இந்தியாவின் ஜனநாயகம் சிதிலமடைந்த கட்டடம்: ஊடகம் அதன் துரு பிடித்த தூண்
மிகவும் அருவருப்பான மனநிலையோடுதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். தமிழில் வெகுமக்கள் ஊடகங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளராக அருவருப்பைத் தவிர வேறெந்த உணர்வை அடைந்துவிட முடியும்? உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன! இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை! பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன! வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம் செய்தியாகும் / காட்சியாகும் என்பதற்கு நாள்தோறும் பல சான்றுகளை நாம் குறிப்பிட முடியும். என்றாலும் இந்த அருவருப்பு மனநிலைக்குத் தள்ளிய மூன்று முக்கியமான விஷயங்களை முதன்மையாகப் பட்டியலிட விரும்புகிறேன்.
1
தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஹமாம் சோப்' விளம்பரம் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையைக் கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பனக் குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோடு விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விளையாடிக் கொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்டுல இந்த சந்தேகமெல்லாம் ஏங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை இழுத்து அடித்தபடி அவர் இப்படிச் சொல்கிறார்: “ஆட்டோவுல அந்தக் குழந்தைங்களோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதைச் சொல்லும்போது அவர் கண்களிலும், உடல்மொழியிலும் வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.
‘அந்தக் குழந்தைகள்' என்று அவர் குறிப்பிடுவது யாரை? எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையா? தொழு நோயாளிகளையா? இவைகூட தொற்றுநோயில்லையே! பொத்தாம் பொதுவாக அந்தக் குழந்தைகள் என்று குறிப்பிடுவது, மற்ற எல்லா குழந்தைகளையும்தானே. அப்படியானால், அந்த ஒரு சிறுமியைத் தவிர மற்ற குழந்தைகள் சொறியோடு சுத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுகிறது! ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து போவது, தெருவில் சொறிநாயோடு விளையாடுவதற்கு சமமா என்ன? இதைவிடவும் நிர்வாணமாக சாதிய வக்கிரத்தை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்?
ஒரு சோப்பை உயர்த்திப் பிடிக்க இவர்கள் இழிவுபடுத்த நினைப்பது யாரை? விளம்பரக் களம் ஒரு பார்ப்பன வீடு என்பதால், காலங்காலமாகத் தொடரும் தீண்டாமையின் அடிப்படையில் இவர்கள் குறிப்பிடுவது தலித் குழந்தைகளை என்று வைத்துக் கொள்ளலாம் தானே! எந்தத் தணிக்கையுமின்றி இந்த விளம்பரம் நாள்தோறும் பல நூறு முறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நம் சுயமரியாதையை கொஞ்சம்கூட அது சுண்டவில்லை. கிராமத்தின் தேநீர்க் கடைகளில் இருக்கும் பேதத்தை கவனிக்கும் நாம், நகரங்களில் சாதியின் நவீன வடிவங்களை சற்றும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த விளம்பரத்தை எதிர்த்து ஒற்றைக் குரல்கூட ஒலிக்காதது, சாதி எதிர்ப்பாளர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தேடலை உருவாக்கி விட்டிருக்கிறது.
பொதுவாகவே, சோப்பு விளம்பரங்களும் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களும் பெண்களை குறிப்பாக கறுப்பான பெண்களை (இப்போது கறுப்பான ஆண்களும் குறிøவக்கப்பட்டிருக்கிறார்கள்) இழிவுபடுத்தும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன! கறுப்பு என்பது ஓர் இனத்தின் நிறம். அதை அழிக்கவோ மாற்றவோ முற்படுவது, இன அழிப்பில் ஈடுபடுவதற்கும் நிறவெறியைத் தூண்டுவதற்கும் சமமானது. கறுப்பானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சி. அதனால்தான் இந்த விளம்பரங்கள் எந்தத் தணிக்கையும் இன்றி வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘என் நிறத்தை இழிவென்று சொல்வதற்கும் அதை மாற்ற முயல்வதற்கும் நீ யார்?' என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை! கறுப்பாக இருப்பதை கேவலமாக சித்தரித்து, 'நிறம் வெண்மையாக இந்த சோப் போட்டு குளியுங்கள், இந்த கிரீமை பூசுங்கள் என்று நாள்தோறும் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. விற்பனைக்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விற்கலாமா?
வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று இந்த விளம்பரங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவை காலங்காலமாக இந்த சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் அடிமைக் கருத்தியல்களை நவீனத்தோடு இணைத்து வளர்த்தெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கின்றன. பார்ப்பன மனோபாவத்தோடு, பார்ப்பனர்களை முன்வைத்து, அவர்களாலேயே, அவர்களைக் கொண்டுதான் பெரும்பாலும் எல்லா விளம்பரங்களுமே வெளிவருகின்றன. பார்ப்பன வாழ்வியலையும் சாதிய மேலாதிக்கத்தையும் மட்டுமே இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக, குளியல் சோப் உள்ளிட்ட அழகு சாதனப் பொருள்களை பரிந்துரை செய்பவர்கள் பெரும்பாலும் ‘அவா பாஷை' பேசும் பார்ப்பனர்களே! சுத்தமும் அழகும் பார்ப்பனர்களின் உடைமை என்ற புழுத்துப்போன ஆதிக்கக் கருத்தியலை இன்று பல விளம்பரங்கள் முன்னிறுத்துகின்றன.
இந்தியாவில் பாகுபாடு என்பது சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கிறது! மேற்கத்திய நாடுகளைப் போல நிறத்தினால் அல்ல. அதனால் சாதிப் பெயர் சொல்லித் திட்டினாலோ கேலி செய்தாலோ அது வன்கொடுமை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிறத்தை இழிவுபடுத்தினால் அது சாதாரணம். ஆரியர்களின் ஆதிக்கம் வெள்ளை மோகத்திற்கான முதல் விதையைத் தூவியது. வெள்ளையர்களின் வருகை அந்த விதைக்கு நீர் பாய்ச்சியது. தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக வெள்ளையை உயர்த்திப் பிடிக்கவும் கறுப்பை தாழ்த்தவும் செய்தது இவர்கள்தான்! இருள், அமாவாசை, துக்கம், இழப்பு, ஆகாத காரியம், அபசகுனம், மரணம் ஆகியவற்றை கறுப்போடும்; பகல், பவுர்ணமி, மகிழ்ச்சி, நிறைவு, லாபம், நல்ல நிகழ்வுகள், பிறப்பு இவற்றை வெண்மையோடும் ஒப்பிட்டு – கறுப்பின் மீதான வெறுப்பை மத நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி தீவிரப்படுத்தியதும் இவர்கள்தான். மதத்தைக் கடந்து ஆரியர்களையும் ஆங்கிலேயர்களையும் ஒன்றிணைய வைத்தது, அவர்களின் நிறமும் அதனால் உண்டான ஆதிக்க புத்தியுமே.
சாதி வன்மத்தைப் போலவே கறுப்பின் மீதான வெறுப்பு, காலங்கள் கடந்து பல வடிவங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறது. நாகரிகத்தின் அடையாளமாக வெண்மையே இங்கு முன்னிறுத்தப்படுகிறது. கறுப்பாக இருந்தால் சாதிக்க முடியாது. கறுப்பானவர்களுக்கு மரியாதை கிடைக்காது. கறுப்பு என்றாலே புறக்கணிப்புதான் என்öறல்லாம் ஒரு கருத்தியலை உருவாக்கி, சமூகத்தின் மூளையில் அது ஆழ பதியவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பதாக சொல்லத் தொடங்கினோம் நாம். ‘இருந்தாலும்' என்ற இந்த இழிவு கறுப்பின் மீது நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. கறுப்புக்கும் அழகிற்கும் தொடர்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தத்தான் களையாக இருக்கிறார்கள் என்ற ஆறுதல் பரிசு! காலங்காலமாக இந்த ஆறுதல் பரிசோடுதான் கறுப்பானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
சாதி மற்றும் நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களின் மூளையில் பரவிக் கிடக்கும் இந்த அடிமைக் கருத்தியலை மிக வேகமாக வரித்துக் கொண்டதும், வியாபாரத்திற்கான உத்தியாக மாற்றியதும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான். கறுப்பாகப் பிறப்பதும் இருப்பதும் பெருங்குற்றமென்றும், தங்கள் பொருட்களை தடவினால் அந்த அவலத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் கூவியபடி, நாள்தோறும் எண்ணற்ற வகைகளை சந்தையில் இவை இறக்குகின்றன. நிறத்தை மட்டுமே குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தவர்கள், ஹமாம் சோப் விளம்பரத்தின் மூலம் வெளிப்படையான சாதிப் பாகுபாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்தாக வேண்டும்.
