நாட்டுப்புறக் கதை

பூதேகியம்மா தம்மகன் ஜீக்குட்டியை காலையிலிருந்து தேடாத இடங்கிடையாது. கல்யாணம் முடிக்கிற இளவட்டம். கொஞ்சமாச்சும் மனசுல எண்ண விசாரங்கிறதே கிடையாது. எந்த ஓடை உடைப்புல உக்காந்து சூதாடிக்கிட்டிருக்கானோ? வீட்டுக்கு ஒத்தப்பய. ஒரு சொன்னபடி கேக்குறதில்லே. இத்தனை வயசுக்குப் பிறகும் பெத்த தகப்பனும் தாயும் வம்பாடு படுறாகளே. நாம அவுகளுக்கு உக்கார வச்சி செய்யுறது போயி இப்படி ஊதாரியா திரியுறமேன்னு சுருக்கு தட்டுப்படுதா அவனுக்கு?

எப்படா விடியுமின்னு காத்திருந்து போறவன் சாப்புடாம கொள்ளாம ராவெல்லாம் சீட்டாடிக்கிட்டு திரிஞ்சா? கேட்டால் துட்டு நட்டம், கஞ்சி மிச்சம்ங்கிறான். இத்தனைக்கும் இன்னைக்கி காலையிலதான் லாக்கப்புல இருந்து வெளியே வந்திருக்கிறான். வந்தவன் வீடு வந்து சேராம, இந்தா பொழுதும் அடைஞ்சு போச்சு. தேடி அலுத்தும் போச்சு. இன்னும் ஆளைக் காண்க முடியல.

இப்படித்தான் போனவாரம் கம்மாக்கரையில உக்காந்து போலீஸ் வேன் வர்றது கூட தெரியாம மும்முரமா சீட்டாட்டம் நடந்திருக்கு. வண்டியை அப்படியே திருப்பி தோதா நிறுத்திக்கிட்டு அவ்வளபயகளும் ஒழுங்கா வண்டியிலெ ஏறி உக்காருங்கடான்னார் இன்ஸ்பெக்டர்.

உதைக்குப் பயந்து எல்லோரும் மளமளன்னு ஏறி உக்காந்துட்டாங்க. ஜீக்குட்டி பய மட்டும் ரொம்ப தயக்கமா தலைய சொறிஞ்ச மட்டுல இன்ஸ்பெக்டர்ட்டெ வந்தான்.

"நீ என்ன உனக்கு தனியா சொல்லணுமா ஏறுடா" லத்தியை ஓங்கினார்.

"சார் சார் நான் ரொம்ப கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன் சார். எங்க வகையில யாருமே இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேசன் படியேறுனதில்லே. நான் வேன்ல ஏறுனது தெரிஞ்சா ஊருக்குள்ள சிரிச்சுப் போடுவாக சார். இன்னாரு பிள்ளையான்னு குடும்ப மானமே போயிடும் சார்"

"அடடே அப்படியாப்பா சரிசரி கௌரவமான குடும்பத்தைச் சேந்தவனா நீயி! வா வா. 'யோவ் ஏட்டையா மத்த பயகளையெல்லாம் கொண்டுக்கிட்டு நான் வேன்ல ஸ்டேசனுக்கு போறேன். இந்தா இங்கே நிக்கிறவன் இந்த ஊர்லயே ரொம்ப கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவனாம். வேன்லயெல்லாம் ஏத்தி அவனை மரியாதைக் குறை செய்யவேண்டாம். நீரு என்ன பண்றீரு. அந்த சீட்டுக்கட்டை இவன் வாயில கவ்வக்கொடுத்து புறங்கை பின்னி இளிச்சவாக்கட்டு கட்டி ரோட்டு வழியா நடக்கவிட்டு கொண்டாய்யா.

