பழகிய மனிதர்கள் யாவரும் இனி மனக்குறிப்புகளில் மட்டுமே வாழக்கடவது என சபிக்கப்பட்ட வாழ்க்கையின், ஒரு பகல் நேர ஷிப்டின் போது தமிழ் லட்சுமணனின் மரணச் செய்தியோடு என்னைப் பார்க்க வந்திருந்தான்.

சாவின் செய்தி சொல்லி கிடங்கு அதிகாரியிடம் அனுமதி கேட்டபோது, கப்பலிலிருந்து இறங்கும் இரும்பு உருளைகளின் கணக்கினை யாரை வைத்து எடுப்பது என எதிர்க் கேள்வியொன்றை வைத்தார். தயவு நாடி போகிறபோது அதிகாரிகளின் கால்கள் ஆடிக் கொண்டிருக்கும் என்பதை பல சந்தர்ப்பங்களில் பார்த்து வைத்ததால், இம்முறை ஆடி ஒன்றும் என்னைப் பாதிக்கவில்லை. தவிர அதிகாரிகளுக்கு மரணித்தவர்கள். மரணிக்க இருப்பவர்களுக்கான உதவிகளைக் காட்டிலும் இரும்பு உருளைகளின் கணக்கே முக்கியமானது. ஒன்றிரண்டு என்னைத் தெரிந்த சக ஊழியனை அவர் முன்னர் நிறுத்தி விட்டு தமிழோடு விரைந்தேன்.

"தகவல் எப்படி கிடைச்சுது. எப்படி இறந்தானாம்?"

"இஸ்மாயில் சொன்னான் சந்துரு. எப்படிடான்னு கேட்டதுக்கு நேரில வா சொல்றேன்னான். யார் யார் கிட்டேயோ கேட்டு என் நம்பரை வாங்குனானாம். உன் நம்பர் கிடைக்கவேயில்லைன்னான். ராத்திரியிலிருந்து மோகனும் அவன் கூடத்தான் இருக்கானாம்."

"வீடு எங்கே யாம் தமிழ்?"

"சத்தியமூர்த்தி நகர்லயாம். இறங்கி ஸ்டாண்டுல கேட்டா சொல்வாங்கலாம்."

"சத்தியமூர்த்தி நகர்னா என்னைத் தாண்டித்தான் லட்சி போவணும். ஆனா ஒரு முறை கூட கண்ணுல படவேயில்லையே தமிழ்"

"லட்சிக்கு மிஞ்சிப் போனா நாப்பத்து நாலு இருக்குமா சந்துரு?"'

"அவ்வளவு தாண்டா இருக்கும். நம்ம கேங்ல லட்சி, இஸ்மாயில், மோகன் மூணு பேருதான் சின்னப்பசங்க."

"மூணு பேருக்கும் மூடி கரு, கருன்னு இருக்கும். மோகனுக்கு மட்டும்தான் கோரைமுடி. லட்சி, இஸ்மாயில் இரண்டு பேருக்கும் சுருட்டை முடி. நான் கூட கிண்டல் பண்ணுவேன். கட்டிங் பிளேயர் வைச்சு இழுத்தாக் கூட உங்க இரண்டு பேருக்கும் முடி கொட்டாதுன்னு, பெருமையா சிரிப்பானுங்க... எனக்குத் தெரிஞ்சி இப்பவும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்."

"நா கடைசியா லட்சியையும், மோகனையும் பார்த்தது இஸ்மாயில் கல்யாணத்துலதான். அதுக்கப்புறம் அவனுங்கள நான் பார்க்கவேயில்ல தமிழ்."

"ஜனா, மூணு பேரும் எப்படியாச்சும் என் கண்ணுல சிக்கிட்டேயிருப்பானுங்க சந்துரு. கடைசியா லட்சியை பாத்தப்ப கிரவுண்ட்ல பார்த்த அதே முகத்தோடதான் இருந்தான். ஆனா போதையில விழுந்து அடிபட்ட தழும்புங்க உடம்பு பூரா இருந்துச்சு. ஒரு மூடி கருக்கலை சந்துரு."

பழகியவர்களின் முகங்கள் நினைவில் உள்ளது போலவே பத்து, பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் இருந்தால், முதலில் அவர்களிடம் அதைப்பற்றிச் சொல்லும் போது சிரித்துக் கொண்டே பேச்சை மாற்றி விடுவான். அதைப் போலவே தமிழ் பேசாமல் பிறகு எதைப் பற்றி பேசுவது, தமிழ் கூட அன்றிருந்த மாதிரியே இன்றுமிருக்கிறான். தமிழிடம் அதைப்பற்றி லட்சியைப் பார்த்து வியந்து என்னிடம் சொன்ன அபிப்ராயத்தை லட்சியின் காதுகளுக்கு இனி யார் சொல்ல முடியும்?

நடு நிசிகளைத் தாண்டி சிரித்து மகிழ்ந்த எங்களது சபையின் முதல் மரணத்தை லட்சி நிகழ்த்தியிருந்தான். லட்சியின் மரணச் செய்திக்கு பின்னால் நின்று கொண்டு நாங்கள், லட்சி, இஸ்மாயில் மோகனோடு சிரித்து மகிழ்ந்த அந்த கடைசி நாள் எதுவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.

இஸ்மாயில், மோகன், லட்சுமணன் இந்த வரிசைதான் அவர்களுடையது. அவர்கள் மூவருமே கிட்டத்தட்ட மென்ட்டல்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு வசதியாக ஆளுக்கொரு கதைகளோடு மாலை கூடும் சபைகளில் ஆஜராவார்கள். கதைகள் முடிந்த கையோடு அவர்களுக்கான ரகசியப் பெயர்களை உருவாக்குவதற்கு சபை துடிக்கும். `த்ரி மஸ்கிட்டோஸ்' என்பதே சரி என்று விவாதமாகி இறுதியில் `மூன்று கொசுக்கள்' என்பது பொதுப்பெயரானது.