2
இந்த ஆண்டு தீபாவளியின் ஊடகக் கதாநாயகன் கமல்ஹாசன். காரணம், அவரே தயாரித்து நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம். இதன் மூலம் இந்தியில் வெளிவந்த ‘வெட்னஸ்டே' திரைப்படம். மொத்தமே நான்கைந்து முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான தமிழ் திரைப்படத்திற்குரிய பகட்டு வேலைகளும், பேண்டஸியும் இல்லை என்பதால் இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி, நேரடியாக எந்த இடர்ப்பாடுமின்றி சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பிரதிநிதியாக தன்னை அறிமுகப்படுத்ததிக் கொள்ளும் கமல்ஹாசன், குறிப்பிட்ட நான்கு தீவிர
வாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கட்டளைக் கோரிக்கையோடு, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்துவிட்டு காத்திருக்கிறார். ஆனால், உண்மையில் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்வது அவர்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல; பொதுமக்களின் பிரதிநிதியான கமல்ஹாசனே தன் திட்டப்படி அவர்களை கொல்வதற்கு!
இந்து மதத்தையோ இஸ்லாத்தையோ குறிப்பிட்டு குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருப்பது தெரிந்தாலும் அது வெறும் மேல்பூச்சு வேலைதான். திரைப்படம் தொடங்குவதிலிருந்து கடைசி வரை, ‘முஸ்லிம்களே தீவிரவாதிகள், அவர்களை எதிர் தீவிரவாதச் செயலால் மட்டுமே அழிக்க முடியும்' என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கொல்வதற்கு கமல் தேர்ந்தெடுக்கும் நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர் முஸ்லிம்கள். ஒருவர் மட்டும் இந்து. ஆனால் இவர் வெடிகுண்டுகளை வீசி பொது மக்களை கொல்பவரல்ல; பணம் கொடுத்தால் யாரைக் கொல்லவும் வெடிகுண்டுகளை சப்ளை செய்பவர். தீவிரவாதிகள் சதவிகித அடிப்படையில் மூன்று முஸ்லிம்களுக்கு ஓர் இந்து என்று கணக்கிடப்பட்டிருப்பது எதனால் என்று சொல்லப்படவில்லை. ஆனால் ‘இந்த நால்வரையும் சீட்டுக் குலுக்கிப் போட்டே தேர்ந்தெடுத்தேன்' என்று ஓரிடத்திலும், ‘வெறும் முஸ்லிம்களாக மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதால்தான் ஓர் இந்துவையும் சேர்த்துக் கொண்டேன்' என்று வேறொரு இடத்திலும் முரண்பாடாக சொல்கிறார் கமல். வெடிகுண்டு வியாபாரியான இந்து கதாபாத்திரம் பார்ப்பதற்கு பரிதாபமானவராக, நகைச்சுவை கதாபாத்திரத்தைப் போல வெகுளியானவராக, ஒரு சுத்தமான வியாபாரியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம் கதாபாத்திரங்கள் கண்களில் குரூரத்தோடும் வெறியோடும் வன்மத்தை சுமந்து கொண்டு பழி தீர்க்கக் காத்திருப்பவர்களைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் தீவிரவாதக் கதாபாத்திரங்களில் ஒருவர், பெஸ்ட் பேக்கரி கலவரத்தை விவரித்து அதில் எரித்துக் கொல்லப்பட்ட தன் குடும்பத்தைப் பற்றி சொல்கிறார். எரித்து வீசப்பட்ட தன் மகனின் சடலத்தைப் பார்த்துதான் பழிவாங்கும் உணர்ச்சியோடு தான் தீவிரவாதியானதாகக் குறிப்பிடுகிறார். ஒரு தீவிரவாதி தான் தீவிரவாதியானதுக்குக் காரணம், தீவிரவாதமும் மதவெறியுமே என்கிறார். இவருக்காவது நேரடியான பாதிப்புகளும் கொடுமையான அனுபவங்களும் இருந்திருக்கிறது. ஆனால் தன்னை ஒரு ‘காமன்மேன்' என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த தீவிரவாதிகளை கொல்வதற்கான காரணமாகச் சொல்லும் பண்பாட்டுச் செய்தி மிக மிக ஆபத்தானது.
அதிநவீனமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி நால்வரையும் கொன்றுவிட்டு, ஒரு ‘காமன்மேனாக' காய்கறிக் கூடையோடு அவர் கிளம்பிச் செல்வதற்கு முன், தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வு என்று அறிவுறுத்துகிறார். ஒரு சாதாரண மனிதனை கதாநாயகனாகக் காட்ட முற்பட்டு, அவன் வாயிலாக இந்த திரைப்படம் மக்களுக்கு சொல்லும் செய்தியும், ஒரு தீவிரவாதியை வில்லனாக உருவகப்படுத்தி, தன் அனுபவத்தில் அவர் இந்த சமூகத்திற்கு சொல்வதும் ஒன்றுதான். அந்த அடிப்படையில் பார்த்தால் இங்கு கதாநாயகனான ‘காமன்மேனும்' வில்லன்தான்; தீவிரவாதிதான்; உயிரோடு இருக்கத் தகுதியற்றவன்தான். முஸ்லிம்களுக்கு எதிரான படமாக வந்துவிடக் கூடாது என்பதற்காக குஜராத் கலவரம் பற்றியெல்லாம் உருக்கமாக, கண்ணீரை வரவழைத்துக் கொண்டு கமல் பேசுவதைக் கேட்க சகிக்கவில்லை. அந்த கண்ணீரிலோ, உருக்கத்திலோ துளியும் உண்மையை உணர முடியவில்லை. கடைசி வரை கமல்ஹாசன் கதாபாத்திரம் எந்த மதத்தைச் சார்ந்தது என்று குறிப்பிடப்படவே இல்லை. முஸ்லிம்களுக்காக பரிந்து பேசிக் கொண்டே முஸ்லிம்களை பொறுக்கியெடுத்துக் கொல்லும் அந்த செயலில் தெரிந்தது பார்ப்பனக் கள்ளத்தனம் மட்டுமே. சட்டப்படியான மரண தண்டனையே மனித உரிமை மீறல் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சாதாரண மனிதன் தொழிற்நுட்ப உதவியோடு தன்னிச்சையாக கொலைகள் செய்வது, மனித உரிமை மீறலின் உச்சம். இந்த திரைப்படத்தில் வலியுறுத்தும் நீதியின் அடிப்படையில் முதலில் கொலை செய்யப்பட வேண்டியது, கமல்ஹாசன் கதாபாத்திரம்தான். தீவிரவாதத்தைக் கொண்டாடும் இந்த திரைப்படத்தை, ஆகச் சிறந்ததாக எல்லா பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் கொண்டாடின. கமலை ஓர் அறிவாளியாகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் புகழ்ந்து தள்ளின. ‘ஹேராம்' படத்தில் கண்ணுக்கு கண் எப்படி தீர்வாகும் என்று கேட்ட அதே கமல்ஹாசன்தான் ‘உன்னைப் போல் ஒருவனில்' கண்ணுக்கு கண்ணை கேட்கிறார்!
தீவிரவாதத்துக்கு தீவிரவாதத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், வன்முறைக்கு வன்முறையால் விடிவு வரும் என்று நம்பிக் கொண்டிருந்தால், மாறி மாறி மனிதர்கள் சாவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை. குறிப்பிட்ட மதத்தினரின் இனத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது மட்டுமே தீவிரவாதம் உருவாகிறது. பறித்த உரிமைகளை முறையாக திருப்பித் தருவது ஒன்றே தீவிரவாதத்திற்கான முடிவேயன்றி, மாறி மாறி உயிரை எடுப்பதல்ல
3
அண்மையில் நடிகை புவனேஸ்வரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட, அதைத் தொடர்ந்து ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தை நினைத்தால் எரிச்சலும் கோபமுமே மிஞ்சுகிறது. புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதும் அவர் பாலியல் தொழில் செய்யும் மற்ற நடிகைகள் பற்றி காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்தி வெளியானது. உடனே இது குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட நினைத்த ‘தினமலர்' ரொம்பவும் மெனக்கெட்டு ஒரு கட்டுரையை தயார் செய்தது! எந்தெந்த நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்? யார் யாருக்கு எவ்வளவு விலை என்று கண்டுபிடித்து (இந்த சமூகத்துக்கு இந்த பத்திரிகைகள் எவ்வளவு தொண்டாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்) தொடர்புடையவர்களின் புகைப்படங்களுடன் விலைப்பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் இடம் பிடித்த நடிகைகளில் பலரும் திருமணமானவர்கள். குழந்தைகள் உடையவர்கள். மிக முக்கியமாக, கணவரைப் பிரிந்து வாழ்கிறவர்கள்.