"இன்ஸ்பெக்டர் வேனோடு போயிட்டார். இங்கிருந்து ஸ்டேசனுக்கு ரெண்டு மைலு. தேவையா ஜீக்குட்டி பயலுக்கு. இன்ஸ்பெக்டர் சொன்ன மாதிரி புறங்கை இளிச்சாக்கட்டு கட்டி சீட்டுக்கட்டை வாயில கவ்வச்சொல்லி ரோட்டு வழியா நடத்தி கூட்டிக்கிட்டு போனா ஊர்ச்சனம் பூராவும் நெடூக வேடிக்கை பாக்காங்க. நாய்க வளைச்சிக்கிட்டு ஓடி ஓடி குலைக்கி. ஏட்டையாவுக்கு நெடூக நாய்களை சேடு சேடுன்னு விரட்டி முடியல. 'வாய வச்சுக்கிட்டு சும்மா கிடக்காம என்னை வேற சீரழிய விட்டுட்டேயடா.

ஏட்டையா தன்னால வேர்த்து விறுவிறுத்துப் போயி பயலை ஸ்டேசன்ல கொண்டாந்து சேத்தார்.

"இன்னும்மே வேலை வெட்டிக்குப் போகாம கம்மாயில ஓடையில உக்காந்து எவனும் சீட்டு விளையாடுறதை பார்த்தேன் தொலைச்சுப்புட்டேன் தொலைச்சி. அவனவன் அட்ரஸச் சொல்லி கையெழுத்து போட்டுட்டு போ. சின்ன பெட்டிக் கேஸு ஒண்ணு போடுறேன் கூப்புடும்போது கோர்ட்டுக்கு வரணும்...ம்..."

இன்ஸ்பெக்டர் சொன்ன புத்திமதியைக் கேட்டு எல்லாரும் தலையை ஆட்டி கைநாட்டு போட்டாங்க.

ஜீக்குட்டி பழையபடிக்கும் இன்ஸ்பெக்டர்ட்டெ தலையை சொறிஞ்சமட்டுல திகைஞ்சி திகைஞ்சி நின்னான்.

"கையெழுத்துப் போடுறா. இன்னுங் காணாதா?"

"அதில்லைய்யா கோர்ட்டு கேசுன்னு போயி நான் கிளிக்கூண்டுல நின்னேன்னு தெரிஞ்சா நான் வீடு போயி நுழைய முடியாதுய்யா. ஊருக்கே ரோசனை சொல்ற குடும்பம் எங்க குடும்பம். சமன் வந்து அபராதம் தண்டனைன்னு ஆனா பிறகு நான் உசிரு வச்சு இருக்கமாட்டேன் பாத்துக்குங்க. பத்தணா பாட்டிலு வாங்கி குடிக்கணும். இல்லே கயிறு போட்டு நாண்டுக்கிடணும். வேற வழியில்லைய்யா இந்த ஒரு தடவை மாப்புவிடுங்க. நிறைஞ்ச இடத்துலெயிருந்து சொல்றேன். இனி மேக்கொண்டு புத்தியோட பொழச்சிக்கிடுறேன்.
"டேய் டேய் கிறுக்குப் பயலே... இந்த சிவன்டி பைவ் கேஸுக்கு அம்பது ரூபா பைன்போடுவான். இதுக்காகப் போயி கயித்துல தொங்குவேன் விஷங்குடிப்பேன்னு செத்துத் தொலையாதடா... யோவ் ஏட்டையா அந்தப் பயகளையெல்லாம் அடுத்தவாரம் வந்து பைன் கட்டச் சொல்லி அனுப்பிவையும். இவன் கோர்ட்டு சமன்னு போனா உசிரைவிட்டுருவேங்கிறான். நமக்கெதுக்குய்யா அந்தப் பாவம். இவனை வெளியே விடாமே அண்ணாக்கயித்தை அத்து லாக்கப்புல போடும். பிறகு எப்படி சாவான்னு பாக்கேன்.

ஒருவாரம் உள்ளே குடிச்சும் குடியாம கிடந்து பிறகு மருவாதியா எல்லாரையும் போல பைன் கட்டிட்டு காலையில வந்தவன்தான். ஊர்மடத்துல அரிக்கேன் லைட்டை பொருத்தி வச்சிக்கிட்டு சீட்டாடிக்கிட்டு இருக்கான்.

