1943 -ஆம் ஆண்டு மே மாதம் 6 -ஆம்தேதி இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடி என்னும் ஊரில் காசி கிளார்க்கு உடையாருக்கும் ராமாத்தாளுக்கும் பிறந்த ஒரே பெண்குழந்தையின் பெயர் கோபிசாந்தா. ராமாத்தாள் தனது தங்கையைத் தனது கணவருக்கு மணமுடித்து வைக்கிறார். இதன் பிறகு உண்டான பிரச்சினைகளினால் 1953-ஆம் ஆண்டு தனது பத்து வயதுக் குழந்தையான கோபிசாந்தாவோடு வீட்டை விட்டு வெளியேறி சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூரில் குடியேறுகிறார்.

பள்ளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் நடைபெற்ற மேடைநாடகங்களும் பள்ளத்தூரின் அருகிலுள்ள அரியக்குடி எனும் ஊரில் இருந்த சினிமாக் கொட்டகையில் முறுக்கு விற்பதற்காகச் சென்றபோது பார்த்த பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நடித்து வெளிவந்த சினிமாக்களும் கோபி சாந்தாவிடம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. நாடகம், சினிமாக்களில் இடம்பெற்ற இசைப்பாடல்களில் மயங்கினாள் அவள். இசைதான் அவளைக் கலைத்துறையின் பக்கம் இழுத்தது. சினிமாப்பாடல்களைப் பாடிக்காட்டுவதன் மூலம் தன்னிடமும் பாடும் திறன் இருப்பதை வெளிப்படுத்தினாள்.

இதனால், பள்ளத்தூர் ஆச்சிகளின் மனதில் இடம் பிடித்தாள். விசேடங்கள் நடத்துவதையே தங்களது கலாச்சாரமாகக் கொண்ட ஆச்சிகள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கோபிசாந்தாவைப் பாடவைத்தனர். கொட்டகையில் சினிமா பார்ப்பதற்கு அவளுக்கு டிக்கெட் கேட்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் கொட்டகைக்குள் போகவும் வரவும் அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூடத் தொடரமுடியாத அளவிற்கு வறுமை சூழ்ந்த நிலையில் ஒரு வீட்டில் குழந்தையைப் பராமரிக்கும் வேலை செய்துவந்த ஏழைச் சிறுமியான கோபிசாந்தா அப்பகுதியிலிருந்த கலையார்வம் உள்ளவர்களிடம் பிரபலமடைந்தாள்.

1955 -இல் பள்ளத்தூரின் அருகிலுள்ள கோட்டையூரில் நடைபெற்ற ‘அந்தமான் காதலி’ எனும் நாடகத்தில் நடிக்க வேண்டிய பெண்ணுக்கு அன்று சரியாகப் பாடவரவில்லை. உள்ளூர்க்காரர்கள் மூலம் கோபிசாந்தாவின் பாடும் திறனைப்பற்றிக் கேள்விப்பட்ட நாடகக்குழுவினர் அவளை மேடையேறக் கோருகிறார்கள். தனது 12-ஆவது வயதில் முதன்முதலாக மேடையேறிய கோபிசாந்தா, கோட்டையூரில் தன் முதல் கொடியை வெற்றிக்கொடியாக நாட்டினாள்.

பேச்சாலும் பாட்டாலும் நடனத்தாலும் மேடையை வெளுத்து வாங்கினாள். பார்வையாளர்களின் அன்பு நிறைந்த வரவேற்பினைப்பெற்று அவர்களைத் தனது ரசிகர்களாக மாற்றினாள். பெரும் மன மகிழ்ச்சியடைந்த நாடகத்தின் உதவி இயக்குனர் திருவேங்கடமும். இசையமைத்த ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனும் கோபிசாந்தாவின் பெயரை ‘மனோரமா’ என மாற்றினர். 1500 சினிமாக்களுக்கு மேல் நடித்த சாதனையை எட்டிய பெயராக மனோரமா எனும் பெயர் தமிழக சினிமா வரலாற்றில் நிலை பெற்றுவிட்டது.

இக்குழுவில் இருந்த எஸ்.எம்.ராமநாதன் என்பவர் ஏற்கனவே ‘கண் திறந்தது’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதாக ஒரு செய்தி உள்ளது. அவர் மனோரமாவைக் காதலிப்பதாகச் சொன்னதும் இருவருக்கும் 1963 -இல் திருச்செந்தூரில் திருமணம் நடக்கிறது.

1964 -இல் பள்ளத்தூரில் மனோரமாவிற்கு ஆண்குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பதினைந்தாவது நாளில் ராமநாதன் வந்து மனோரமாவை நாடகத்தில் நடிக்க அழைக்கிறார். உடல் நலக்குறைவினால் அதை மறுக்கிறார் மனோரமா. கோபமடைந்த ராமநாதன் 1965 -இல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து பெற்றுவிடுகிறார். ஒரே மகனின் பெயர் பூபதி. இவரை பின்னாளில் இயக்குனர் மகேந்திரன் தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய படங்களில் ஒன்றான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார்.