இது உண்மையாகவே ஒரு புலனாய்வுக் கட்டுரையாக இருந்திருக்குமானால், அந்த ஆய்வை மேற்கொண்ட விதத்தையும் அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் தேவைப்படாமலே சினிமா பத்திரிகையாளர்களின் ‘கிசுகிசு' தகவல்களை வைத்துக் கொண்டு நேரில் கண்டவர்களைப் போலவே எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தொடர்புடைய நடிகைகளின் நிம்மதி மொத்தமாகப் பறிபோனது. கொதித்தெழுந்த நடிகைகள் நடிகர் சங்கத்தில் முறையிட, நடிகர் சங்கம் இந்த பிரச்சனையை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டது. கண்டனக் கூட்டம் நடத்தி, தமிழக முதல்வரிடம் புகார் செய்து, ப்ரஸ் கவுன்சிலுக்கு' மனு அனுப்பி, நடிகர் நடிகைகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
பெண் உரிமைகளை, தனி மனித சுதந்திரத்தை, சுயமரியாதையோடு வாழ்வதற்கான உரிமையை, பத்திரிகை நெறிகளை ‘தினமலரின்' இந்த ஒரே கட்டுரை நசுக்கிவிட்டது. நடிகைகளையும் பாலியல் தொழிலையும் வைத்து பத்திரிகைகள் தொடர்ந்து பிழைப்பு நாடகத்தை நடத்துவதால், சில விஷயங்களை நாம் விவாதித்தாக வேண்டியிருக்கிறது. ஒரு பெண் முழு நேர பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட, அவருடைய பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடும் உரிமை பத்திரிகைகளுக்கு இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டியது சட்டத்தின் அடிப்படையிலான தண்டனை மட்டுமே. ஆனால் காவல் துறையின் உதவியோடு பத்திரிகைகள் தொடர்ந்து சமூக ரீதியிலான தண்டனையை பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.
புகைப்படங்களுடன் வெளிவரும் செய்திகள் ஆதாரமானவை என்று தட்டையாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பதால், காவல் துறையை நச்சரித்து (அல்லது காவல் துறையின் விருப்பத்திற்கேற்ப) குற்றவாளியின் புகைப்படத்தை எப்படியாவது வாங்கி விடுகிறார்கள். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகின்ற நிலையிலேயே, தீர்ப்பு வழங்கப்படும் முன்பே கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். அதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களை எழுதவும் பிரசுரிக்கவும் விருப்பப்படும் இவர்கள் அனைவரும் மஞ்சள் பத்திரிகைகளைப் படித்து வளர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் எழுத்தும் வக்கிரமான கற்பனையுமே சாட்சி. இன்றைய பத்திரிகையாளர்களில் பலரிடம் இந்த தகுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. வியாபாரத்தைப் பெருக்க நினைக்கும் பத்திரிகைகளுக்கும் அதுதான் தேவைப்படுகிறது. பத்திரிகை அறம் குறித்தோ, நெறிகள் பற்றியோ, மனித உரிமைகளைப் பேண வேண்டியதில் ஊடகங்களின் பங்கு பற்றியோ இம்மியளவு கூட இவற்றுக்கு அக்கறை இல்லை.
பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்படும் பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்ற விதி இருக்கும்போது ‘தினமலர்' நாளிதழ் எந்த தைரியத்தில் அடிப்படையே இல்லாமல் நடிகைகளின் புகைப்படங்களோடு அந்த செய்தியை வெளியிட்டிருக்கக்கூடும். நடிகைகள் கொதித்தெழுவார்கள் என்றோ போராட்டத்தில் இறங்குவார்கள் என்றோ ‘தினமலர்' நாளிதழுக்கு தெரியாதா என்ன? தெரியும். பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் முகத்திரையைக் கிழித்து இந்த சமூகத்தை அவர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அக்கறையா ‘தினமலருக்கு'? நிச்சயமாக இல்லை. விற்பனை மோகமும் வக்கிரத்தின் வேகமும் மட்டுமே தினமலரின் இந்த கட்டுரைக்குக் காரணம். ஆணாதிக்க சிந்தனை மட்டுமே இவ்வளவு கீழ்த்தரமாக செயலாற்றத் தூண்டுகிறது.
நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஒரு பக்கம் பிழைப்பு நடத்தியும், இன்னொரு பக்கம் அவர்களின் அந்தரங்கங்களை கிசுகிசுக்களாகவும் வெளிப்படையான கட்டுரைகளாகவும் எழுதி கேவலப்படுத்துகிறார்கள். உணர்வுகளும் சுயமரியாதையும் மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே சமமானது. எல்லோருக்குமே அந்தரங்கங்கள் உண்டு. அது தனி மனித சுதந்திர வரையறைக்குட்பட்டது. இன்னொருவரின் சுதந்திரத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வரை அதற்குள் நுழையும் உரிமை யாருக்கும் இல்லை. விபச்சாரம் செய்கிறார்கள் என்று புகைப்படத்தோடு வெளிவந்த செய்தியைப் பார்த்து நடிகைகள் என்ன மாதிரியான அவமானத்திற்கு ஆளாவார்கள் என்றோ, அவர்களின் குழந்தைகள் என்ன மாதிரியான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாவார்கள் என்றோ, பரபரப்பு வெறியர்களுக்கு அக்கறை இல்லை.
நடிகைகள் பற்றி இழி செய்தி வெளிவந்து அது இவ்வளவு பரபரப்புகளை அடைந்த போதும் நடிகைகளுக்கு ஆதரவாக எந்த பெண்கள் அமைப்போ, பொதுவுடைமை இயக்கங்களோ, மனித உரிமை அமைப்புகளோ சிறு சலனமுமின்றி அமைதி காத்தனர். சிறு அளவிலான கண்டனத்தைக் கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நம் சமூகத்தில் பெண்கள் அமைப்புகள் தங்கள் மூச்சை நிறுத்தி நாட்களாயிற்று என்பதை கண்கூடாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. நடிகைகளையும் பாலியல் தொழிலாளர்களையும் மூன்றாம்தர குடிமக்களாக நினைத்து, இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட எந்த வகையான இன்னல்களுக்கும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்ததாக நினைவில் இல்லை. தங்கள் அழுத்தமான அமைதியின் மூலம் ‘தினமலர்' நாளிதழின் உரிமை மீறலுக்கு இவை துணை போயிருக்கின்றன.
அதே நேரத்தில் நடிகர் நடிகைகளின் போராட்டத்தைத் தொடர்ந்து ‘தினமலர்' செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட, தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துதானே தீர வேண்டுமென பத்திரிகை உலகம் அமைதியாக இருக்குமென்றுதான் நியாயத்தை மதிக்கிறவர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், கைதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகையை சேர்ந்தவர்களும் பத்திரிகை அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். பத்திரிகை சுதந்திரம் பறிபோவதாக இவர்கள் முழங்கியதைக் கேட்க சகிக்கவில்லை. ஒரு கொலையாளி கொலை செய்வதற்கான உரிமையைக் கோருவதைப் போல இருந்தது, பத்திரிகையாளர்களின் போராட்டம்.
இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், உண்மையாகவே பத்திரிகை சுதந்திரம்தான் பறிபோகிறதோ என்ற பதற்றத்தோடு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு கை கொடுக்க வந்தவர்களின் பட்டியல்தான். பொதுவுடைமைவாதிகளும் சில மனித உரிமை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களோடு போராட்டத்தில் பங்கேற்றது, ஆழமான அவநம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. தராதரமில்லாமல், அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், பிறரின் உரிமைகளையும் நிம்மதியையும் பாதிக்கிற வகையில் எதை வேண்டுமானாலும் இவர்கள் எழுதலாம், வெளியிடலாம். அதை கண்டித்தால், அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டால், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என கிளம்பிவிடுகிறார்கள். எழுத விரும்புவதை எல்லாம் எழுதிவிடுவதுதான் இவர்கள் எதிர்நோக்கும் பத்திரிகை சுதந்திரமா?