ஏ.அய்யா என் ராசா ஜீக்குட்டி! வந்தவன் வீட்டுக்கு வராம அன்ன ஆகாரம் பார்க்காம அப்படி என்னடா சீட்டு விளையாடுவே. அங்கே ஒந்தாத்தா சீவன் போகமாட்டாம இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு கிடக்காருடா. பாவமா இருக்கு. சந்தைக்குப் போன ஙொப்பனையும் காணாம். வீட்டுல ஆம்பளைக இல்லாம நான் கிடந்து சீரழியுறேன். வாடா எந்திரிச்சி. உனக்கு புண்ணியமா போகும். காலையிலிருந்து அலையுறேன்".

"ஒழுங்கா வீட்டுக்குப் போறீயா என்ன இப்பொ. மனுசன் தன்னால இங்கெ வயித்தெரிச்சல்ல கிடக்கான். துட்டுக்கு துட்டும் போயி நாலு ஆட்டைக்கு கடன் சொல்லி பசியிலெ விளையாண்டுக்கிட்டிருக்கேன். தாத்தாவுக்கு இழக்காம். வந்துட்டா தேடி!" 'ஏய் இந்தத் தடவை யாரு கலச்சிப் போடணும்... அங்கே என் ஆத்தாளை என்ன வேடிக்கை பாக்குறீங்க. அவ கிடக்கா. சீட்டைப் பாத்து ஆடுங்கப்பா'

ஆட்டத்துல மும்முரமா இருக்கான். புலம்பிக்கிட்டே தெரு வழியே இருட்டுல தட்டுத்தடுமாறி வீட்டுக்குப் போன பூதேகியம்மா கொஞ்ச நேரத்துல அரப்பும் பரப்புமா திரும்பி ஓடியாந்தா. கொஞ்சூண்டு அரிக்கேன் வெளிச்சத்துல மகன் உருவங்கூட அந்தக் கூட்டத்துல தெரியல. தோராயமா, "ஏயே ஐயா ஜீக்குட்டி ஒந் தாத்தா செத்துப்போனார்றா... எந்திய்யா... வீட்டுக்கு வாய்யா... ஐயா!"

கிளவர் ஆஸை இறக்கினாத்தான் இவனுக்கு ஆட்டை. வேறு வழி இல்லை. அந்தப் பந்தை இறக்கினால் எதிரே உள்ளவன் மெத்துறான். என்ன செய்ய உதட்டைப் பிதுக்கித் தலையை ஆட்டினான். "ம்... ஆடு" எதிரி அவசரப்படுத்தினான். "காது கேக்குதா இல்லையா தாத்தா செத்துப் போனாருடா ஜீக்குட்டி..!........."

"ஆஹா..... கதை முடிஞ்சதா......." தலையை இடவலமாய் ஆட்டினான். அவனுக்கான சீட்டை உருவி எறிந்ததும் சீட்டுகளை மடித்து பொத்தென்று கீழே போட்டவன் ஆத்தாபக்கம் எரிச்சலாய்த் திரும்பினான்.

"செத்துப் போனாருல்ல. எத்தனை தடவை சொல்லுவே. நான் அந்த வருத்தத்துலதான் உக்காந்திருக்கேன். செத்த பிறகு வீட்டுக்கு அவசரமா வந்து என்ன செய்யணுங்கிறே? இருக்கும்போதுதான் அங்கபோ இங்கபோ வைத்தியரை கூட்டியாம்பே. போய்ச்சேந்த பிறகு என்ன கொள்ளை போகுதோ?"

"சொந்தஞ்சுருத்துக்கு சொல்லி விடணும்டா அவங்களும் வந்து கடைசியா முகத்தைப் பாக்கணுமில்லே"

சீட்டோடு சீட்டாய் ஒவ்வொன்றாய் செட்டு சேர்த்து செருகியமட்டில் ஆத்தா அழுது முறையிடும் ஒவ்வொன்றுக்கும் பதிலை சொல்லிக் கொண்டிருந்தான்.

"இன்னும்மே வந்து கடைசியா முகத்தை பாத்துக்கிடறதுக்கு இதுக்கு ன்னாடி பாத்ததை கடைசியா வச்சுக்கிட வேண்டியதான. போத்தா பேசாம."

