கிறது.

உள்ளே நுழையும் நடிக உடல் வழியாக உறுமி இசைக்கு ஏற்றவாறு சாதிய ஆணவத்தில் அலைந்து திரியும் மனிதக் கூட்டத்தைக் காட்சியில் நடன நகர்வில் காட்சிப்படுத்தப்படுகிறது. தன் கழுத்தில் போடப்பட்ட துண்டு அதிகாரத்தின் ஆணவக் குறியீடாக அர்த்தப்படுகிறது. நெஞ்சை நிமிர்த்தியும் தோலைத் தட்டியும் மீசையை முறுக்கியும் இருமாப்பில் தொடை தட்டிக்கொண்டும் வலம் வருவது சாதிய ஆதிக்க வெளிப்பாட்டின் தன்மையில் அமைந்துள்ளது முதல் காட்சியில் இதை நடன அசைகளின் மூலமாக வெளிப்படுத்திய அகிலா தன் முகபாவனையை முக்கியத்துவத்தையும் உடலை பிரதானப்படுத்தி அர்த்தப்படுத்துவதையும் சாத்தியப்படுத்தியுள்ளது. தன் நெஞ்சை நிமிர்த்தி துண்டை தலையில் கட்டிக்கொண்டு, அந்தத் துண்டை தோள் மேல் போட்டுக்கொண்டும் நேர்கொண்ட பார்வையால் அதிகாரத்தை வெளிப்படுத்துமான சாதி ஆதிக்க திமிரின் உச்சத்தை நடன நகர்வின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கு சாதி ஆதிக்க வெளிப்பாட்டின் பிம்பங்களாக நிமிர்ந்து பார்த்தல், தன் உடலை உயர்த்திக் காட்டிக் கொள்ளுதல் தன் தோளை உயர்த்தி கொள்ளுதல் தன் தொடையை தட்டி கொள்ளுதல் தன் ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டுதல், மீசையை முறுக்குதல், ஒடுக்குமுறையை கையாளுதல் முதுகெலும்பை நிமிர்த்தி நடத்தல் இச்செயல் உடல்சார்ந்த செயல்பாடாக நடன வெளிப்பாடு சாதி இந்துக்களின் அடாவடித்தனத்தை வெளிச்சமிட்டு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நகர்கிறது தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்; அடுத்த காட்சியில் ஒடுக்குண்ட மக்களின் காட்சியாக சந்திரனின் நடன நகர்வு அரங்கில் வியாபிக்கிறது இவர் கையில் இருக்கும் துண்டு தோலில் இல்லாமல் தன் கை இடுக்குகளில் மடித்து வைத்துக் கொள்வதும் இடுப்பில் கட்டிக் கொள்வதும் பயம் கலந்த பார்வையை வெளிப்படுத்துவதும் கூனிக் குறுகி நடப்பதும், ஆதிக்கத்தின்அருகாமையில் தான் முதுகெலும்பை வளைத்து நடப்பதுமான நடன நகர்வு சாதி இந்துக்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தின் வெளிப்பாடாக நடன நகர்வு அமைந்துள்ளது. முதல் காட்சியில் வெளிப்படும் நடனம் பொதுவெளியில் ஆதிக்க சாதியினரின் செயல்பாட்டினை மய்யப்படுத்துவதையும் இதற்கு நேராக பொதுவெளியில் தாழ்த்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வியலை மையப்படுத்தியும் இருவேறு தன்மையில் செயல்படும் ஆதிக்க உடல்ஒஒடுக்கப்பட்ட உடல் இவ்விரு உடல்களின் பொதுவெளியில் இயங்குதலை அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. வளைந்த தாழ்த்தப்பட்ட உடல் நிமிர்ந்த உடலாக உருவாக வேண்டும் என காட்சிப்படுத்தப்ட்டுள்ளது. சாதிகளை மறுத்து ஈருடல் இணைந்து ஓருடலாக பரிணாமம் கொள்ளும்பொழுது அங்கு சாதியற்ற சமூகம் உருவாகும் என்பதை இதன்வழி அவதானிக்கலாம்

