கமல்ஹாசன் தனது நாலு வயதில் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் அவருக்கு சினிமாவின் சகல துறைகளும் அனைத்து அம்சங்களும் அத்துப்படியாகிவிட்டது. அதனால்தான் 50 ஆண்டுகளானாலும் தனது நட்சத்திர பீடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. அறிவுஜீவிகளின் உறவும், ஆழ்ந்த வாசிப்பும் கமலை சகலகலாவல்லவராக்கியுள்ளது. உலகசினிமா பற்றிய ஒப்பற்ற ஞானமும் அவரை மாபெரும் கலைஞராக்கியுள்ளது.
நான்கு வயதுச் சிறுவனால் துருதுரு என்று இருந்த கமலை களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைத்தனர். அந்தக்காலத்தில் குழந்தை நட்சத்திரமாய்ப் புகழ்பெற்றிருந்த டெய்சிராணியின் கால்சீட் கிடைக்காததால் கமலுக்குச் சான்ஸ் ஆகிவிட்டது. சிறுவன் கமலிடம் தயாரிப்பாளர் நடிக்க வருகிறாயா என்று கேட்ட போது "பிளைமவுத்"கார் கொடுத்தால் நடிக்கிறேன் என்று பதில் வந்தது. மறுநாள் ஒரு புதிய பிளைமவுத் கார் வந்து கமலை ஸ்டுடியோவுக்கு ஏற்றிச் சென்றது. இதுதான் கமலின் நடிப்புத் துவங்கிய விதமாகும்.
கமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பரத நாட்டியம் முழுமையாய்க் கற்றார். அதை சதங்கை ஒலி படத்தைப் பார்த்தால் புரியும். அத்துடன் கராத்தே, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களையும் பயின்றார். அதை தேவர் மகன் உள்பட பல படங்களில் அந்தப் பயிற்சியைக் காண முடியும். அவர் வளர்ச்சி பெற்று வந்த காலம் எம்.ஜி.ஆர். - சிவாஜி இருவரும் கொடி கட்டிப் பறந்த காலமாகும். அக்காலத்தில் கமல் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் காலம் கிராமங்களின் பொற்காலமானது. அவரது பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணியாக நடித்ததில் வேறு எவராலும் இப்படி நடிக்க முடியாது என்று கூறத்தகுந்த அளவுக்கு கமலின் நடிப்பு புகழ்பெற்றது. பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு மனநோயாளியாக நடித்து படமும் வெற்றிபெற்றது. தொடர்ந்து ஏராளமான படங்கள், வித்தியாசமான கதைகள், வித்தியாசமான கேரக்டர்கள் நடித்து தனக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டார். ஏக் துஜே கலியே என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து இந்திப் பட உலகில் நற்பெயர் பெற்றார். ஆனால் ஏனோ அவரால் இந்தியில் நீடித்து நிலைக்க முடியவில்லை.
கமல் ஒரு அறிவு ஜீவி. அதிகமாய் நூல்கள் படித்தவர்; படித்துக் கொண்டிருக்கிறவர். உலக சினிமாத் துறையினரோடு உயிரோட்டமான தொடர்பு கொண்டிருப்பவர். திரைக்கதையாக்கம், உரையாடல், எடிட்டிங் முதல் இசை வரை அனைத்துக் கலைகளையும் அறிந்த ஒரே நடிகர் கமல் என்றால் அது மிகையானது. ஹீரோ, வில்லன், பெண் வேடம், முதல் காமெடி ரோல் வரைக்கும் கலக்கியவர். அலாவுதீனும் அற்புத விளக்கிலிருந்து அவ்வை சண்முகி வரைக்கும், அபூர்வ ராகங்களிலிருந்து கல்யாணராமன் வரைக்கும் அவரது தனித்துவமான நடிப்பாற்றலை தமிழகம் கண்டது. அவரது பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
கமலின் ராஜபார்வை, வாழ்வே மாயம் போன்ற சில படங்கள் தோல்வியடைந்தன. கமலுக்கு வில்லனாக நடிக்க கர்னாடகத்திலிருந்து வந்த கண்டக்டர்தான் ரஜினிகாந்த். கமல் படங்கள் தோல்வியடைந்த காலத்தில் ரஜினி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன. இதனால் ரஜினி சூப்பர் ஸ்டாராகி கமல் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். பயங்கரவாதத்துக்கு எதிராக கமல் எடுத்த படங்கள் கூடத் தோல்வியடைந்தன. கமலை வைத்துப் படமெடுத்தால் செலவு அதிகமாகும் என்ற கருத்தும் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு உண்டு. ஆனால் இந்தியன் போன்ற படங்கள் பெரும் வெற்றிபெற்றன. லஞ்ச ஊழல்களுக்கெதிரான கருத்தையும், தேசபக்த உணர்வையும் ஊட்டிய படம் அதுவாகும். அவரது தேவர் மகன் தனிச்சிறப்பு வாய்ந்தது.
அவர் மிகச்சிறந்த அறிவுஜீவி என்பதற்கும் முற்போக்காளர் என்பதற்கும் எடுத்துக் காட்டான படங்கள் அன்பே சிவமும், தசாவதாரமும் ஆகும். அற்புதமான கருத்துக்களை, இடதுசாரிக் கருத்துக்களை எடுத்துக் கூறிய அன்பே சிவம் தோல்வியடைந்தது வேதனைக்குரிய விசயம். தசாவதாரம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
தற்போது "ஒரு புதன்கிழமை" என்ற ஆங்கிலப் படத்தை "உன்னைப் போல் ஒருவன்" என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார். பெயர் வைப்பதற்கு பெரிய ஜாம்பவானான ஜெயகாந்தனை நாடியிருக்கிறார். தன்னை நடிக்க வைக்குமாறு இளம் டைரக்டர் மிஷ்கினைப் பணித்திருக்கிறார். அவரது மருதநாயகம் முதல் மர்மயோகி வரை லட்சியங்களாகவே நிற்கின்றன.
கமல் திரையுலகில் கால் வைத்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது அடுத்த ஐந்து பத்தாண்டுகள் முற்போக்குத் திசையில் மக்களை மகத்தான சமூக மாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் விதத்தில் அவரது பயணம் தொடரட்டும்.
- எஸ்.ஏ.பி.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
செம்மலர் - அக்டோபர் 2009
கமல் எனும் மகத்தான கலைஞன்
- விவரங்கள்
- எஸ்.ஏ.பி.
- பிரிவு: செம்மலர் - அக்டோபர் 2009