பேசவும், எழுதவும் முடிகிறவர்கள் அந்த ஒரே காரணத்திற்காக பத்திரிகையாளர்களாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். சமூகத்தைப் பற்றிய பார்வை, புரிதல், அக்கறை எதுவும் பத்திரிகையாளர்களுக்கு கிஞ்சித்தும் இருப்பதில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அதற்குரிய தகுதியென ஒன்று உண்டு. ஆனால் இங்கு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் தேவைப்படுவதில்லை. இதனால் ஒரு சராசரி மனிதனுக்குரிய எல்லா விருப்பு வெறுப்புகளோடும், வக்கிர சிந்தனைகளோடும் ஆதிக்க மனோபாவத்தோடும்தான் பத்திரிகையாளர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்கள் வலம் வருகிறார்கள். சாதிய மேலாதிக்கமும், மத பாகுபாடுகளும், ஆணாதிக்க சிந்தனைகளும் அவர்கள் எழுதும் ஒவ்வொரு செய்தியிலும் எப்படியேனும் வெளிப்படுவது இந்த காரணத்தினால்தான்.
தினமலருக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கிய பத்திரிகைகளில் முழுவீச்சோடு செயல்பட்டது ‘நக்கீரன்'. கொள்கை அடிப்படையில் தினமலரோடு முரண்படும் ‘நக்கீரன்', நடிகைகள் விஷயத்தில் கைகோர்த்ததன் காரணம் மிக எளிமையானது. நடிகைகளின் அந்தரங்கம் பற்றிய அதீத கற்பனை வளம் கொண்ட பத்திரிகையாளர்கள் நக்கீரனில் அதிகம். கொச்சைப்படுத்தி எழுதுவதில் தினமலரை மிஞ்சிய சிஷ்யன் நக்கீரன். தினமலரில் குறிப்பிட்ட அந்த செய்தி வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மிகக் கூர்மையாக கண்காணித்து, பரபரப்பான செய்தியாக வாசகர் முன் சமர்ப்பிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தாமாகவே ஏற்றுக் கொண்ட நக்கீரன், அதன் பின்னர் வெளியிட்ட செய்திகளை வாசிப்பதற்கு தனி மனோதிடம் தேவைப்பட்டது. நடிகர் நடிகைகள் கண்டனக் கூட்டத்தில் எவ்வளவு ஆபாசமாகப் பேசினார்கள் என்று அதையும் அப்படியே பிரசுரித்தது. நடிகர், நடிகைகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் நக்கீரனின் கேள்வி. தினமலரை எதிர்த்து களமிறங்கியவர்கள், நாளை தன்னையும் எதிர்த்துப் போராடுவார்கள் என்ற பயத்தை நக்கீரனின் ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க முடிந்தது.
நடிப்புத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்வதற்கும் ஒழுக்கத்தோடு இருந்தாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் இவர்கள் யார்? பண்பாட்டுக் காவலர் பதவியையும், கற்பொழுக்கத்தை காக்க வேண்டிய கடமையையும் பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகமோ சட்டமோ வழங்கியிருக்கிறதா என்ன?!
பத்திரிகையும் சினிமாவும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு விஷயங்களாகிவிட்ட நிலையில், வணிக நோக்கத்திற்காக பத்திரிகையாளர்களும் திரைத்துறையினரும் ஒருவரையொருவர் சார்ந்தே இயங்கி வருகிறார்கள். பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆபாசப் படங்களை முதன்மைப்படுத்தும் பத்திரிகைகளும் ஒரு வகையில் பாலியல் தொழிலே செய்கிறார்கள். லஞ்சத்தை 'கவர்' என்று குறிப்பிடும் வழக்கமே வெகுமக்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான். கவர் வாங்காத பத்திரிகையாளர்கள் இந்த துறையில் இருக்கவே தகுதியற்றவர்களைப் போல நடத்தப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த செய்தி ஊழலை கண்டிக்கவோ, தடுக்கவோ யார் சார்பிலும் எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.