நேசிப்பு கொண்ட இருவரின் மேல் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்க்க குறியீடாக துண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. வாயை மூடிக்கொள்ளவும் கண்களை இறுகக் கட்டிக் கொள்ளவும் செய்கிறது. வீட்டுக்குள் சிறைப் படுத்தப்படுவதும் அதிலிருந்து மீளமுடியாமல் கட்டுண்டிருப்பதுமான தன்மைகளில் இருவேறு கைகளில் இருக்கக்கூடிய துண்டு ஆதிக்கத்தின் ஒருமைப்படுத்தப்பட்ட தன்மைகளிலேயே துண்டு பரிணாமம் கொள்கிறது. ஆதிக்கக் கட்டுமானத்தின் குறியீடுகளை விளக்கும் இருவேறு துண்டுகள் ஒடுக்குமுறைகளின் குறியீடுகளாக அமைகின்றன. ஒடுக்குமுறையிலிருந்து விடுபட தன் உடலின் மூலமாக வல்லமை கொண்டு எதிர்க்கக்கூடிய நடன நகர்வைத் தன்னகத்தே கொண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஈருடல் நடன நிகழ்த்துதலில் இறுதியாக ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து சாதிகளற்ற சமூகம் மயமாவதை வெளிப்படுத்துகிறது கலப்பு மட்டுமே சாதியை நீர்த்துப்போகச் செய்வதும் இல்லை அது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கக்கூடியது. சாதியை அழிக்கும் உத்வேகம் காதலுக்கு இருப்பதாக பாரதிதாசனின் கருத்துநிலை அவரின் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. இதனோடு இணைத்துப் பார்க்கின்ற தன்மையை தீண்டத் தீண்ட ஏற்படுத்துகிறது.

தீண்டாமை எனும் செயல் சாதியாதிக்க புரையோடிய சமூகத்தின் செயலாகும். இச்செயல் சமூகத்தின் வளர்ச்சியற்ற பிரிவுவாதத்தை முன்வைக்கிறது. பிரிவினைக்கு வழிகோலும் தீண்டாமை பிறப்பின் அடிப்படையிலும் வர்ணப் பாகுபாட்டினை உள்ளடக்கியது இந்த வர்ணப்பாகுபாடு பிரிவினையின் ஏற்றத்தாழ்வுகளை கட்டமைக்கிறது ஏற்றத் தாழ்வு நிலை பெற நினைப்பவர்கள் ஜாதியை முன்னிலைப் படுத்துகிறார்கள் அதனை காப்பாற்ற நினைத்து கலப்பு மணம் சார்ந்த காதலை எதிர்க்கிறார்கள் காதல் கொள்ளும்போது அகமணம் மாற்றம் பெறுகிறது. சாதியக் கலப்பு உருவாகிறது. இக்கலப்பினை ஜீரணிக்காத ஆதிக்கசாதிகள் கலப்பு மணத்திற்கு எதிர்ப்பு உணர்வினை வெளிப்படையாகவே காட்டுகிறார்கள். இந்த எதிர்ப்புணர்வின் உச்சத்தில் காதல் கொள்ளும் இரு ஜீவன்களை காவு வாங்க துடிக்கின்றது ஆதிக்க சாதிகள். வெளிப்படையாகவும் எல்லோரும் பார்க்கும் வகையிலும் இவர்களை வன்மையாக பொதுவெளி என்று கூட பாராமல் அரிவாளால் தாக்கப்படுவதும் உண்டு. தீண்டாதே தொடாதே என ஆதிக்கம் பொதுவெளியில் கருத்தைத் திணித்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் உடல்களை எரித்தாலும் காதலால் தீண்ட தீண்ட மீண்டும் உயிர் பெறுவோம் என்பதை நடன மொழிகளின் மூலம் சமூகப் பிரச்சினையை முன்வைக்க முடியும் என்பதை அகிலா அர்த்தப்படுத்தியுள்ளார். ஆதியில் சொற்கள் இல்லாத மொழிதல் இருந்தது அதன் வழியாக எல்லோரையும் தன் அசைவியக்கத்தில் ஐக்கியப்படுத்தும் நடன நகர்வால் சாத்தியப்படுத்த முடியும் என்பதை காட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ள விதம், ஆதி நிகழ்த்துதல் சார்ந்த செயல்பாடாக இதனைப் பார்க்கமுடிகிறது. தீண்டத் தீண்ட எதிர் கருத்துகளை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் புரிதலோடு வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தன்மையில் சாதியத்தை வேரறுக்க எத்தனிக்கிறது. சாதிய அடக்குமுறை இதனோடு ஒன்றிணைந்து செயல்படும் பெண்ணடிமைச் செயல்பாடுகளை களைவதற்காக பெண் மைய தன்மையில் காதலை புரிந்து கொள்வது பெண்ணின் வழியான சாதியத்தை தூக்கி எறிவதுமான பெண்வழி திசைகாட்டும் பயணமாகவே தீண்டத் தீண்ட ஈருடல் நடனம் அமைந்துள்ளது.

