“மலைவாழை அல்லவோ கல்வி - அதை
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி”
என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பெண் கல்வியை போற்றிப்பாடினார். ஆனால் இன்று விழுப்பரம் மாவட்டம் சின்ன சேலத்தில் எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் மூன்று மாணவிகள் மாண்டு போயுள்ளனர். அது தற்கொலை என்றும் கொலை என்றும் இரண்டுவிதக் கருத்துகள் இருக்கின்றன. மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்னும் அந்த மூன்று மாணவிகளும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களை நம்பியே அவர்களின் பெற்றோர்கள் உள்ளனர். மகள் படித்துவருவாள், அவளுக்கொரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்ற அவர்களின் பெற்றோர் கனவில் மண் விழுந்து விட்டது. இதற்கு யார் பொறுப்பு?
அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத மாட்டுக்கொட்டகை போன்ற இடத்தில், பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லாமலும், முறையான, பாதுகாப்பான தங்கும் வசதிகள் எதுவுமின்றியும் கூடுதல் கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு ஒரு மருத்துவக்கல்லூரி தமிழ் நாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த ஒரு கல்லூரி மட்டும்தான் இப்படியா? அல்லது இது போன்று எத்தனை கல்லூரிகள் இருக்கின்றனவோ!
இதுபற்றி மாணவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர்கள் சம்பத்திடமும், லட்சுமியிடமும் முறையிட்டுள்ளனர். அவர்களின் முறையீடுகள் அனைத்தும் குப்பைக்கூடைகளுக்குத்தான் போயின. எந்த நடவடிக்கையும் இல்லை. இத்தனைக்கும் மாணவர்கள் தீக்குளிப்புப் போராட்டம் கூட நடத்தியுள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் அக்கறையற்ற, தன்காரியப் புலியான ஒரு முதலமைச்சர் ஆளும் அரசில் மாவட்ட ஆட்சியர்களும் அப்படித்தானே இருப்பார்கள்.
மாணவர்கள் டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முறையிட்டுள்ளனர். அங்கும் எந்தப் பலனும் இல்லை. அடுத்து மருத்துவக் கவுன்சிலிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் ஒரு விசாரணை நாடகத்தை நடத்தி முடித்து , “எல்லாம் சரியாக இருக்கிறது. கல்லூரி நிருவாகத்திடம் தவறு இல்லை. மாணவர்களிடம்தான் குறை இருக்கிறது “ என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். “வசூல் ராஜா
எம்.பி.பி.எஸ்” திரைப்படத்தில் கமலஹாசன் போலி மருத்துவமனை, போலி டாக்டர்கள், போலி நோயாளிகளைக் காட்டியபோது அது திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியாகக் கடந்துபோனது. ஆனால் இன்று, திரைப்படக் கற்பனையையும் தாண்டிய பல கொடுமைகளும், கொடூரங்களும் இக்கல்லூரியில் நிகழ்ந்துள்ளன.
மாணவர்கள் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டுள்ளனர். கொத்தடிமைகள் கூட முதலாளிகளிடம் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு தங்கள் உழைப்பைக் கொடுப்பார்கள். ஆனால் இங்கு, மாணவர்கள் பெரும் தொகையைக் கல்லூரி முதலாளிகளிடம் கொடுத்துவிட்டுக் கல்லூரி வகுப்பறை முதல் கழிவறைகள் வரை அனைத்தையும் சுத்தம் செய்துள்ளனர். பல நேரங்களில் கட்டிடம் கட்ட வரும் செங்கல், சிமெண்ட் மூட்டைகளை இறக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு “கர்மயோகா” என்று பெயராம்.
மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கவுன்சில், மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பல்வேறு கதவுகளைப் பலமுறை தட்டிப்பார்த்து சோர்ந்துபோய் மாணவர்கள் கல்லூரி நிருவாகத்திடம் தங்கள் கல்விச்சான்றிதழ்களைக் கேட்டபோது மொத்தப் படிப்புக் காலத்திற்குமான கல்லூரிக் கட்டணத்தைக் கட்டினால்தான் தரமுடியும் என்று கூறியுள்ளனர். வேறு வழியே இல்லாது போனதால்தான் அந்த மூன்று மாணவிகளும் இத்தகைய கொடூர முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரணத்தையோ, இவர்களைப்போன்று இன்னும் அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தையோ, நியாயமாக இந்த அரசு வழங்குமா? இக்கல்லூரி போன்றே தமிழ்நாட்டில் இன்னும் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையோ நிச்சயம் இன்றைய அதிமுக அரசிடம் எதிர்பார்க்க முடியாது. அதை அடுத்து வர இருக்கிற திமுக அரசுதான் செய்ய முடியும் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் இப்பிரச்சனையில் அடுத்து வருகிற திமுக அரசு செய்யவேண்டியவை என்று மாணவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், இவை போன்ற சுயநிதிக்கல்லூரிகளின் தரத்தையும் தகுதியையும் ஆய்வு செய்து தகுதியற்ற கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து அவர்கள் படிப்பைத் தொடரவும், தேர்வு எழுதவும் வழிவகை செய்யவேண்டும்.
கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அவர்களின் பள்ளிக்கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்தவுடன் மாணவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட உத்தரவிட வேண்டும். அவைகளை கல்லூரி நிர்வாகமே வைத்துக் கொண்டு மாணவர்களை மிரட்டுவதும், பழிவாங்குவதும்மு கூடாது.
மாணவர்கள் செலுத்தும் கட்டணங்களை முறைப்படுத்துவதுடன் அவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு உரிய ரசீதுகளையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவையனைத்தையும் அடுத்துவரும் திமுக அரசு செய்யும் என்ற நம்பிக்மருகையோடு நாடு காத்திருக்கிறது.