17.06.2013 அன்று மாவட்டத் தலைநகர்களில் ஆர்பாட்டம் 

தமிழக அரசு தமிழகமெங்கும் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கில வழி வகுப்புப் பிரிவுகளை நடப்புக் கல்வி ஆண்டில் தொடங்குகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் ஆங்கிலவழி மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறோம். என்கிறது தமிழக அரசு.

அறிவியல், கணிதம், சமூகவியல், வணிகவியல் போன்ற பாடங்களை எல்லாம் ஆங்கில மொழி வழியாக ஒன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை படித்தால் அந்தப் பிள்ளைகளுக்குத் தங்கள் தாய்மொழியான தமிழ் எதற்குத் தேவைப்படும்? கல்விக்குத் தமிழ் தேவைப்படாத போது பேச்சு வழக்கிலும் தமிழ் பயன் படுத்தப்படாத நிலை உருவாகும். தற்போது தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருக்கிறது. ஆனால் சட்டப்படி அது கட்டாயமில்லை. தமிழ் அல்லது ஏதாவதொரு இந்திய மொழியை எடுத்துக்கொண்டால் போதும்.

இப்போது, அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி வகுப்புகளும் இருக்கும். ஆனால் தமிழ்வழி வகுப்புகளில் மாணவர்களைப் பெற்றோர்கள் சேர்க்கமாட்டார்கள். தமிழ்வழி வகுப்புகளுக்குப் போதிய மாணவர்கள் சேரவில்லை என்று கூறி, அவற்றை அரசு மூடிவிடும் தமிழைப் புறக்கணித்த தனியாரின் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் போல் தமிழக அரசுப் பள்ளிகளே மாறிவிடும்.

தமிழக அரசின் அலுவல் மொழிகளாக இப்போது தமிழும் ஆங்கிலமும் இருக்கின்றன. மேற்படி நிலை தொடர்ந்தால், தமிழக அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

தமிழ் எங்கும் தேவைபடாத மொழியாகத் தமிழ்மண்ணிலேயே ஆகிவிடும். தமிழ்நாட்டில் கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தமிழ் இல்லை என்றால் தமிழர் என்ற இன அடையாளமும் இல்லாமல் போகும். தொழில், வணிகம், வேலை ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் அயல் இனத்தார்க்குக் கீழ்ப்பட்ட இரண்டாம் தர மக்களாக தமிழர்கள் தமிழ் மண்ணில் ஆகிவிடுவார்கள்.

மொழியைப் இழந்த மக்கள் இன அடையாளத்தை இழப்பார்கள். இன அடையாளத்தை இழந்த மக்கள் ஆட்சி உரிமையை இழப்பார்கள். மற்றவர்களுக்கு வாக்களிப்பவர்களாக, இலவசங்களுக்கு ஏங்கும் நுகர்வோராக வாழ்வார்கள். ஆட்சி உரிமை பெற்ற மக்கள் என்ற பெருமிதத்தை, உளவியலை தமிழர்கள் இழந்து இரண்டாம் தர மக்கள் ஆகிவிடுவர்.

இந்த பேரழிவு ஏற்படாமல் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். அது பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

1. ஒன்று முதல் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்குத் தமிழக அரசு வேலை வாய்ப்பில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சட்டமியற்ற வேண்டும். அதே போல் அவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விச் சேர்க்கையில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2.    அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்படவேண்டும்.

3.    அரசுப்பள்ளியிலும் தனியார் பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழி, கட்டாயப்பாட மொழி (Language) என்று சட்டமியற்ற வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம், அல்லது ஓர் அயல் மொழியைப் பாட மொழியாகக் கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

4.    கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டமியற்ற வேண்டும்.

5.    +1 தேர்வை அரசுத் தேர்வாக வேண்டும். 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்புப்பாடத்தை நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமைத்தை நீக்க வேண்டும்.

6.    நடுவண் அரசுத் தேர்வுகளைத் தமிழில் எழுத உரிமை வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.

7.    கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் 28.5.2013 அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்க வாயிலில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தியது. சற்றொப்ப 300 பேர் தளைப்படுத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கல்லூரிகளில் தமிழில் தேர்வெழுத விதிக்கப்பட்ட தடையை அன்று பிற்பகல் தமிழக அரசு நீக்கிக் கொண்டது.

மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தக்கட்ட இயக்கமாக 17.6.2013 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

5.6.2013 அன்று சென்னையில் நடந்த தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பெ.மணியரசன் (த.தே.பொ.க.) மல்லை சத்தியா (ம.தி.மு.க.) குணங்குடி அனிபா (த.மு.மு.க.) தபசிக் குமரன் (தி.வி.க.) வழக்கறிஞர் அமர்நாத் (த.பெ.தி.க.) தியாகு (த.தே.வி.இ) தமிழ்நேயன் (த.தே.ம.க) திருமுருகன் (மே17) அருண்சோரி (த.நா.ம.க.) அதியமான் (த.மு.க.) வேலுமணி (த.எ.இ), கி.த.ப. (த.உ.கூ) ம.கணபதி (தலைநகர்த் தமிழ்ச் சங்கம்) பேரா. பிரபா கல்வி மணி (ம.க.இ) உதயை மு.வீரையன், புலவர் இரத்தினவேலு, ப.வடிவேலு (சிந்தனையாளன்), சி.பா.அருட்கண்ணனார், சுடரொளி (குழந்தைகளைக் கொண்டாடுவோம்) வழக்கறிஞர் திருமலை, மாணவர் மூ.தினேசு, அ.து.பிராசிங் (த.நா.கு.மு.) எண்ணம் தனசேகரன், அருணமுறுவல், உமா, தமிழ்ச்சமரன், பாலா, வெற்றித்தமிழன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Pin It