பெயர் சூட்டும் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு பேசிய ராஜா பீட்டரென்றும், ஐசக் கம்பனென்றும் அழைக்கப்பட்டார்கள். பொழுதெல்லாம் மாலையாகிப் போன சபையில் `த்ரி மஸ்கிட்டோஸ்' பற்றி கழுவாத நாள் இருந்ததில்லை. இரவெல்லாம் சிரித்துக் கழித்த நாளில் ராஜாவின் திருமணமான நாளுக்கு நிறைய இடமிருந்தது. திருமணமான சர்ச்சில் வைத்தே இஸ்மாயில். ராஜாவுக்கு கோட் அவ்வளவு நல்லாயில்ல" எடுப்பா அமையலேன்னு சொல்லிட்டிருந்திருக்கான். செய்தியைத் தூண்டில் போட்டு பிடிப்பதில் கெட்டிக்காரன் பிரேம். சபையில் இதை வைச்சு ராஜாவுக்கும், இஸ்மாயிலுக்கும் கோத்து விட்டு வேடிக்கை பார்க்கலாமென்றான்.

ராஜாவுக்குத் திருமணமான அடுத்த நாள் கூடிய சபையில் இஸ்மாயிலை அமுக்கிப் பிடித்து கோட் விவகாரத்தைக் கேட்டதில் பயல் விழுந்து விட்டான். அடுத்த மாதம் நடக்கவிருக்கிற தனது கல்யாணத்தின் போது தான் கோட் சூட் போட்டுட்டு நிக்கிறப்பத்தான் நீங்க ஒத்துக்குவீங்க என்றான். அப்பல்லாம் எங்களால சரியா பார்க்க முடியாது. இப்ப சபை முழுசா இருக்குது. ராஜாவும் இருக்கான். இப்ப போய் போட்டுட்டு வந்தால் உங்க இரண்டு பேரில் யாருக்கு கோட் அழகுன்னு சொல்லிடுறோம் என்று பிரேம் வலையை வீசி சுறாவை பிடித்த போது மணி சரியாக பன்னிரெண்டு. கல்யாணமான ராஜாவைத் தேடி முதல் குரல் மைதானத்திற்கு வந்து சத்தம் போட்டுச் சென்றது தம்பியின் உருவில்.

இஸ்மாயில் கிளம்பிப் போகும் போது ஐசக், டேய் இவனுக்காக சொல்றாங்கன்னு அப்படியே வந்து நிற்காத. மூஞ்சியைக் கழுவி, பவுடர் போட்டுட்டு வா அப்பத்தான் எடுப்பா இருக்கும்னு தோடு கொடுத்ததையும் வாங்கி அதில் காதில் மாட்டிக் கொண்டு போனான் "இஸ்மாயில்."

போனவன் சரியாக கால் மணி நேரம் கழித்து புதிய கோட், சூட்டில் முகமெல்லாம் பவுடர் அப்பிக் கொண்டு குமட்டல் வரக்கூடிய சென்டை பூசிக் கொண்டு சைக்கிளில் வந்து சேர்ந்தான்.

சைக்கிளில் வந்தவன் அதிலிருந்து இறங்காமல் போஸ் கொடுத்து நின்றபடி, லைட்டர் எடுத்து மேல் பாக்கெட்டிலிருந்து சிகரெட் எடுத்து பத்த வைச்சான். வாயிலிருந்து சிகரெட் எடுக்காமல் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு ஸ்டைலாக இறங்கி நடந்து வந்தான். யாருமே சிரிக்கக்கூடாது என திட்டமிட்டிருந்ததால் சிரிக்காமல் அமைதியாக இருந்தார்கள். எப்படியும் நான் சிரித்து விடுவேன்னு ராஜாவுக்குத் தெரியும். மேட்டர் பசரு ஆயிருமேங்கிற பயத்தில் பாக்கெட்டிலிருந்து காசு எடுத்துத் தந்து சிகரெட் வாங்கி வரச் சொன்னான். எத்தனை எனக் கேட்டதற்கு பிரேம் சபை இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு தாங்குமென்கிற தைரியத்தில் இரண்டு பாக்கெட் என்றான்.

நடப்பது ஒன்றுமே புரியாமல் இஸ்மாயில் வத்திப்பொட்டி வேணாம். எங்கிட்ட பாரின் லைட்டர் இருக்கு என்று சொன்ன நிமிடத்தில் சபையில் சிரிப்புச் சத்தம் களைக்கட்டத் தொடங்கியது. சிகரெட் வாங்கப் போவதா வேண்டாமாவென்று நின்றேன். கிளம்புடா சந்துரு. "பசறு பண்ணதாடா" என்று ராஜா கத்தினான். நான் சிகரெட் வாங்கி திரும்பி வருவதற்குள் சபையில் ஏகப்பட்ட அமர்க்களம் நடந்து கொண்டிருந்தது. இஸ்மாயிலை தனியே அழைத்துப் போய் கிரவுண்டில் விதவிதமான நடையை அவனை நடக்க வைத்து மார்க் போட்டார்கள் பிரேமும், ஐசக்கும். இன்னொரு பக்கத்தில் நாகராஜ், தமிழ், ராஜா அவனோட மச்சான் பால்சிங் கிரவுண்டில் விழுந்து பிரண்டு சிரித்துக் கொண்டேயிருந்தார்கள். என்ன நடந்திருக்கும் எனக் கேட்க வேண்டிய அவசியமேயில்லை. நானும் ஜோதியில் ஐக்கியமானேன். சிரித்து, சிரித்து வாயெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. எங்கள் சிரிப்புச் சத்தம் அதிகமாகும்போது பிரேம் அங்கிருந்து `கபர்தார்' என்பான்.