எம்.ஆர்.ராதாவின் நாடகக்குழுவில் மனோரமாவை இணைத்துக்கொள்ள அவர்கள் முடிவெடுத்திருந்தபோதும், அதற்கு முன்னதாகவே மு.கருணாநிதி எழுதிய நாடகத்தில் நடிக்க வைப்பதற்காக எஸ்.எஸ்.ஆரின் நாடகக் கம்பெனி மனோரமாவை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டது. ஒருவேளை எஸ்.எஸ்.ஆர் குழுவிற்கு முன்பாக எம்.ஆர்.ராதா குழுவினர் மனோரமாவைச் சந்தித்து இணைத்துக் கொண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அதை இக்கட்டுரையின் இறுதியில் காணலாம்.

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு இணை நடிகையாக மேடை நாடகங்களில் நடித்தார் மனோரமா. அண்ணாதுரையும் கருணாநிதியும் ஆசையின் காரணமாக நடித்தவர்களேயன்றி நடிப்பார்வத்தால் நடித்தவர்கள் அல்ல. அதனாலேயே அவர்கள் மேடை நாடகங்களில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை. தனது வசனங்களைத் தெளிவாகவும் உணர்ச்சியோடும் உச்சரித்தவர் என்றும் திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் என்றும் கருணாநிதி மனோரமாவைச் சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளார்.

1956 காலகட்டத்தில் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் நடித்தார். இரண்டு திரைப்படங்களில் முதன்மைப் பாத்திர வாய்ப்புகள் வந்தும் அப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. அதில் ஒன்று கண்ணதாசனின் ஊமையங்கோட்டை. எனவே, 1958-ஆம் ஆண்டு கண்ணதாசன், தான் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ எனும் சினிமாவில் மனோரமாவை வற்புறுத்தி நகைச்சுவைப் பாத்திரமேற்று நடிக்க வைத்து தமிழ் சினிமாவில் முதன்மைப் பாத்திர நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார்.

1958 தொடங்கி 2015-ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 1500த்திற்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்தும் சுமார் 50 பாடல்களைப் பாடியும் இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களும் விரும்பத்தகுந்த அளவில் நடித்து வந்த மனோரமா எனும் நடிப்புத் திறனுக்கு தமிழ் சினிமாவில் உள்ள இடம் என்ன?

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் பாத்திர உருவாக்கமென்பது மேடைநாடகங்களில் உருவாகி வளர்ந்து வந்ததின் தொடர்ச்சியாகும். இன்றும் நம்மைப் புன்னகைக்க வைக்கின்ற ‘சபாபதி’யில் நடித்த சந்தானலட்சுமியில் தொடங்கி என்.எஸ்.கிருஷ்ணன் எனும் தனித்துவமிக்க நடிகரின் இணையான டி.ஏ.மதுரம் ஊடாக, சி.டி.ராஜகாந்தம், முத்துலட்சுமி. வரலட்சுமி, சுந்தரிபாய், கே.ஏ.தங்கவேலுவின் இணையான சரோஜா, ஈ.வி.சரோஜா, மனோரமா, சச்சு, ரமாபிரபா, காந்திமதி, வனிதா, கோவை சரளா இவர்களையும் தாண்டி ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க முடிந்த அச்சச்சோ சித்ரா, கறுப்பு சூர்யா, என ஒரு நெடும்பட்டியல் உண்டு. இதுதவிர கதாநாயகிகளாக நடித்த பல நடிகைகளும் நகைச்சுவையில் பரிணமித்தவர்களே. பி.பானுமதி, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, லெட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, சரிதா, சுஜாதா போன்ற பலர் இப்பட்டியலில் உள்ளனர். மனோரமாவிற்குப் பிந்தைய நடிகைகள் அனைவரும் நகைச்சுவை நடிப்பில் தங்களுக்கு மனோரமாவே முன்னோடி எனக் கூறியுள்ளனர்.

எல்லோருக்குமான குடும்ப வாழ்க்கை தன்னுடைய தாயாருக்குப்போலவே தனக்கும் அமையாமல் போனது. அதற்காக மனந்தளராமல் தனது தொழிலில் கடுமையாக உழைத்து வந்தவர் மனோரமா.

பழிவாங்கும் வஞ்சத்தைக்காட்டும் முகபாவனையினை மிகச்சரியாக வெளிப்படுத்தக் கூடியவர் மனோரமா. ஒரு சில படங்களில் அச்சாயலை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும் முழு வில்லியாக அவர் வேடமேற்கவில்லை. இது ரசிகர்களுக்கு ஒரு இழப்பே. படையப்பா நீலாம்பரிபோல ஒரு பாத்திரம் கிடைத்திருந்தால் அவரின் இன்னொரு பாணி வெளிப்பட்டிருக்கக்கூடும். இதற்கான ஆதாரத்தினை அவர் நாகேஷ் மீதோ, அல்லது தேங்காய் சீனிவாசன் மீதோ காட்டும் ஆத்திர உணர்ச்சியினைக் கூர்ந்து கவனித்தால் காணலாம். மேலும் அவரின் அபிமான நடிகைகளாக இருந்திருக்கக்கூடிய டி.ஆர்.ராஜகுமாரியும் கண்ணாம்பாவும் பிரமாதமான வில்லிகளல்லவா!