திரைத்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். விளம்பரத்துக்காக செய்தியாளர்களை கைக்குள் வைத்துக் கொள்வது ஒன்றே அவர்களின் நோக்கம். திரைத்துறையினருக்கும் செய்தியாளருக்குமான இந்த பந்தம் முழுக்க முழுக்க வியாபார அடிப்படையிலானது. சினிமா செய்திகள் இல்லையென்றால் அது வணிக ரீதியில் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையை உருவாக்கியதும், வாசகர் மனநிலையை வெறும் பொழுதுபோக்கு விஷயங்களில் மட்டுமே ஈடுபடுத்தியதும் வணிக ஊடகங்கள் இந்த சமூகத்துக்கு இழைத்த துரோகம்! சினிமாவிற்கும் பத்திரிகைக்கும் உள்ள இந்தத் தொடர்பைவிட மிக ஆபத்தானது காவல் துறைக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள பந்தம்.
காவல் துறைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கும் கள்ள உறவு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வாழ்வியலில் மிகக் கொடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருப்பதற்கு, பல கைதுகளையும் செய்திகளையும் நாம் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும்.
இந்தியாவில் காவல் துறை மாதிரிதான் பத்திரிகைத் துறையும். சீருடை ஒன்றை வைத்தே காரியங்களை சாதிப்பதைப் போல ‘பிரஸ்' என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தொடர்ந்து உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் பத்திரிகை நெறிகளை அவமதிப்பதும் நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால், காவல் துறையோடு கைகோர்த்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை பத்திரிகைகள் வழக்கமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக தலித் மக்கள் பற்றியும் சிறுபான்மையினர் குறித்தும் காவல் துறை என்ன சொன்னாலும் அது எந்த ஆய்வும் தணிக்கையுமின்றி அப்படியே அச்சுக்குப் போகிறது. காவல் துறையின் தகவல்களை வைத்துக் கொண்டு செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு அது அன்றைய நாளின் அவசரச் செய்தி. அவ்வளவுதான். காவல் துறையினுடைய தகவல்களின் அடிப்டையில் ஒருவரை குற்றவாளியாக்கும் பத்திரிகைகள், பின்னர் குற்றமற்றவர் என்று அவர் நிரூபிக்கப்படும் போது அதை கண்டுகொள்வதே இல்லை. சாதி, மதக் கலவரங்களில், பயங்கரவாதச் செயல்களில் கைது செய்யப்பட்டு பொய் வழக்குகளில் பிணைக்கப்பட்டு வாழ்வைத் தொலைத்த தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் துயரக் கதைகளே இதற்கு சான்று.
வெகுமக்கள் ஊடகங்கள் திரைத் துறையினருடன் கொண்டிருக்கும் உறவு, சமூகப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்துவதைத் தடுக்கிறது என்றால், காவல் துறையோடு துணை போவதன் மூலம் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செய்தி வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது. ஓர் அரசு தன் சொந்த மக்கள் மீதே நிகழ்த்தும் வன்முறையும் பாகுபாடும் அரச பயங்கரவாதம் என்றால், ஊடகங்கள் அரசோடு கைகோர்த்துக் கொண்டு வெளியிடும் பாரபட்சமான செய்திகள் ஊடக பயங்கரவாதமின்றி வேறில்லை.
‘சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல்தான் இந்தியாவில் பத்திரிகைகளின் நிலை. வணிக நோக்கத்தைவிட பெரிய பொறுப்பென்று அவற்றுக்கு ஏதுமில்லை. அரசியல் கதாநாயகர்களை துதி பாடுவதும் கொண்டாடுவதும்தான் அவற்றின் முதன்மை வேலையாக இருக்கிறது' என அம்பேத்கர் வருத்தத்தோடு சுட்டிக் காட்டி பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஊடகங்களின் நிலை இம்மியளவும் மாறியபாடில்லை. எல்லா சமூக அவலங்கள் பெருகுவதற்கும் இந்த ஊடகங்கள் தம்மால் ஆன பங்கை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின், இந்து மத வெறியர்களின் கைகளில் ஊடகங்கள் இயங்குகிற வரை, சாதி, மத பாகுபாட்டை அவை வளர்த்துக் கொண்டுதானிருக்கப் போகின்றன. வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை. ஜனநாயகத்தின் நான்வது தூண் துரு பிடித்ததாகவே இருப்பதை வேதனையோடு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்! இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பதே சிதிலமடைந்த ஒரு கட்டடத்தைப் போல நிலைகுலைந்த நிலையில் இருக்கையில், அதன் தூண்கள் மட்டும் துருபிடிக்காமல் அப்படியே இருக்குமா என்ன?