கடைசியாய் இஸ்மாயிலை எங்களிடம் அழைத்து வந்து முன்னால் நிஉத்தி பிரேமும், ஐசக்கும் எல்லா ஆங்கிள்லயும் பாத்தாசுப்பா. இஸ்மாயிலுக்குத்தான் கோட் அழகு. ஆனா இன்னும் சுரேவும், மணியும் பாக்கலை. நாளைக்கு இஸ்மாயில் மறுபடியும் கோட்டோடு வரட்டும். அவனுங்களும் பாத்துட்டாங்கண்ணா அவனுங்களையும் கேட்டுட்டு கன்பர்மா சொல்லிடலாம். ஆனா மச்சான், கோட்ல ராஜா சப்பைக் குதிரைதான்டா. ராஜாவை சப்பைக் குதிரைன்னு சொல்றப்ப இஸ்மாயில் முகம் மலர்ந்தது. ஆனா அவ்வளவு சீரியசா முகத்தை வைத்துக் கொண்டு பிரேம் பேசினதுக்கு பலன் மட்டும் கிடைக்கவில்லை. "அதெல்லாம் முடியாதுப்பா. மெஜாரிட்டி சொல்லிட்டிங்க எனக்கு அது போதும்பானு அவன் கிளம்பிப் போனதும் பிரேமும், ஐசக்கும் அவன் நடையை நடந்து காட்டி சபையை சிரிக்க வைத்தார்கள். சிரிப்பு முடிகிற இடத்தில் சைக்கிளில் வந்து இறங்கி லைட்டர்ல பத்த வைக்கறதை ஐசக் ஞாபகப்படுத்துவான். மறுபடியும் துவக்கத்திலிருந்து கதை ஆரம்பிக்கும். மச்சான் பாரின் லைட்டரு, மாமன் கொடுத்தாருன்னு சொல்றான். அது எரியவே மாட்டுதுன்னு பிரேம் இடையில் இன்னொன்றைச் சொருகுவான். சிரிப்பு வெடிச்சத்தமாகக் கிளம்பும்.

சிரித்து, சிரித்து ஓய்ந்திருந்த வேளையில் ஐசக், லட்சியின் பழைய சேட்டையொன்றை ஞாபகப்படுத்தி என்னைச் சொல்லச் சொன்னான். பிரேமும், மற்றவர்களும் நச்சரித்தார்கள். `மச்சான். இந்தக் கதை முடிஞ்சதும் கிளம்பிடலாம். தங்கம் விடற நேரம். பால் சாப்பிட்டு தொங்கலாம்னு சபை முடிவு கட்டிய நேரத்தில் ராஜாவின் வீட்டிலிருந்து இரண்டாவது குரல் அப்பாவின் உருவத்தில் வந்தது. பதிலேதும் பேசாமல் கிளம்பிப் போனார்கள். ராஜாவும் அவன் மச்சான் பால்சிங்கும்.

லட்சுமணன் கதையை நான் ஆரம்பித்தேன். போன மாசத்துல ஒரு நாள் ராத்திரி கொத்து விட்டுட்டு கிரவுண்ட்ல உட்கார்ந்து தம்மடிச்சுட்டு இருந்தேன். நா கிரவுண்ட்ல இருந்ததை லட்சி கவனிக்காம பார் கம்பியைப் பிடிச்சுத் தொங்குனான். தொங்கிக்கிட்டே நாக்கால தட்டி டொக்கு, டொக்குனு சத்தம் வேற தரான். சத்தம் கேட்டு செல்வி வந்து என்னானு இவனைக் கேட்டுது. இவன் ஒண்ணுமில்லன்னு சிக்னல்ல சொன்னதும் அது உள்ளே போயிடுச்சு. அது போயி ஒரு நிமிசம் கூட ஆகலை. மறுபடியும் டொக்கு டொக்குங்கிறான். மறுபடியும் அது வெளியே வந்ததும் சாப்டியான்னு சிக்னல்ல கேட்டுட்டு போனு அனுப்பிச்சுடறான். மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு அதே மாதிரி தட்டுறான். நான் படுக்கப் போறேன்னு கிளம்பிட்டான். நான் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு எதுவுமே தெரிஞ்சிக்காத மாதிரி என்ன லட்சி இந்நேரத்துல கேட்டதுக்கு உன்னை நான் பார்க்கவேயில்லேன்னு ஆச்சரியப்பட்டவன்,  நான் செல்லியோட பேசுனதைப் பாத்தியா சந்துருன்னான். நீ எங்கடா பேசினே; டொக், டொக்குன்னு கூப்பிட்டே, என்னமோ சிக்னல்ல சொன்னே இப்ப கிளம்பிட்டேன்னு சொன்னத்துக்கு இல்ல சந்துரு. அதுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது. அவ இன்னமும் என் மேல லவ்வா இருக்காளான்னு டெஸ்ட் பண்ணத்தான் கூப்பிட்டேன். சரியாத்தான் இருக்கிறானு பேசிக்கிட்டு வந்தவன் அடுத்த வாரத்துக்குள்ள செல்வியை கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கேன். நீதான் உதவணுங்கிறான். இப்பவே போயி பின்பக்கமா வரச் சொல்றேன். நீ செல்கேயோட பேசி அவள் மனசை மாத்தணும். ரிஜிஸ்டர் மேரேஜ்னா என்ன செலவாகும். நம்ம பசங்க எனக்கு உதவுவாங்கள்ல? பேசிட்டே போனான்.