தமிழ் சினிமாவில் பல சிறப்பம்சங்கள் நிறைந்த படங்களில் ஒன்றாகக் குறிப்பிடவேண்டிய படம், ‘தில்லானா மோகனாம்பாள்’. அப்பல அம்சங்களில் நடிப்பாற்றலும் ஒன்று.

சிவாஜிதான் கதாநாயகன். பாடலுக்கு வாயசைப்பதில் தனிப்பாணியினைக் கொண்டிருந்ததால் அதற்காகவும் மிகவும் புகழ் பெற்றிருந்தார் சிவாஜி. ஆனால், அக்காலகட்டத்தில் அவர் பாடல்காட்சியில் வாயசைக்காத ஒரே படம் இது; ஆண்குரலில் பாடலே கிடையாது. பத்மினி, சிவாஜியைத் தாண்டி, நாகேசும் மனோரமாவும் பாலையாவும் சகாதேவனும் ஏற்றிருந்த வேடங்கள் உயிரோட்டமானவையாக விளங்கின.

ஸ்பெஷல் நாடகப் பெண் கலைஞர்களில் பலர் அப்போது ஊர்மேய்ந்து திரிந்த ஆதிக்கசாதி நிலவுடமை மைனர்களின் தற்காலிக ஆசைநாயகிகளாக இருக்கவேண்டிய நெருக்கடி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு பெண் தனது பெயர்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஆடல், பாடல் கச்சேரி செய்யும் பாத்திரம்தான் ‘ஜில் ஜில் ரமாமணி’. துளியளவும் விரசமில்லாமல் பார்வையாளர்களைக் கூச்சப்பட வைக்காமல் அப்பாத்திரம் திரையில் மின்னியதற்கு மனோரமாவே காரணம்.

பத்மினியிடம் சிவாஜியைப் பற்றி நல்லவிதமாக எடுத்துக்கூறி தனக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவு அண்ணன் - தங்கை உறவுதான் என மனோரமா அழுத்தமாக எடுத்துரைக்கும் காட்சி வரும்வரைக்கும் மனோரமாவிற்கும் சிவாஜிக்கும் இப்போதைய மொழியில் சொல்வதென்றால் ‘பயங்கர கெமிஸ்ட்ரி’ இருக்கும். படத்தின் இறுதிக்காட்சியில் சிவாஜி, பத்மினி திருமணம் நடந்ததும் தங்களுக்கான முதல் ஆசீர்வாதத்தைப் பெற மனோரமாவை அழைக்கும்போது இருவரும் நெகிழ்ந்து பேசும் சொற்கள் உணர்வுப்பூர்வமானவை. அதை ஏற்கும் மனோரமாவின் முகபாவங்கள் அபூர்வமானவை. ‘மாமா’ வைத்தியாக வரும் நாகேஷ், இன்றைய வடிவேலின் பாத்திரங்களுக்கு முன்னோடி.

‘பாண்டியன் நானிருக்க’ பாடலுக்கு மனோரமா ஆடும் ஆட்டம் குறிப்பிடத்தக்கது. ‘பல்டி’ அடிப்பது ‘டூப்’ நடிகர் என்றாலும் கூட, காலை இடுப்பளவு உயரத்தில் தூக்கிக் கைதட்டும் அந்த அசைவு அதற்கு முன்னரும் பின்னரும் திரையில் காண முடியாதது. இப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார், அது மனோரமாவிற்கு மிகப்பொருந்தமாக அமைந்திருக்கும்.

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் தமிழ் உச்சரிப்பைக் கடித்துக் குதறும் நடிகையாக வருவார். அதுவும் ‘கந்தன் கருணை’ படத்தில் அவர் பேசும்முறையும் மிகவும் நகைச்சுவையானது. மறக்க முடியாதது.

மனோரமாவின் நடிப்புத் திறனைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு ‘பெண் சிவாஜி’ எனும் பட்டத்தினையே திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றனர். சிவாஜி எனும் பெயருக்கு அல்லது சொல்லுக்கு ‘நடிப்பு’ எனப் பொருள் கொண்டால் மட்டுமே அப்பட்டமானது மனோரமாவிற்குப் பொருத்தமானதாக இருக்கமுடியும். அன்றி, சிவாஜிகணேசன் எனும் நடிகருக்கு இணையான நடிகை எனும் பொருளில் அப்பட்டத்திற்குப் பொருள் கொண்டால் அது மனோரமாவிற்குப் பொருத்தமானது அல்ல. சில ஒற்றுமைகள் இருப்பினும் சிவாஜி வேறு. மனோரமா வேறு. பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் ஜோடியாக நடித்தது கடைசி காலத்திய சிவாஜியின் பாடாவதிப் படங்களில் ஒன்றான ‘ஞானப்பறவை’ எனும் படத்தில்தான். அப்படம் இருவருக்குமே பெருமைக்குரியதாக அமையவில்லை.

