17-12-32ந் தேதி கூடிய ஈரோடு முனிசிபல் கூட்டத்தில் முனிசிபல் கௌன்சிலர் தோழர்கள் எஸ்.ஆர். கண்ணம்மாள், கேசவலால் சேட் ஆகியவர்கள் முனிசிபல் அதிகாரத்திற்குட்பட்ட உத்தியோங்களில், பெண்களையும் நியமிக்க வேண்டுமென்று தீர்மானங்கள் கொண்டு வந்ததும் அத்தீர்மானங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேறியதும் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.
அத்தீர்மானங்களின்படி முதலாவதாக அம்மை குத்தும் வேலைக்கு ஒரு பெண்மணியையும், ஆண் பாடசாலைகளுக்கு பல பெண் உபாத்தியாயனிகளையும், ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் ஒன்றாகச் சேர்த்தும், அவற்றிற்கும் பெண் உபாத்தியாயனிகளையும் ஆண் உபாத்தியாயர்களும் சேர்ந்து கற்பிக்கும்படியும் உத்திரவிட்டிருக்கிறார்கள். இதற்காக நாம் முனிசிபல் கவுன்சிலையும், சிறப்பாக கமிஷனரையும் பாராட்டுவதுடன், தீர்மானத்தின்படி மற்ற உத்தியோகங்களுக்கும் பெண்களை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
நிறைவேறிய தீர்மானங்கள்
1. C.R. No. 462 நம்பரின் தீர்மானமாவது
2. பெண்களுக்கு உத்தியோகம் கொடுக்கும் விஷயத்தில் மரண ஜனன பதிவு செய்தல், அம்மை வைத்தல், ஷராவ், டைப்படித்தல், ஆபீஸ் பியூன் வேலை, மற்றும் அநேக விதமான உத்தியோகங்களைப் பெண்களுக்கு வீதாச்சாரப்படி ஒதுக்குவதுடன் அவைகளில் அவர்களை நியமனஞ் செய்ய வேண்டும்.
3. மேலே கண்ட உத்தியோகங்களுக்கு விசேஷமான பரீக்ஷை, அல்லது தேர்ச்சி வேண்டுவதாயிருந்தால், கூடியவரையில் வேண்டிய உதவியைக் கவுன்சிலர்கள் செய்ய வேண்டியது.
4. பெண்பிள்ளைகள் பாடசாலைகளிலுள்ள உபாத்தியாயனிகளைத் தவிர்த்து ஆண்பிள்ளைகள் பாடசாலைகளிலும், பெண் உபாத்திமார்களை நியமனஞ் செய்ய வேண்டும் ஏகமனதாய் நிறைவேறிற்று.
(குடி அரசு கட்டுரை 09.06.1935)