பதினொரு மணிக்கு பின்பக்கமா போயி வயசுப் பெண்ணோட பேசினா போலீஸ்தான் வரும். எல்லாத்தையும் காலைலே பேசிக்கலாம்னு சமாளிச்சு அனுப்பி வைச்சேன். மறுபடியும் லட்சி கண்ணுலேயே சிக்கக்கூடாதுன்னு டீ குடிக்கக் கூட வாசு கடைக்கு காலையிலே போயிடணும்னு வந்தா காலையில எதிர்ல நிக்கிறான். டீ கிளாஸோட பக்கத்துல வந்தவன் ராத்திரி பேசுன எதையும் என்கிட்ட பேசுனா மாதிரியே காட்டிக்கலை. பொறுக்க தம்மை கட்டிட்டு கிளம்பிட்டான். நான் லட்சி கதையைச் சொல்லச் சொல்ல இடையிடையே பிரேமும், ஐசக்கும் கலாய்த்தார்கள். தூங்கி எழுந்திரிச்சதும் யோகியாயிட்டிருப்பாண்டா என்றும், இதையும் ஒருத்தி லவ் பண்றாளே என்றும் சொன்னவர்கள் ஒரு விஷயத்தை எனக்கு ஞாபகமூட்டினார்கள். லட்சி அமைதியானது ஒரு வகையில நல்லதுதான் மச்சான். அவளை நம்பி சந்துரு கல்யாணத்துக்கு முன்னாடி நின்னிருந்தான்னா அப்பிட் ஆயிருப்பான். ஏன் என்று கேட்டது தமிழ்தான் என்றாலும் எனக்கும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. செல்விக்கு கையில, உதட்டுல முகத்துல வெண்புள்ளிங்க பரவிக்கிட்டே வருது. கல்யாணத்துக்கு பிறகு இந்த மென்ட்டல் அதையே காரணமா சொல்லி ஒரு வாரத்துல நீதான கல்யாணம் பண்ணவன் நீயே ஒரே வாரத்துல டைவர்ஸ் வாங்கிக் கொடுனு சொன்னா சந்துரு நிலைமை என்னாயிருக்கும்னு கேட்டதுக்கு தமிழ் சொன்னான், நாலாவது கொசுவா அலைய வேண்டியதிருக்கும்னு சொன்னான். நானும் அவங்களோட சேர்ந்து சொன்னேன். சபையில என் மேட்டரையும் சேத்து நீங்க கழுவ வேண்டியதுதான் என்று நான் முடித்ததும், அவனையும் ஒரு நாள் பிடிச்சு சபையில அமுக்கணும்டான்னு சதித் திட்டம் தீட்டினார்கள் பிரேமும், ஐசக்கும்.

தங்கம் விடுகிற நேரமென்று தமிழ் ஞாபகப்படுத்திய பிறகு சபையை கலைத்து விட்டு தெருவில் இறங்கி நடந்தோம். ஐசக் மோகனின் சாமியார்க் கனவை சொல்லிக் கொண்டே வந்தான். மோகன் ஐசக்கிடம் தனியாக சொன்ன தத்துவங்களுக்கு பிரேம் விளக்கம் சொல்லியபடி வந்தான். நானும் தமிழும் நாகராஜும் சிரித்தபடி நடந்தோம். நாகராஜ் சைலன்ட் கில்லர். அதிகம் எதுவும் பேசமாட்டான். மென்ட்டல்களை மேலும் மென்ட்டலாக்க ஆலோசனை சொல்பவன். இன்னும் எங்கள் கேங்கில் மணி, சுரே, பஞ்சா, பூமி, வாசு எல்லாம் சேந்துட்டா ரணகளம்தான். அன்றைய நாளின் கடைசி டீயும், சிகரெட்டும் தொண்டைக்கு இதமாயிருந்தது. தங்கம் திரையரங்கிலிருந்து வெளியேறிய மக்கள் இரவுக் காட்சியில் தங்களை சிலிர்க்க வைத்த காட்சிகளைப் பற்றி பேசியபடி கரைந்துக் கொண்டிருந்தார்கள்.

இரவின் சபை நீள்கிற நாட்களில் கதவுகள் திறக்கப்படாதென்பதும், வீட்டின் பால்கனி வராந்தாக்களில் விரிப்புகளும் தலையணைகளும் வீசியெறியப்பட்டிருக்கும் என்பதும் நாங்கள் அறிந்ததே. மாலைகளை மைதானத்திலும் இரவுகளை வராந்தாக்களிலும் கழிதோம். இஸ்மாயில், மோகன், லட்சி எங்களை சிரிக்க வைத்து அலைந்தார்கள்.

பின் வந்த நாட்களில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களும் அதனைக் கொண்டாட ஏற்படு செய்யப்பட்ட பார்ட்டிகளின் பில்களை கட்டினார்கள். எங்கள் எல்லோருடைய பாக்கெட்டிலும் அரை பாக்கெட் சிகரெட் மிச்சமிருந்தது. புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்த சபை வேலை முடித்து நண்பர்கள் எப்போது வருவார்கள் என காத்திருந்தது. வந்து விழுந்த தகவல் மூலம் நாங்கள் துண்டிக்கப்பட்ட தீவின் அகதிகளாகிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது.

இரவு சாப்பாட்டுக்குப் பின் அடிக்கப்படும் சிகரெட் நிமித்தமாக சபைகளில் தலைகாட்டினார்கள். எங்களுக்கும் சில சிகரெட்டுகளை வீசியெறிந்து விட்டு, பீடி பிடிப்பதில் உள்ள சௌகரியங்களை வகுப்பெடுத்தார்கள். இப்படி அவர்கள் பேசியதற்கான காரணங்களை சீக்கிரத்திலே கண்டு பிடித்தோம். வேலை கிடைத்தவர்களும், திருமணமானவர்களும் மாலையில் கூடும் ஓட்டல்களின் இடம் மாற்றப்பட்டிருந்தது. எங்களில் சிலருக்கும் அந்த ஓட்டல்களில் இடம் கிடைத்ததற்கான காரணம் அவர்களுக்கும் விரைவில் வேலை கிடைக்கப் போகிறது என்பதுதான்.