இருவருக்குமிடையில் கசப்பு நிலவிய ஒரு காலகட்டத்தில், ‘பொன்வண்டு’ எனும் படத்தில் சிவாஜியைக் கிண்டல் செய்து ‘வசந்த மாளிகை’யில் வரும் ‘யாருக்காக’ பாடலைத் தைரியமாகப் பாடி நடித்தார் மனோரமா. மனோரமா நன்கு பாடும் ஆற்றல் பெற்றவர். இதற்கு முன்னர் டி.ஏ. மதுரமும் சுந்தரிபாயும் பாடியிருந்தாலும்கூட மனோரமா பாடிய அளவு அவர்கள் பாடியது கிடையாது. இது மனோரமாவிற்கானத் தனி இடமாக தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெறுகிறது. இவ்வாறான நடிகை இவர் ஒருவர் மட்டுமே. சுமார் 50 சினிமாப்பாடல்களை அவர் பாடியுள்ளார். சிவாஜிக்குப் பாடத் தெரியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அடிப்படையில் மனோரமா ஒரு பாடகர். விதவிதமான பாடல்களைப் பாடுவதில்தான் தனக்கு திறமை இருந்ததாக அவர் தன்னைப்பற்றி எண்ணியிருந்தார். அத்திறமைமையினை அவர் நிரூபித்துமிருந்தார். மனோரமா பாடியவற்றில் ஒரு சில பாடல்களைக் கவனிக்கலாம்.

வட்டார மொழிகளைப் பேசுவதில் மனோரமாவிற்கு உள்ள திறமை தனித்துவமானது. வேறு எந்த நடிகர் நடிகையிடமும் காணக்கிடைக்காதது. மேடை நாடக வசன உச்சரிப்புப் பயிற்சியே அதற்கு முக்கியமான காரணமாகும். பல வட்டார மொழிகளைக் கலந்து பேசும் திறமையும் அவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் சென்னை வட்டார மொழியினைப் பேசி நடிப்பதில் குறிப்பிடத்தக்க பலர் இருப்பினும் அம்மொழியில் பாடுவதில் அக்காலகட்டத்தில் மனோரமாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் மட்டுமே குறிப்பிடத்தக்கவராக இருந்தனர். 1968-இல் வி.குமாரின் இசையமைப்பில் ‘பொம்மலாட்டம்’ எனும் படத்தில் இடம்பெற்ற பாடலான ‘வா வாத்யாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டி நா உடமாட்டேன்’ பாடல் புகழ்பெற்றது. இப்பாடலின் இடையில் ‘நைனா . . ஆ . . ஆ . . ஆ. .’ என மனோரமா இழுக்கும் ராகம் கவனிக்கத்தக்கது.

சென்னைமொழியில் அவர் பாடியுள்ள மற்றொரு பாடல், 1970 -இல் குன்னக்குடி வைத்தியநாதனின் இசையமைப்பில் வெளிவந்த திருமலைத் தென்குமரி படத்தில் வரும் ‘பாடணும்னு மனசுக்குள்ள ஆச நெறயக் கீது’ எனும் பாடலாகும். இதிலும் ‘தெம்மாங்கு பாடவா, தில்லாட்டாங்குப் போடவா’ எனச்சொல்லிவிட்டு அதன்பிறகு அவர் பாடுவது முழுக்க சென்னை ஸ்பெஷல்.

‘கல்யாணராமன்’ படத்தில் தேங்காய் சீனிவாசனும் மனோரமாவும் நாடகக்கலைஞர்களாக வருவார்கள். இவர்கள் இருவரும் சென்னைத் தமிழில் ‘மனோகரா’ பட வசனத்தைப் பேசி நாடகம் நடத்துவார்கள். நகைச்சுவையில் மொழிக்கான பங்கினையும் குறிப்பிடும்படியாக அவ்வசனங்கள் அமைந்திருக்கும்.

இளையராஜா இசையமைப்பில் ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் வருகின்ற ‘சுராங்கனி’ பாடலை தமிழ் சினிமாப் பாடல் ரசிகர்கள் மறந்திருக்கமுடியாது. இலங்கையின் ‘பைலா’ வகைப் பாடல் என அதைக் குறிப்பிடுகின்றனர். இப்பாணியில் 1972-இல் வெளிவந்த ‘கருந்தேள் கண்ணாயிரம்’ படத்தில் ஷியாம் இசையமைப்பில் வந்த, ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ எனும் பாடல் ரசிக்கத்தக்கது. இப்பாடலில் மனோரமாவிற்கு இணையாகப் பாடுபவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ‘அன்டப்பக்கர . . . ஆரப்பக்கர . . . ஹை . . . ஹை . . . ஹை’ என இருவரும் பாடிக் குதிப்பதை இப்போதும் நாம் கேட்கலாம்.

