தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டப் பேரவை என்பது அரசின் ஓர் உறுப்பு, ஆட்சி செய்யும் உறுப்பு, நீதி செய்யும் உறுப்பு என்பது போல் இது சட்டம் செய்யும் உறுப்பு. இந்தத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் தனி மனிதர்களும் இப்போதிருக்கும் சட்டங்கள் பற்றியும் இனி இயற்ற வேண்டிய சட்டங்கள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.
அவை தொடர்பான உறுதிகளை மக்களுக்குத் தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தாங்கள் இடம்பெறப் போகும் சட்டப் பேரவைக்கு சட்டமியற்றும் இறைமை உள்ளதா என்று சொல்ல வேண்டும். அதாவது இந்திய அரசமைப்பின் குறைநிறைகள் பற்றிப் பேச வேண்டும்.
ஆனால் – தேர்தல் களத்தில் ஒரே விவாதப் பொருள்: யார் முதலைமைச்சர்? எனபதாகவே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி “நான் நானேதான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்கிறார். மு.க. ஸ்டாலினுக்கு இந்தச் சிக்கலே இல்லை.
கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஸ்டாலினை வருங்கால முதலமைச்சர் என்று மேடைக்கு மேடைக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம் இடதுசாரிகள்! ஸ்டாலின் ஆசி பெற்றும் கோடி பெற்றும்தான் தேர்தல் களத்துக்கே வந்தாக வேண்டும்! கமல்ஹாசனுக்கும் செந்தமிழன் சீமானுகும் மட்டும் வண்ண வண்ணக் கனவுகள் வராமலா போகும்? வரட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நான்… நான்… நான்... என்று அலறுவதுதான் அருவருப்பாக உள்ளது. நம்மவரா? தன்னவரா? நாம் தமிழரா? நான் முதல்வரா?
அது சரி. முதலமைச்சர் பதவிக்கா தேர்தல் நடக்கப் போகிறது? எங்கே எப்போது? அதற்கொரு வாக்குச் சீட்டும் வாக்குப் பதிவும் வாக்குச் சாவடியும் உண்டா? சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுக்கும் தலைவரை ஆளுநர் அழைத்து அமைச்சரவை அமைக்கச் சொல்வார். இப்படித்தான் முதலமைச்சர் வர வேண்டும். அது வரை முதலமைச்சர் வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் இந்த அரசமைப்புக்கு அடிமைப்பட்ட எல்லாக் கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளர் என்று பேசுவது பொய்க்கால் குதிரைகளின் ஆட்டம்! எந்தப் பொய்க்கால் குதிரை போர்ப் புரவியாகப் போகிறது? இது மக்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய உண்மையான சிக்கல்களிருந்து அவர்களது கவனத்தைத் திசை திருப்ப உதவுகிறது.
உரிமைச் சிந்தனையை மழுங்கடிக்கப் பயன்படுகிறது. தனிமனித வழிபாட்டையும் வல்லாட்சியத்தையும் வளர்த்துத் தன்மானத்தையும் குடியாட்சியத்தையும் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறது.
எச்சரிக்கை தமிழர்களே!
- செங்காட்டான்