எல்லாம் போக மிச்சமிருந்த சபை விடாமல் தினமும் கூடி பொருமலுடன் மேற்படியான துரோகங்களை தினமும் கழுவியது. சிரிப்பதற்கு காரணமாயிருந்தவர்களோடு சிநேகிக்க காலம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது. சபையின் இடைவெளி குறைக்க வந்த லட்சி தனது காதல் கடிதங்களோடு எங்களை நெருங்கியிருந்தான். கடிதங்களைப் படிக்க படிக்க லட்சியின் மீது நாங்கள் காட்டியிருந்த ஏளனங்கள் மறையத் தொடங்கியிருந்தது.

செல்வி எழுதிய கடிதத்தில், உடலில் தோன்றியிருக்கும் வெண்புள்ளிகள் மிக விரைவில் முகம் முழுவதும் பரவி விடுமென்று தோழிகள் பயமுறுத்துவதைக் குறிப்பிட்டு வெண் குஷ்டம் கண்டவள் என உறவுகள் காது பட பேசுவதில் தான் மிகவும் நொந்து போயிருப்பதாகவும், லட்சுமணனின் அழகான முகத்துக்கும், வெள்ளையான மனசுக்கும் தான் பொருத்தமில்லாதவளென்றும், தன்னுடனான திருமணம் துன்பத்தைத்தான் தருமென்றும், ஆகவே வேறொரு பொருத்தமான அழகான பெண்ணுடன் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் சொல்லி உருக்கமாக எழுதியிருந்தான்.

இதற்குப் பதிலாக தான் எழுதிய கடிதத்தைக் கொடுத்து எங்களைப் படிக்கச் சொன்னான். செல்விக்கு வெண்புள்ளிகள் உள்ளதென்பது தனக்கும் தெரியுமென்றும் முதல் சந்திப்பிலேயே இதைப்பற்றி பேசியிருப்பதை நினைவூட்டி வைட்டமின் குறைவாலதான் இது வருகிறது என செல்வி சொன்னதையும் சொல்லி வைட்டமின் குறைவாக உள்ள யாருக்கும் இது வரலாம்; எனக்கும் கூட வரலாம். அப்போதும் செல்வி தன்னை ஏத்துக் கொள்வாளென்ற நம்பிக்கை இருக்கிறது என்று எழுதி விட்டு உன் உடம்பு முழுக்க இது பரவுனாக் கூட எனக்கு கவலையில்லை. எனக்கு காதலைப் பற்றியும் அழகைப் பற்றியும் தெரியும். இனி இப்படி எழுதாத என்றும் உன்னுடன் மட்டும் வாழ விரும்பும் உனது லட்சுமணன் என முடித்திருந்தான்.

ஒரு வாரத்தில் கல்யாணம் செய்து வை என்று சொன்ன மென்ட்டல் லட்சியின் காதல் பற்றி தெளிவு எங்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆழமான காதல் கடிதங்களை சிக்காமல் பார்த்துக் கொள்வதில் காதலர்கள் எப்போதும் பலவீனமானவர்கள். சிக்கிய கடிதத்தின் முடிவில் செல்வி ராயபுரத்திலிருந்த உறவினர் வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். எங்கு போனால் என்ன? கடித வேட்டைகளை நடத்திட முடியாதா என்ன? லட்சுமணனின் கடிதங்களை செல்வியிடம் சேர்க்க ராயபுரம் ஆதம் சாகிப் தெருக்களில் எலக்ட்ரீஷியன் உடைகளில் கட்டிங் பிளேயர், டெஸ்ட்டர் சகிதமாக திரிந்தோம். மின் பழுதுக்கு அழைத்த தெருவாசிகளுக்கு திரும்பி வரும்போது வருகிறோமென போக்குக் காட்டினோம். செல்வி இருந்த உறவினர் வீட்டருகே வந்தபோது எல்லாம் அம்பலமாகி விடுமோ என அச்சமிருந்தது.

கதவைத் தட்டியதும் வெளியில் வந்தது செல்வியின் பாட்டிதான். மீட்டர் பாக்ஸை சரி பார்க்க வந்திருப்பதாக தமிழ் சொன்னது பாட்டியின் காதில் விழவில்லை. சந்தர்ப்பத்தை தனதாக்கி தமிழ் புத்திசாலித்தனமாக மீண்டுமொரு முறை அதிக சத்தத்துடன் சொன்னதற்கு பலனிருந்தது. சத்தம் கேட்டு செல்வி வெளியே வந்தாள். பாட்டியிடம் தண்ணீர் கேட்டோம். பாட்டி சென்ற விநாடியில் செல்வியிடம் லட்சியின் காதல் கடிதம் சேர்க்கப்பட்டது. வேறொரு அவசர செய்திருக்கிறது எனவும் நாளை வந்தால் விபரமாக எழுதி கடிதம் தருகிறேனென்று செல்வி சொல்லும் போதே, பாட்டி தண்ணீரோடு வந்தாள். தண்ணீர் கொண்டு வந்த பாட்டியிடம் தமிழ், சரி பார்த்திருக்கிற மீட்டர் சரியா ஓடுதாவென பார்க்க நாளையும் வருவோமென போட்டு வைத்தான். செல்வி சிரித்தபடி உள்ளே போனாள்.