அவன் எழுந்திருக்கிற மாதிரி தெரியல. கொஞ்ச நேரம் நின்னு பாத்த பூதேதி ஆத்தாம நடந்து வீட்டுக்குப் போனாள். கூட்டம் நிறைய வந்திருந்தது. சந்தைக்குப் போன வீட்டுக்காரரும் வந்துட்டார்.

கிடப்பிலேயே கிடந்த உடம்பு. தாம்சம் வேண்டாம். ராத்திரியே எடுத்திரணும்னு எல்லாரும் யோசனை சொன்னாங்க...

நேரம் சாமத்தை தாண்டிரிச்சி. நீர்மாலைக்குப் போகணும். "இந்தாம்மா பூதேகி! உம்மகனை கூப்பிட்டு செம்பு எடுக்கச் சொல்லு. ஆத்துக்குப் போகணும்."

பழையபடி மடத்துக்கு ஓடியாந்தாள் பூதேகி. வேறு யாரையாவது அனுப்பு. நீ இனிம்மே வந்தே காலை சடக்குன்னு ஒடிச்சிவிட்டிடுவேன்னு அப்பவே சொன்னாம். பெத்த ஆத்தா கூப்பிட்டே வரலியாம்.

ஆட்டாளிகள்ல ஒருத்தன் பாத்துச் சொன்னான். 'ஜீக்குட்டி! உங்க ஆத்தா பொழுதனைக்கும் அலையுதுப்பா பாவம்".

"நீ ஆட்டையப் பாத்து ஆடப்பா. அப்பொ. ஙொய்யா வந்து கிடைக்குப் போகணும் வாடான்னு கூப்பிடும்போது நீ போனே? இப்பொ நா ஜெயிக்கிற நேரத்துல ஆத்தா வந்திருக்கா அப்பத்தா வந்திருக்கான்னுட்டு. சீட்டைப் பாத்து ஆடு".

"அடேய் இப்பொ வாச்சும் வாடா நீர்மாலைக்குப் போகணும். வந்த சனம் பூராம் உன்னைத் தேடுது கேவலப்படுத்தாதடா..."

"நீர் மாலைக்கா. வேற வேலை இல்லை. வந்தவனும் அவனன் வேலைக் கழுதைய பாக்கமாட்டான் போலுக்கு"

"ஆத்துலபோயி பேரன் செம்புல தண்ணியெடுத்திட்டு வந்து அதுலதாம் தாத்தாவ குளிப்பாட்டணும்னு சாஸ்திரம் இருக்குடா"

"ஏன் தெருக்குழாய்ல தண்ணி பிடிச்சி அதிலெ குளிப்பாட்டுனா மாட்டேன்டிருவாராமா ஒங்க அய்யா? ஆத்து தண்ணிதாம் வேணுமின்னு அடம்பிடிக்காரோ?"

பூதேகியம்மா நொந்து போனா. கடவுளே! நீதான் இந்தப் பயலுக்கு நல்ல புத்தி கொடுக்கணும். நா என்ன செய்வேன். வந்த ஆளுகளுக்கு பதிலென்ன சொல்லட்டும் ஆண்டவனே!

ராவோடு ராவா பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தல எல்லா ஏற்பாடும் நடந்து பிணத்தை குளிப்பாட்டி உட்கார வச்சாச்சி. நிலா மேற்கே சாய்ஞ்சி விடிவெள்ளி முளைச்சிருச்சி.

பேரனைக் கூப்பிட்டு கொள்ளிச்சட்டி தூக்கச் சொல்லுங்க. இவனை எங்கப்பா ஆளக்காண்கல. நாலாம்பேருக்கு தெரிஞ்சு ஆளத்தேடு முன்னே பூதேகி விக்கலும் வேதனையுமா மடத்துக்கு ஓடியாந்தா. கண்கள் நமைக்க தூக்க கலக்கத்தில் பார்வையை இடுக்கிக்கிட்டு கையிலிருந்த சீட்டை அரிக்கேன் வெளிச்சத்தில் பாத்தமட்டில் இதான் கடைசி ஆட்டை இதான் கடைசி ஆட்டை என்று சீட்டை கலைச்சிக்கிட்டுதான் இருந்தாங்க.

"ஏலே எடுபட்ட பயலே! கொள்ளிச்சட்டி தூக்கவாவது வாடா!"