நடனத்தில் ஆதிக்கத்தை வெளிப்படுத்த அடிமைத்தனத்தைக் காட்சிப்படுத்த முகபாவனை முக்கியத்துவம் பெறுகிறது. காதல் சார்ந்தும் வறட்டுத்தனமான சாதிய ஆணவத்தால் தாக்குதலுக்கு ஆளாகும்போதும் தாக்குதலில் இருந்து விடுபடும்போதும் இங்கு முகபாவனை சமநிலைப்படுத்தப்பட்ட பாவனையிலேயே வெளிப்பட்டுள்ளது. தன் சாதிக்கு வேண்டுமானாலும் தாழ்ந்தவனாகத் தெரியும், காதல் உள்ளம் கொண்டவன் தனக்கு உயர்ந்தவனே;காதல் கொண்டவருக்கு தன்குடுப்பம் தீங்கு நினைத்தால் அதைத்துணிந்து எதிர்க்கும் ஆற்றல் பெண்ணுக்கு வேண்டும் என்பதை நடிப்பின் வழியாக அறியமுடிகிறது. ஒட்டுமொத்த உடலை பன்முக அர்த்தமாக, வலிக்கான உடலாக, தேடலுக்கான உடலாக, அடிமைக்கான உடலாக, அதிலிருந்து மீண்டு அதிகாரம் பெறுவதற்கான உடலாக, எதிர்ப்பின் உடலாக, பொதுபுத்தி உடற்செயல்பாற்றிக்கு மாற்று உடலாக, தீண்டாமை உடலில் இருந்து தீண்டும் உடலாக எனப்பல பரிணாமம் கொள்கின்றன ஈருடல் நடனம். இவ்வுடல்கள் வேறுதளத்திற்கு எடுத்துச்செல்வதோடு சமகாலத்திற்கான பொருண்மைகளை நவீன நடனக்காட்சிகளின் வழியாக மாணவர்களின் மத்தியில் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்துதான் புதிய சமூகம் படைப்பதற்கான உந்துசக்தி இருப்பதை நடனக்கலைஞர் அகிலா உணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சமூக மாற்றத்திற்கு தன்னின் பங்களிப்பை தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்படவேண்டும் என்று நினைத்து நடனக்கலை வழி சாதிய அடிப்படைவாதத்தையும் சாதியத் தாக்குதல்களையும் மாற்ற முடியும் என முன்னெடுத்து வருகிறார். இச்செயல்பாடுகள் போல் திரைப்படங்களிலும் சாதியத்திற்கு எதிராக மாற்று சினிமாவை தொடந்து முன்வைத்து திரைப்படங்களும், அரங்கச்செயல்பாடுகளும் வரவேண்டிய தேவையும் இருக்கின்றன. ஆனால் இதற்கு மாறாக சினிமாக்கள் தான் சாதியத்தைக் கட்டிக் காக்கிற வேலையைப் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. மாற்றுச்சிந்தனைகளை முன்வைக்கும் கலைச் செயல்பாட்டாளர்கள் ஒற்றிணைந்தே சாதிய சமூகத்தை மாற்றமுடியும். இதனை மாற்று கலைச்செயல்பாட்டாளர்கள் உணரவேண்டிய தேவையுள்ளது.

உரையாடல்கள் வழி சொல்லக்கூடிய கனமான கருத்தினை சொற்களற்ற நடனம் (Non Verbal Dance) வழியாக சமூக மாற்றத்திற்குத் தேவையான நடனத்தை விறலிக் குழு நிகழத்தி வருகிறது. தீண்டத்தீண்ட எனும் இந்நடன நிகழ்வு செப்டம்பர் 17 2018 கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாத்திமா கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, லேடி டோக் கல்லூரி என மதுரையில் உள்ள கல்லூரிகளிலும், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வை நிகழ்த்திவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

- ம.கருணாநிதி, உதவிப்பேராசிாியா், தமிழ்த்துறை, அருள் ஆனந்தா் கல்லூாி, கருமாத்தூா்

Pin It