எம்பஸி ஓட்டலில் காத்திருந்த லட்சுமணனிடம் நடந்தவற்றை சொல்லும் போது தமிழ் நான் கவனிக்காத விஷயத்தினையும் சேர்த்துச் சொன்னான். செல்வியின் கைகயிலும், கழுத்திலும் பரவியிருந்த வெண் புள்ளிகள் பெரும்பாலும் மறைந்து விட்டதைச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினான். லட்சுமணன் அதில் கவனம் செலுத்தாமல் கடிதத்தை வாங்கிய செல்வி என்ன சொன்னாள் என்றறிய ஆர்வப்பட்டான். திரும்பி வரும் வழியில் தமிழ், லட்சுமணனின் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என சந்தோஷப்பட்டான். அப்படித்தான் நல்ல மனிதர்களுக்கு நல்லதுதான் நடக்கும் என எந்த விதியுமில்லை. செல்வியைப் பற்றி வந்த தகவல்கள் அதை உறுதி செய்தன.

பகுதி கடத்தப்பட்டவள் இப்போது மாநிலம் கடத்தப்பட்டாள். பெங்களூரில் வைத்து செல்விக்கு திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது என்ற செய்தி செல்வியின் தம்பியின் மூலம் லட்சியின் காதுகளுக்கு வந்ததும் உடனடியாக காக்கி உடைகளில் ஆதம் சாகிப் தெருவுக்கு விரைந்தோம். பூட்டிய வீடு அதனை உறுதி செய்தது.

பெங்களூர் சென்று செல்வியை கடத்த லட்சுமணனோடு மூவர் போவது என அவசர, அவசரமாக குருட்டாம் போக்காக யோசித்தது சபை. உணர்ச்சி வசப்பட்ட நண்பர்கள் கைக்கடிகாரங்களை கழட்டிக் கொடுத்து காசாக்கிக் கொள்ளச் சொன்னார்கள். வேலைக்குப் போனவர்கள் சில நூறுகளைத் தந்து ஒதுங்கிக் கொண்டார்கள். வந்த பணத்தை வைத்து கணக்குப் போட்டால் லட்சுமணனோடு, ஒருவர் பெங்களூருக்கு பயணப்பட போதுமானதாயிருந்தது. ஆள் பலம், பணபலமில்லாத வெறும் வெட்டிகளாலான சபை என்ன சிறப்பான காரணங்களையெல்லாம் சொல்லுமோ அதைச் சமாதானமாக லட்சிக்கு சொன்னது. அதற்காக கூடிய சபை லட்சுமணனுக்காக சேர்ந்த காசுகளை சிகரெட்டுகளாகவும், பிராந்தி பாட்டில்களாகவும் கரைத்தது.

மீண்டும் சில தினங்களில் இயல்புக்கு திரும்பிய சபையும், அதன் கழுவும் போக்கும் மாற்றமில்லாமல் தொடர்ந்தது. தமிழிடமிருந்து பெற்ற ஆதம் சாகிப், எலக்ட்ரீஷியன் உடை கதைகளை ஐசக் கல கலப்புக்கான பொருளாக்கி வாசித்தான். சமயம் கிடைத்த போதெல்லாம் லட்சுமணனுக்கு கவர்மென்ட் சரக்கை ஊற்றி அவனை போதைக்கார லட்சியாக மாற்றி அவனை சபையில் உட்கார வைத்து பேசி பொழுதை கழித்தார்கள் வெட்டிகள். பெரும்பாலும் நானும் தமிழும் அவர்களை விட்டு விலகியே நின்றோம். திருமணப் பேச்சு, வேலைக்கான ஆர்டர், வீடு மாற்றம் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் நடந்த போது விலகலின் தூரம் அதிகமானது.

அதற்குப் பிறகு என் திருமணத்தின் போதுதான் எல்லோரையும் சேர்த்து வைத்துப் பார்த்தேன். நண்பர்கள் மூலம் தகவலறிந்து வந்து விடுவான் என எதிர்பார்த்த லட்சி அவன் அண்ணனோடு வேறொரு ஊரில் இருப்பதாகச் சொன்னார்கள். அதன் பிறகு கடைசியாக லட்சியை நாகராஜ் திருமணத்தில் வைத்து பார்த்தேன். தனக்கு இனி திருமணம் இல்லையென்று சொன்னவனிடம் பதிலாக நான் சொன்னதை காது கொடுத்து கேட்கவேயில்லை. அப்படிப்பட்ட லட்சிக்கு பின்னொரு நாளில் திருமணம் நடந்தது என அறிந்ததும் அப்பாடாவென்றிருந்தது எனக்கு.

திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாதவனாக லட்சி கடைசிவரை போதைக்காரனாகவே இறந்திருக்கக் கூடும் என தமிழ் ஒரு யூகத்தில் சொன்னான். தமிழ் சொன்னது போல அதுவே காரணமாக இருந்தால் அவனது மரணத்துக்கு காரணமானவர்களில் எங்களுக்கும் இடமிருக்குமோ எனத் தோன்றுகிறது. பழகிய மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்க்கைத் தடுமாற்றங்களைத் தீர்க்க உதவி செய்ய முன்வராதவர்கள் காதிலே விழுந்தும் தெரியாதது மாதிரி இருந்து விடுபவர்கள் மரணங்களுக்கு மட்டும் விரைவதில் அர்த்தமென்ன? என் குற்ற உணர்ச்சி தமிழுக்கும் இருக்குமாவென்று தெரியவில்லை.

