கிராமங்களை விதந்தோதும் கருத்தியலும், நுகர்வுப் பண்பாடும், அரசியல் தரவுகளும் நிறைய உண்டு நம்மிடம். இந்தியாவின் முதுகெலும்பாய் கிராமங்களை நம்பிய அரசியல் தலைவர்களின் களச்சிந்தனையும் புளிக்கத் தொடங்கிவிட்டது. கிராமத்தின் வீதிகளில் நாம் கண்டடைந்த கண்டுபிடிப்புகள் மீதான சிலாகிதங்கள் குறித்த சந்தேகங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறை கோயில் கொடையோ, உறவினர் திருமணமோ, முதியவர் மரணமோ என பூர்வீகக் கிராமங்களைத் தேடிப்போனதும் பால்யத்தின் நினைவறைகளில் அடர்ந்து நூலாம்படைகளை விரித்துக்கொண்டன. கவிஞனின் வியப்புக்கு ஒவ்வாத நிறைய கள்ளிச்செடிகள் வீட்டின் சுவர்களில் முளைத்து கிராமங்கள் வாழ்விடத்திற்கான தகுதிகளை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

இன்று களப்பணிக்காக தமிழகத்தின் இடுக்குகளிலெல்லாம் ஒடுங்கிப்போன முதுகெலும்பற்ற நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சென்று சேர்ந்து, இரவெல்லாம் அங்குள்ள பெண்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் மினுக்குவது அவர்களின் கண்கள் ஏந்தியிருக்கும் அகல்விளக்குகள் மட்டுமே. நாகரிகத்தின் எந்த வளர்ச்சியையும் ருசித்திராத அப்பெண்களும், அவர்களின் கனவுகளை மறுக்கும் வாழ்க்கையும் நிறைய புனைவுகளை மறுக்கும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. ஆரோக்கியம் அளிக்காத உணவு, விளிம்புகள் கிழிந்து நார்நாராய்த் தொங்கும் ஆடைகள், தட்பவெப்பநிலைகளை வெல்ல முடியாத வீடுகளும் அனுசரிக்க முடியாத உடல்களும், உயிருள்ள பொம்மைகளாகக் குழந்தைகள், துணைக்கு சொறிபிடித்த தெருநாய்கள், தண்ணீர் முதற்கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்குமே போராடினால்தான் கிட்டும் நிலை, எப்போதும் மரணத்தோடும் நோய்களோடும் புழங்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கை... என கிராமங்கள் பிணவறைகளாய் மாறத்தொடங்கி வெகுகாலங்களாகிவிட்டன.

நகரம், அதன் காலடியில் வளரும் நெருக்கடியான புழுதி நிறைந்த புறநகர், இவற்றிலிருந்து விலகி சிலமணிநேரப் பேருந்துப் பயணங்களின் குலுக்குதலுக்குப் பின் நாம் சென்று சேரும் கிராமம், கிராமத்துடன் ஒட்டாமல் சேரி, சேரியிலிருந்து ஒற்றையடிப்பாதையில் நடந்து புறம்போக்கு நிலங்களை ஏகினால் பழங்குடிகளின் குடியிருப்புகள் என புவிவரைபடத்தை மனதில் இருத்திக்கொள்வது நமது சமூக அமைப்பையும், நிலைமையையும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். இந்நிலையில் பெயருக்கு சாலையென்றியங்கும் மண்பாதைகளில் குறுக்காக ஓடும் சாக்கடைகளைத் தாண்டி கரைவேட்டிக்கால்கள் வருவது வாக்குகளை சம்பாதிக்க மட்டுமே. இத்தகைய கிராமங்களில் மக்கள் எவ்வளவு மூர்ச்சித்து விழா கொண்டாடினாலும், சடங்குகள் நிகழ்த்தினாலும், பலியிட்டாலும் தேவதைகள் வருவதுமில்லை. வசிப்பதுமில்லை. கிராமத்துப்பாதங்கள் என்பதைக்கூட தார்ச்சாலையின் தகிக்கும் வெயிலுக்குப் பழகிப்போன பிஞ்சுப்பாதங்கள் என்றே நாம் அர்த்தம்கொள்ள வேண்டும்.