1973-இல் வந்த ‘சூரியகாந்தி’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் பாடிய ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ பாடல் சென்னை வட்டார பிராமணர்கள் மொழியிலமைந்த பாடலாகும். இப்பாடலின் இடையில், ‘மன மோக நார்த்த அணங்கே’ என பி.யூ. சின்னப்பாவின் பாடலை இரண்டு வரிபாடுவது தனது பள்ளத்தூர் கால பாட்டுக்காலத்தை அவருக்கு நினைவூட்டியிருக்கக்கூடும்.

மதுபோதையில் பாடும் பாடல்களில் ‘உன்னைக் கண் தேடுதே (ஹ§க்)’ பாடலும் ‘ஆசையும் (ஹ§க்) நேசமும் (ஹ§க்)’ எனும் பாடலும் அந்நாட்களில் பிரபலமானது. அதன் பின்னர் ‘நானே நானா’ (வாணி ஜெயராம்) வரை சில பாடல்கள் வந்தாலும் முன்னர் சொன்ன பாடல்களின் இடத்தைப் பிடிக்கமுடியவில்லை. தற்போதைய பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் தண்ணியடித்துவிட்டுப் பாடுவதுபோலத்தான் ஒலிப்பதென்பது வேறு விடயம். 1974-இல் வந்த பொம்மலாட்டம் படத்தில் (இதில் மனோரமாவிற்கு நாதசுரக் கலைஞர் பாத்திரம்) வருகின்ற ‘உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா’ எனும் பாடல் அப்போதைய ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்ட பாடல்தான்.

1975 -இல் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’ படத்தில் மனோரமாவிற்கு ஜோடி தேங்காய் சீனிவாசன். இப்படத்தில் மனோரமா சிவாஜி ரசிகை; சீனிவாசன் எம்.ஜி.ஆர் ரசிகர். இருவரும் மோதிக்கொள்ளும் பாடலும் உண்டு. டி.எம்.எஸ்ஸம் மனோரமாவும் பாடும் ‘மக்கள் திலகமா? நடிகர் திலகமா?’ எனும் பாடலில் மனோரமாவின் குரல் தான் சிவாஜியின் பக்கம் என்பதைக் கணீரென்று ஒலிக்கும்.

சொற்களை உச்சரிக்கமுடியாத தன்மைகொண்ட ஒரு பெண் பாடினால்? 1978 -இல் ‘வாழ நினைத்தால் வாழலாம்’ எனும் படத்தில் இளையராஜாவின் இசையில் இப்படி ஒரு பாடல் வெளிவந்தது. ‘காயாங் குயுயிக்குக் கய்யாயமாம் யங்க மாயாமயுயையிய் உய் உய் உய்யாம்’ எனும் அப்பாடலை மனோரமா அனாயசமாகப் பாடியிருப்பார். குரல் சரியான பின்னர், ‘கானாங் குருவிக்குக் கல்யாணமாம், எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்’ எனவும் பாடுவார்.

செண்ட்மெண்ட் பாடல்களுக்கு சினிமா ரசிகர்களையும் தாண்டி மக்களிடையேயும் ஆதரவு இருக்கும். ‘புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே’, பாடலும், ‘மணமகளே மருமகளே வா வா’ பாடலும், ‘வாராயென் தோழி வாராயோ’ பாடலும் தமிழக மக்களிடையே மிகவும் புகழ்பெற்றவை. இப்பாடல்களுக்குப் பிறகு, திருமணம் தவிர மற்ற விசேடங்கள் நடக்கும் வீடுகளில் ஒலிபரப்பான பாடல், மனோரமாவின் குரலில் ஒலித்த பாடலாகும். 1978 -இல் ‘உனக்கும் வாழ்வு வரும்’ எனும் படத்தில் சங்கர் கணேசின் இசையமைப்பில் வந்த ‘மஞ்சக்கயிறு தாலி மஞ்சக்கயிரு’ பாடல் மிக நீண்டகாலமாக குழாய்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. 1999 -இல் ‘புருஷ லட்சணம்’ படத்தில் தேவாவின் இசையமைப்பில் சித்ரா பாடி வெளிவந்த ‘ஒரு தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மா’ பாடல் வரும் வரையிலும் மஞ்சள் கயிறு அணிந்திராத மனோரமாவின் ‘மஞ்சக்கயிறு’ பாடலை அசைக்கமுடியவில்லை.

ரஜினிக்கும் மனோரமாவிற்குமான கசப்பான நிகழ்வுகள் நமக்கு இப்போது தேவையில்லை. 1979 -இல் ரஜினி நடித்து எம்.எஸ்.வியின் இசையமைப்பில் வெளிவந்த படமான ‘குப்பத்துராஜா’ படத்தின் ஹீரோ கெட்டப் பாடலான, ‘கொடிகட்டிப்பறக்குதடா ராஜா, குப்பத்துராஜா’ எனும் பாடலை மனோரமாவும் பாடியிருந்தார். இளையராஜாவிற்கு சவால் விடும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடலாக அதை அப்போது இருதரப்பு ரசிகர்களும் எண்ணிக்கொண்டனர்.