"இந்தா இந்தா இதான் கடைசி ஆட்டை. நீ போ பின்னாடியே ஓடியாரேன். இன்னும் விளையாடணும்னா கூட அரிக்கேன்ல மண்ணெண்ணை கிடையாது."

"நீ வந்து கொள்ளிச்சட்டி தூக்காம பாடைய நகட்ட மாட்டாங்கடா சொன்னாக்கேளு".

"சொன்னாக் கேக்மாட்டே. அதான் உன்னோட எனக்கு எரிச்சலா வருது. கொள்ளிச்சட்டியாம் கொள்ளிச்சட்டி நீயெல்லாம் எந்தக்காலத்துல இருக்கே. அந்தக் காலத்துல இவ்வள வசதி கிடையாது. அதனால ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு சட்டியில கொட்டாங்கச்சியில கங்கு வளத்து கொண்டு போயிருக்காங்க. இப்பொ ரூபாய்க்கு நாலு தீப்பெட்டி தாரான். ஒரு குச்சியை உரசுனா ஊரையே கொளுத்தலாம்!"

"யப்பா யாரு ஆடணும். தூக்க கலக்கத்தல இருக்கீகளா. சீட்டு போட்டதிலிருந்து யாருமே ஆடக்காணோம். யாராவது எடுத்து ஆடுங்கப்பா. இத்தோட முடிச்சுக்கிடுவோம். ஙா.... ஆத்தா நீ போ இந்தா முடிஞ்சது"

வீட்டிற்குள்ளிருந்து பிணத்தைத் தூக்கி பாடையில் வைத்து கட்டுகிற நேரம். கொட்டுச்சத்தம் பலம்மாய் கேட்டது.

"அடேய் தூக்கிறப்பவாவது அங்க வந்து நில்லேண்டா"

"இந்தா வந்துட்டேன். இந்தா வந்துட்டேன். டேய் சீட்டுகளை இப்படிக் கொடு. என்னோட கலவை. இதோட முடிச்சுக்கிடுவோம். போன ஆட்டைக்கு பாயிண்ட்டை எழுதிட்டீங்களா! ஆத்தா... ஆத்தோவ்.... நாங்கிளம்பிட்டேன் நட பின்னாடியே வாரேன்."

பாடையைத் தூக்குகிற சத்தம் குளிர்ந்த அதிகாலையிலே குலவை கொட்டோடு கேட்டது. "ஏ என்னப் பெத்த ஐயா!" பூதேகி அழுதுகிட்டே ஓடுனா. பூதேகி ஓடியார்றதைப் பார்த்து சனம் பூராம் வழிவிட்டது. பூதேகி வைத்த ஒப்பாரிக்காக கொட்டும் குலவையும் அமைதியானது.

அந்தச் சமயம் மேற்கே விடிய விடிய சாராய ரைடு போய் திரும்புன டிஎஸ்பி ஜீப் மெயின்ரோட்டு மேல இருக்கிற மடத்துல கொஞ்சங்கூட பயமில்லாம அரிக்கேன் லைட்டை பொருத்தி வச்சுக்கிட்டு சீட்டு ஆடுறதைப் பார்த்து "நிறுத்துடா ஜீப்பை" கோபமா இறங்கி வந்தவர். 'ஒரு பயலை விடாம செம்மையா உதைச்சி வண்டியில ஏத்துடா' அவர் வாய்ச்சொல் வாயிலிருக்க அவ்வள பேரும் உதை படும் முன்ன ஓடிப்போய் ஜீப்புல ஏறிட்டாங்க.

ஜீக்குட்டி மட்டும் கும்பிடுபோட்டுச் சொன்னான்:" எசமான் ஊர்ல ஒரு சாவு எசமான். நாதி நாத்தங்கால் இல்லாத அனாதிப்பொணம். விடியவும் அடக்கம் பண்ணணும். ராத்திரி நேரம் பொணத்த நாய் நரி இழுத்திட்டுப் போயிராம முழிப்புக்காக ஆடுனோம் எசமான். நாங்கள்லாம் ரொம்ப கௌரவமான குடும்பத்தைச் சேந்தவங்க எசமான்."

- எஸ்.இலட்சுமணப் பெருமாள்

Pin It