நகரத்திற்கும் கிராமத்திற்குமான இத்தகைய ஏற்றத்தாழ்வினை உணராது கிராமங்களைக் கொண்டாடுவது கூட மனிதமனத்தின் கொடும் வெறிதான்! மரங்களெல்லாம் வெட்டப்பட்டு மனிதனின் காலைக்கடனுக்கு வசதிவாய்ப்பாய் இருந்த புதர்களும், குளங்களும் அழிக்கப்பட்டு, செல்லும் கிராமங்களிலெல்லாம் பெண்கள் அத்தியாவசியத் தேவையாக முன்வைப்பது கழிப்பறைகளே. அரசாங்கத்திடம் அதற்கான திட்டம் ஏதுமில்லை. சிறுமலைகளெல்லாம் கல்சுரங்கங்களாகிவிட்டன. பெரும்பான்மை கிராமங்களின் புனைவுப்படுகையாக இருந்த ஆறுகள் எல்லாமும் மணல் கொள்ளையால் பூதாகரமாகிவிட்டன. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமரசங்களால் மூடிமறைக்கப்படுகின்றன. ஏன் கொலைகளும் கூட. வறட்டு கௌரவங்களின் தூண்கள் மீது கிராமங்கள், எலும்புகள் அரிக்கப்பட்டு மூச்சிழுத்துக் கொண்டிருக்கின்றன. பெண்களின் பயணவெளியைக் குறுக்கும் இக்கிராமங்களிலிருந்து பெண்கள் நகரத்தின் திசைநோக்கிய சாலைகளில் பயணிக்கத் தொடங்கவேண்டும்.

பெண்_ஆண் பேதமின்றி நகரம், எல்லோரையும் வாழ்வியல் போராட்டத்திற்குள் தள்ளுகிறது. ஆக, சமத்துவம் செயல்படத் தொடங்கிவிட்டது. கிராமத்தில் நவீனத்தின் உச்சங்களெல்லாம் பெண்களுக்கு உடனுக்குடனே அறிமுகமாவதில்லை. ஆனால் நகரங்களில் அது எந்தத் துறையிலென்றாலும். நகரத்தில், தானியங்கிப் பணஇயந்திரத்திலிருந்து உணவு, உடை, வீட்டுப்பொருட்கள் என எல்லாவற்றையும் பெண்கள் தானே தனியே சந்திக்க, கையாள நேர்கிறது. படைப்புத்திறனுக்கு சவால் விடுப்பத்திலிருந்து சுயஇருப்பை கேள்விக்குட்படுத்துவது வரை பெண் தனது சாத்தியப்பாடுகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அதிகம்.

உணவுவிடுதிகளில் தனியே அல்லது தோழிகளுடன் சென்று உணவருந்துவது, தேநீர்க்கடைகளில் மணிக்கணக்காக உரையாடுவது, திரையங்குகளுக்குச் செல்வது, கலை, இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுப்பது அல்லது அவற்றிற்குப் பார்வையாளராகச் செல்வது, பேருந்து, இரயில்களில் நானாதிசைகளிலும் பயணிப்பது, புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகத் தேடுதலில் மூழ்கிப் போவது, தேவையான பொருள்களை வாங்க கடைகளைத் தேடிப்போவது, பெண் அல்லது ஆண் உறவுகளில் பாலியல் சார்ந்த, அல்லாத விவாதங்களில் பரிசோதனை நிகழ்த்திப் பார்ப்பது, புதிய வேலைவாய்ப்புகளைக் கண்டடைவது, அன்றன்றைக்கு அறிமுகமாகும் வடிவமைப்புப் பாணிகளால் சுயஆளுமையைக் கட்டமைத்துக்கொள்வது அல்லது திருத்தம் செய்து கொள்வது, தனது ஆளுமையைத் தானே கண்டடைவது, சிறப்புரிமைகளால் பெறும் இன்பத்தில் தோய்ந்து போவது... என இவையெல்லாம் பொதுவாகவே பெண்களுக்கு சமூக வரலாற்றில் அரிதாகவே கிட்டிய வாய்ப்புகள். இவை பெண்ணின் படைப்புவெளியையும் காலஞ்சார்ந்த வெளியையும் விரித்துக் கொடுக்கின்றன. தனது நலிவைத் தானே சரிசெய்துகொள்ள முடிகிறது. பெண்ணின் இதற்கான தேவையையெல்லாம் உணராத சமூகத்தில், நகரம்தான் இந்த அற்புதத்தைச் செயல்படுத்த முடிகிறது.

கிராமத்தில் எல்லோரின் மேற்பார்வைகளுக்குள்ளும் இயங்கும் நிலையிலிருந்து நகரத்தில் தனது ஒவ்வொரு நிலையையும் தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். சுமையும் பொறுப்பும் விளைவும் அவளுடையதே. நகரத்தில் பெண்களுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. பெண்ணின் உடல், ஊடகங்களால் வெறும் பாலியல்சார் படிமமாகவே பார்க்கப்படுவதன் நேரடியான தாக்கங்களை நகரங்களில்தாம் உணரமுடியும். இதனால் உடல் பற்றிய மயக்கத்திலும், அது சார்ந்து நகரம் தரும் புதிர்ச்சூழலிலும் மூழ்கிப்போய்விடக்கூடும். அதிலிருந்து தன்னை மீட்க படைப்புத்திறனே அசாத்திய அளவில் தேவைப்படுகிறது. இதை மட்டும் பெண்கள் ஈட்டிக்கொள்ள முடியுமானால் நகரம் தரும் நவீனச் சிக்கல்களையெல்லாம் பெண்கள் சுலபமாக வென்றுவிட முடியும். எனில், நகரமே பெண்களின் திசை!

- குட்டி ரேவதி

Pin It