சத்தியமூர்த்தி நகரில் லட்சுமணனின் மரணச் செய்தி ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிந்திருந்தது. முகவரியை சொன்ன மாத்திரத்தில் வழியைச் சொல்ல ஒரு கும்பலே வந்தது. வீட்டை நெருங்க, நெருங்க மனத்தில் ஒருவிதமான பாரம் கூடியது போலிருந்தது. என்னைப் பற்றி நினைக்காமலே எப்படிடா வாழறீங்கன்னு முகத்தில் அறைந்து கேள்வி கேட்டான் நீளப்பெஞ்சில் படுத்திருந்த லட்சுமணன். நாங்கள் போட்ட மாலைகளுக்கும் அதைத் தொடர்ந்து வந்து விழுந்த மாலைகளுக்கும் எந்தவிதமான சலனமில்லாமல் பெண்கள் இருந்தார்கள். லட்சுமணனின் மனைவியும் அப்படிதானிருந்தாள். விருப்பமில்லாத வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட எல்லாப் பெண்களுக்கும் மிக விரைவில் கண்ணீர் வற்றிப் போய் விடுகிறது. தமிழ் யூகித்தபடி போதைக்கார லட்சுமணனாகவே வாழ்க்கையை தொலைத்திருக்கிறான் என்பதை அவனது முகத்திலிருந்த தழும்புகள் உறுதி செய்தது. கரு கருவென்றிருந்த சுருட்டைத் தலையுடன் தூங்குவதைப் போலிருந்தது லட்சுமணனின் முகம். கிரவுண்டில் பாரில் தொங்கியபடி நாக்கால் டொக், டொக் தட்டின அதே முகம்.

நாங்கள் வந்திருப்பதையறிந்த இஸ்மாயிலும், மோகனும் எங்களை நெருங்கினார்கள். லட்சுமணனின் உடலருகே நின்றபடி மோகன் அழுத அழுகையில் நாங்களும் கரைந்தோம். இஸ்மாயில் அவனை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்தான். டீ கடைக்கு போகும் வழியில் தமிழ் யூகித்ததை விட நிலைமை மோசமாகவேயிருந்தது. காலை அஞ்சு மணிக்கு தொடங்குற போதை எப்ப முடியும்னு சொல்லவே முடியாதென்றான். குடிப்பதற்கு காசு எப்படி எனக் கேட்டதற்கு வாரத்துல மூணு நாளைக்கு கிடைக்கிற லோடு வேலையில கிடைக்கிற காசு அத்தனையும் அவன் உடம்புல குடியா இறங்கிருச்சு சந்துருனு வருத்தப்பட்டான். டீ கடையில் ஆளுக்கொரு சிகரெட்டை கேட்டு வாங்கினோம். சிகரெட்டுக்கு நெருப்பு தேடியபோது, இஸ்மாயிலின் `லைட்டர்' நினைவுக்கு வந்தது. இஸ்மாயில் வத்திப் பொட்டியைக் கொடுத்தான். கைலியிலேயே, இஸ்மாயில் இருந்தது ஆச்சரியத்தைத் தந்தது. தகவல் கிடைத்த ராத்திரி முதல் இங்கேயே இருப்பதாக சொன்னான். கூடவே மோகனைப் பற்றி சொல்லும் போது அவன் கொஞ்ச நாளாக லட்சியின் பராமரிப்பில் இருந்து வருவதினால் சாவு செய்தி கிடைத்தவுடன் அவனும் ராத்திரி முழுவதும் தன்னுடனிருப்பதாகவும் சொன்னான். பிரேம், ராஜா, ஐசக், நாகராஜ், மணி. சுரேஷ், பஞ்சா, வாசு எல்லோருக்கும் தகவல்கள் இஸ்மாயில் மூலம் போயிருந்தது.

டீ கடையிலிருந்த வடையை தமிழ் எடுத்து நீட்டியபோது வேண்டாமென்று இஸ்மாயிலும், மோகனும் சொன்னார்கள். அவனை ஒழுங்கா கொண்டு போய்ச் சேர்த்த பிறகுதான் எல்லாமென்றார்கள். தமிழ் எடுத்த வடையை உடனே தட்டில் போட்டான். லட்சுமணனுடனான இறுதிப் பயணம் துவங்குகிற நேரத்தில் கேங்கின் எல்லா நண்பர்களும் வந்து விட்டார்கள். மணியும், வாசுவும் மயானத்தில் காத்திருந்தார்கள். சிதையில் வைக்கப்பட்ட லட்சுமணனை கடைசியாக, பார்த்துக் கொள்ளும்படி சொன்ன மனிதனை, எப்போதும் சில்லறைக்கு அலைபவனாகவே காண்கிறோம். அவன் எல்லோருக்கும் இறந்த மனிதனின் முகத்தை மீண்டுமொரு நினைவில் ஏற்றிக கொண்டு கலைவதற்கு அவகாசமளிக்கிறான். சில்லறைகளைப் போட்டு லட்சுமணனிடமிருந்து விடை பெற்றோம். மோகன் மட்டும் தன் தோளில் இடைவிடாமல் தொங்கிக் கொண்டிருந்த அழுக்குப் பையிலிருந்த எல்லாச் சில்லறைகளையும் லட்சியின் உடல் மீது கொட்டி விட்டு லட்சி எல்லாம் உனக்குத்தான் என்பதை திரும்பத் திரும்ப சொல்லியபடி சத்தம் போட்டு அழுதான்.

அவனைச் சமாதானப்படுத்துவதில் தோற்றுப் போனோம். மயானத்தின் அமைதியைக் கிழித்து சத்தமாக அழுது கொண்டேயிருந்தவன் லட்சியின் முகத்தை மூடப்போகிற கணத்தில் அவன் முகத்துக்கு முத்தமிட்டான். கிழிந்த வேட்டியும், சட்டையும் நரைத்த முடியுடனும் கிழட்டு மென்ட்டலாக அடையாளமிடப்பட்டவன் அவனை பராமரித்தவனுக்கு முறையாக சொன்ன நன்றி அது.