1989 -இல் வெளிவந்த படம் ‘அவன் அவள் அது’. வாடகைத் தாயாக ஸ்ரீப்ரியா நடித்திருப்பார். அவருக்குப் பாதுகாப்பாளராக மனோரமா வருவார். பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என இருவரும் பாட்டில் பேசிக்கொள்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரியும் மனோராமாவும் பாடிய பாடல் அது. கடைசியாக நடிகைகள் பெயர் வைக்கலாம் என ஒவ்வொரு நடிகையின் பெயராகச் சொல்லிக்கொண்டே வரும் எல்.ஆர்.ஈஸ்வரி இறுதியில், ‘இன்னுமொருத்தர் பெயர் இருக்கு அந்தப் பெயர் மனோரமா’ என்பார். அதற்கு ‘எவ அவ’ என மனோரமா பதில் சொல்வதுபோல அப்பாடல் முடியும்.

1988 -இல் ‘டில்லிக்கு ராஜான்னாலும்’ பாடலும், 1989-இல் ‘ராஜா கைய வச்சா’ பாடலின் முன்னுரையாக வருகின்ற Ôதுக்கிரித்தனமா’ எனும் இசை வசனமும் 1995 -இல் வந்த ‘மெட்ராசச் சுத்திப் பார்க்கப் போறேன்’ பாடலும்தான் அதன் பிறகு அவர் பாடிய பல பாடல்களில் கவனிக்கப்பட்ட பாடல்களாகும். கடைசியாகக் குறிப்பிடப்பட்டப் பாடலை மனோராமவோடு இணைந்து பாடிய சாகுல் ஹமீது, சுவர்ணலதா எனும் திறமைசாலிகள் இருவரும் இளம் வயதிலேயே இறந்தது வருத்தத்திற்குரியது.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்திருந்தாலும் தன்னை ஒரு சென்னைவாசியாகக்கொண்டு, ‘மூத்தவ சொல்றேன் நீ யோசி, நான் மூணு தலைமுறையா மதராசி’ எனப் பாடும் மனோரமாவின் குரலில் பெருமிதம் பொங்கும். இது சென்னைவாசிகளுக்குப் பெருமையான ஒன்றுதான்.

மனோரமாவின் நடிப்பில் அவருக்கே பிடித்த படங்களில் ஒன்று ‘நடிகன்’. இளம் வயதில் அவர் ஏற்று நடித்த அட்டகாசமான அலட்டல் வேடங்களின் முதிர்ச்சியாக இப்பாத்திரம் அமைந்திருந்தது. மிகவும் ஸ்டைலான அவரின் நடிப்பானது அவர் மீதிருந்த நகைச்சுவை நடிகை எனும் முத்திரை வழியாகவே பார்க்கப்பட்டதால் அப்பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பும் நகைச்சுவையானதாகவே எடுத்துக்கொள்ளப்பட்டது. நகைச்சுவையையும் தாண்டி ஒரு முதிர்கன்னியின் மனநிலையைத் மிகத்துல்லியமாக அவரது முகபாவனைகள் வெளிப்படுத்தும். ஒருவகையில் அது அவரது சொந்த மனநிலைக்குச் சமமானது.

இதே போன்ற மற்றொரு பாத்திரம் ‘சிங்காரவேலன்’ படத்திலும் உள்ளது. இரண்டு படங்களிலுமே குஷ்புவின் கார்டியனாகவே வருவார். இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான காட்சிகளும் உண்டு. ஆனால், இரண்டு பாத்திரத்திற்கும் பெரும் வேறுபாட்டினைக் காட்டியிருப்பார் மனோரமா. இரண்டுமே சமகாலப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

நகைச்சுவை நடிகையாகத் தோன்றியவர்கள் அதன்பிறகு குணசித்திர வேடங்களில் கூடத் தோன்றமுடியாத அவலமான நிலைதான் தமிழ் சினிமாவில் நிலவியது. அதை உடைத்தது மனோரமாதான். குறிப்பாக ‘அம்மா’ வேடமேற்று அவர் நடித்த பல படங்கள் மிகுந்த வரவேற்பினைப் பெற்றவையாகும். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமலஹாசனுக்கு வளர்ப்புத் தாயாக வந்ததிலிருந்து இது தொடங்குகிறது.

கமலஹாசன் - அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் - அண்ணாமலை, பாக்யராஜ் - இது நம்ம ஆளு, கார்த்திக் - கிழக்குவாசல், பிரபு - சின்னத்தம்பி, பொன்னம்பலம் - நாட்டாமை, விஜயகாந்த் - சின்னக்கவுண்டர், சத்யராஜ் - மகுடம், அர்ஜூன் - ஜெண்டில்மேன்.

‘சின்னத்தம்பி’ படத்தின் உச்சக்கட்ட காட்சியும், ‘ஜெண்டில்மேன்’ படத்தின் தற்கொலைக் காட்சியும் அழுத்தமானதாக ரசிகர்களால் கருதப்பட்டது. அண்ணாமலை. சின்னக்கவுண்டர், நாட்டாமை, கிழக்குவாசல் ஆகிய படங்களில் மனோரமாவின் நடிப்பு ரசிகர்களுக்கு நிறைவளித்தவை. பதட்டம் மிகுந்த கதாபாத்திரங்களில் நடிக்கும்போது பார்வையாளர்களுக்கு அப்பதட்டத்தினைக் கடத்துவதில் வேறு எந்த நடிகையர்க்கும் முன்னணி நடிகையாக இருந்தார் மனோரமா.

தமிழ் சினிமா மொழியில் புதிய கூற்றுமுறைகளை கொண்டுவந்த பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றவர்கள் மனோரமாவைத் தங்களின் படங்களில் பயன்படுத்தியதில்லை. பாலச்சந்தருக்கும் கூட ‘உன்னால் முடியும் தம்பி’ படம் தவிர வேறு படம் குறிப்பிடும்படியாக இல்லை. ‘ஜெண்டில்மேன்’ சங்கர் புதிய கூற்றுமுறையினைக்கொண்டவர் அல்ல. மனோரமாவின் மேடை நடிப்புப் பாணி அவர்களின் படங்களுக்குப் பொருந்தாத ஒன்று என அவர்கள் கருதியிருக்கலாம். சிவாஜிக்கு இருந்த அதே மேடைநாடக பாணிச் சாபக்கேடு மனோரமாவிற்கும் இருந்தது. எந்த இயக்குனருமே சினிமாவிற்கான நடிப்பினை மனோரமாவிடமிருந்து வெளிக்கொணர முயற்சி செய்யவில்லை. சிவாஜியைப் போலவே மனோரமாவும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி மனோரமாவின் திறனைப் புரிந்துகொண்ட ஒருவர். அவர் தயாரித்த முதல்படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் மொழிமாற்றுப்படங்கள். ஒரு சில படங்கள் தவிர அனைத்திலும் மனோரமா இருந்தார். ‘நீதி’ எனும் படத்தில் நடிகர் சிவாஜியின் ரசிகையாக இருந்துகொண்டு உள்ளூரிலுள்ள சிவாஜியை ‘நீங்க சிவாஜி மாதிரியே இருக்கீங்க’ என அவரை விரும்பும் பாத்திரமேற்று நடித்தார். இதன் தொடர்ச்சியை ‘அண்ணன் ஒரு கோயில்’ படத்திலும் காணலாம். தியாகம், பில்லா, சவால் போன்ற பாலாஜி தயாரித்த படங்களில் மனோரமாவின் பாத்திரங்கள் குறிப்பிடத்தக்கவை. இப்படங்களில் மனோரமாவிற்கு சண்டைக்காட்சிகள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய நடிகர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு அவர்களைத் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் கமலஹாசன். நாகேஷ், காகா ராதாகிருஷ்ணன், மனோரமா போன்றவர்கள் இப்பட்டியலில் உண்டு. இருப்பினும் நாகேஷைத் தவிர மற்றவர்களுக்குப் பெயர் வாங்கித்தரும் வகையிலான பாத்திரங்களை அவர் படங்களில் அமைத்ததில்லை. கமலஹாசன் கண்டிப்பாக தனக்கு மனோராமாவை ஜோடியாக வைத்து ஒரு படம் தயாரித்திருக்கவேண்டும்.

அவர் தவறிவிட்டார். ‘சதிலீலாவதி’யில் கோவை சரளாவைப் பயன்படுத்தியதுபோல மனோரமாவையும் ஒரு படத்தில் பயன்படுத்தியிருக்கலாம். குறிப்பாக, ‘இந்தியன்’ படத்தில் சுகன்யா வேடத்திற்கு மனோரமா பயன்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக அமைந்திருக்கும். அப்பாத்திரம் கிட்டத்தட்ட மனோராமாவின் இயல்புகளைக்கொண்டது. நாட்டுப்பற்று கொண்ட ஒரு பொம்மலாட்டக் கலைஞர் பாத்திரத்திற்கு இந்திய - பாகிஸ்தான் போரின்போது தனது நகைகளை அள்ளிக்கொடுத்த மேடைநாடகக் கலைஞரான மனோரமாவைவிடப் பொருத்தமானவர் யாரிருக்கமுடியும்?.