லட்சியின் மரணத்திற்குப் பிறகு பேசப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது அவன் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பதுதான். பரிமாறிக் கொண்ட கைபேசி எண்களின் வழியே அடிக்கடி பேசிக் கொண்டோம். கூடினோம். மோகனுக்கென்று சில புதிய ஆடைகளும், பல நாள் உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்தோம். பதினாறாம் நாள் காரியத்தன்று லட்சியின் மனைவியிடம் ஒரு தொகையை கொடுக்க வேண்டுமென்று நாங்கள் சேகரித்த தொகையை கொடுப்பதற்காக மீண்டும் அனைவரும் கூடினோம். அவன் வீட்டுக்குப் போகும் வழியில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் நாங்கள் நடத்திய சபையிருந்த துறைமுகக் குடியிருப்பு தொடங்கி, சத்தியமூர்த்தி நகர் வரை லட்சுமணனின் பழைய படம் போட்ட பதினாறாம் நாள் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் கீழே `நீங்காத துயரத்துடன் துறைமுகக் குடியிருப்பு நண்பர்கள்' என ஒட்டப்பட்டிருந்தது.

லட்சிக்குப் பழக்கமான வேறு சில நண்பர்கள் இதை அடித்திருப்பார்கள் எனப் பேசிக் கொண்டோம். லட்சியின் மனைவியிடம் தொகையைக் கொடுத்த போது அவளின் கண்கள் கசிந்து இப்படியாப்பட்டவங்க முன்னாடியே அவரை திருத்தியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும் என்றாள். அதற்கான எந்த பதிலும் எங்களிடத்தில் இல்லை. ஆமா தப்பு பண்ணிட்டோம். இனி எந்த உதவிக்கும் எங்களைக் கூப்பிடுங்கன்னு தமிழ் சில எண்களை அவளிடத்தில் தந்தான். திரும்பும் போது யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேருந்துகளை பிடிக்கிற, ரயில்களைப் பிடிக்கற அவசரத்தில் இருந்தார்கள் எல்லோரும். வாழ்வின் அழுத்தத்தில் மீண்டும் சந்திப்புக்கள் குறைந்தது. மோகன் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் இப்போது தெரியவில்லை. இஸ்மாயில் மட்டும் அடிக்கடி பேசுவான். எல்லோருக்குமான தொடர் ஓட்டத்தில் ஓரிருவர் மட்டும் ஓட முடியாது. கால வெள்ளத்தில் சிலவற்றை நினைவூட்டிக் கொள்ள இழப்புக்கள் அனுமதிக்கிறது அதுவே உண்மை.

உடலின் சில இடங்களில் தோன்றியிருக்கும் வெண்புள்ளிகள் நிமித்தமாக நகரின் சிறந்த தோல் மருத்துவரிடம் நேரம் பெற்று காத்திருந்தேன். உடல் முழுவதும் வெள்ளைப் புள்ளிகளுடன் , அரை வெள்ளைப் பெண்ணாக செல்வியும் மருத்துவரைச் சந்திக்க உட்கார்ந்திருந்தாள். லட்சுமணனின் மரணம் அவளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது அவள் துறைமுக குடியிருப்புக்கு அருகில் இருப்பதாக யாரோ சொன்னது நினைவிலிருந்தது. அப்படியானால் லட்சுமணனின் பெயர் தாங்கிய நினைவஞ்சலி போஸ்டரை அவளும் பார்த்திருப்பாள்.

கொஞ்ச நேரத்தில் செல்வி என்னைப் பார்த்து விட்டாள். என்னருகில் காலியாகயிருந்த இருக்கை நோக்கி வந்தாள். தகப்பனும், பாட்டியுமில்லாமல் செல்வியிடம் பேசும் முதல் சந்தர்ப்பமிது. அவளே ஆரம்பித்தாள். "அது இறந்த அன்னிக்குத் தெரியாது. அதுக்கப்புறம் விஷயம் கேள்விப்பட்டு தம்பி ஒரு வாரம் கழிச்சித்தான் சொன்னான்."

"ஆமாமா நம்ம குடியிருப்பு இருக்கிற ரோட்டோராமா பதினாறாம் நாள் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அதைப் பார்த்துத் தெரிஞ்சிட்டிருப்பான்."

"அப்படியில்லண்ணே, அவன் மூலமா அந்த போஸ்டரை ஏற்பாடு பண்ணி ஒட்டச் சொன்னதே நான்தான்."

"லட்சி இறந்து போச்சுன்னு தகவல் தெரிஞ்ச அன்னிக்கெல்லாம் எனக்கு கஷ்டமாயிடுச்சு. ராத்திரி தூக்கமேயில்ல. தம்பி கிட்ட லட்சியும், அவனும் சேர்ந்து எடுத்துக்கிட்ட பழைய போட்டோ இருந்துச்சு. அதை வைச்சுத்தான் போஸ்டர் ரெடி பண்ணச் சொன்னேன். போஸ்டருக்கான மேட்டர் எழுதிக் கொடுத்து மறக்காம கீழே துறைமுக குடியிருப்பு நண்பர்கள்னு போடச் சொல்லி, இங்கிருந்து சத்தியமூர்த்தி நகர் வரைக்கும் ஒட்டச் சொன்னது நான்தான். தம்பிக்கு எங்கள்து எல்லாம் தெரியும். லட்சிக்கு என்னால இதைத் தவிர வேற என்னண்ணே செய்ய முடியும் சொல்லுங்க... அதோட சாவுக்கு நானுந்தானே காரணம்." - பொது இடங்களில் உடைந்து அழ முடியாதவர்களின் சோகங்களை அவள் காற்றின் வெளியில் தேடத் துவங்கியிருந்தாள். 

Pin It