தமிழ் சினிமாவில் புதியதொரு வகையினைத் தோற்றுவிக்க முயன்று வெற்றிபெற்ற படம் ‘சின்னத்தாயி’. அதேபோல தமிழ் சினிமாவில் புதியதொரு வகையினைத் தோற்றுவிக்க முயன்று தோல்வியடைந்த படம், ‘மாமியார் வீடு’. இப்படங்களின் இயக்குனர் கணேசராஜ் தனது அடுத்தபடத்தில் நடிக்கவைப்பதற்காக மனோரமாவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். கதையினைக் கேட்ட மனோரமா, ‘எனது வாழ்நாளிலேயே இப்படி ஒரு கதையினைக் கேட்டதில்லை. எனது வாழ்க்கையில் இப்பாத்திரம் ஒரு சாதனையாக இருக்கும்’ என நெகிழ்ச்சியுடன் பத்திரிகைகளில் கூறியிருந்தார். கணேசராஜ் திடீரென இறந்துவிட்டார். அப்படம் எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

தமிழ் சினிமா உலகில் எந்தவிதமான பின்புலமும் ஆதரவும் இன்றி தனது இசை ஆர்வத்தின் மூலம் வளர்த்துக்கொண்ட நடிப்புத்திறமையின் மூலமாகவே சிறந்த நடிகையாகவும் பாடகியாகவும் விளங்கிய மனோரமா, இனிவரும் நடிகர் நடிகையர்களுக்கு ஆச்சரியம் தரும் ஆளுமையாகவே விளங்குவாரே தவிர முறியடிக்கும் வகையிலான ‘சாதனை நடிகை’யாக இருக்கப்போவதில்லை என்பதுதான் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அவருக்குள்ள இடம். பாடும் திறனும், நடிப்பும் அவர் கழுத்தில் மாலைகளாய் சூடிக்கொண்டன. ‘அட்டகாசமாய் வந்து அலட்டல் செய்யக்கூடிய’ கதாபாத்திரங்களை ஏற்கும் நடிக, நடிகையர்க்கு மனோரமா காலந்தோறும் ஆசிரியராக இருப்பார்.

நடிகர் சங்கம் மனோரமாவிற்குச் செய்யவேண்டிய கடமை ஒன்று உள்ளது. இக்கோரிக்கையானது பல ஆண்டுகளாகவே சினிமா ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைதான். மனோரமா குறித்த ஆவணப்படத்தினை அது தயாரிக்கவேண்டும். ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வும்கொண்ட குழுவை உருவாக்கி அதைத் தயாரிக்கவேண்டும். ஒரு சிங்களப்படமே மனோரமாவின் முதல் படம் எனவும் மனோரமாவின் அண்ணனும் ஒரு நாடக்கலைஞர் எனவும் செய்திகள் உலவுகின்றன.

மனோரமா குறித்த ஆதாரப்பூர்வமான பதிவுகள் தேவை. அரசு ஊழியர்களுக்கு ‘சர்வீஸ் ரெக்கார்டு’ இருப்பது போல, ஒவ்வொரு கலைஞருக்கான ஆவணங்களையும் உருவாக்கி, அதை நடிகர் சங்கம் பராமரிக்கவேண்டும். மனோரமா மட்டுமல்ல, மறைந்த மற்றும் வாழும் கலைஞர்கள் அனைவருக்கும் இப்படியானதொரு பதிவைத் தயாரித்துப் பாதுகாக்கவேண்டும். நடிகர் சங்கம் செய்யத்தவறிய இப்பணிகளைச் செய்த, செய்துவருகின்றவர்களை நடிகர் சங்கம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை எஸ்.எஸ்.ஆர் குழுவிற்கு முன்பாக எம்.ஆர்.ராதா குழுவினர் மனோரமாவைச் சந்தித்துத் தங்களோடு இணைத்துக் கொண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்?

ஈழப்பிரச்சினையின்போது திரையுலகினர் நடத்திய போராட்டங்களில் மனோரமாவின் உணர்ச்சிப்பூர்வமான உரையினையும் மனதில்கொண்டு இச்செய்தியை அவதானிக்கலாம். கடந்த 10/10/2015 அன்று மனோரமா இறந்தபிறகு நடிகர் சத்யராஜ், “பெரியார் படத்தின் படப்பிடிப்பில் கடைசியாக அவருடன் நடித்துக்கொண்டிருந்தபோது தமிழ், தமிழர், தமிழ்தேசியம் பற்றி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார், “மானமும் அறிவும் துணிவும் தமிழர்க்கு வேண்டும்”, என்று பெரியார் சொன்னார். அதைத் தமிழர்கள் காதிலேயே வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லையே” என்று வருத்தத்துடன் கூறினார். நான் அவரது கையை இறுக்கப் பற்றிக்கொண்டேன்.” எனக் கூறியிருக்கிறார்.

இத்தனைக்கும் பெரியாரின் அக்கருத்து பெரியார் படத்தில் வராது. இருப்பினும் மனோரமா பெரியார் குறித்து அறிந்து இவ்வாறு கூறியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. மனோரமாவைப் பற்றி நாம் அறியாத முகம் இது.

ஒருவேளை, தமிழ்சினிமாவின் மாபெரும் ஆளுமையான எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் அவர் இணைந்திருந்தால் இன்று ‘ஆச்சி’யாக அறியப்படும் மனோரமா ஒரு ‘தமிழச்சி’யாக அறியப்பட்டிருக்கலாம்.

Pin It