பஞ்சமும் பசியும் வர

கஞ்சியும் துணியுமின்றி

பாடுபடும் மக்களெல்லாம் வாட வாட!

வஞ்சக வசதிகொழுத்தோர்

கொஞ்சமும் கவலையின்றி

வாழ்வினை ருசிக்கும் வகை தேடத் தேட!

செல்வமும் சிலரிடத்தில்

பல்லினை இளித்தபடி

செல்வதும் எவ்வகையதைக் கூறு கூறு!

வல்லான் பொருள்குவிக்கப்

பல்வகை வழிவகுத்தார்

மண்ணிலே சுரண்டலதன் பேரு பேரு!

வாழ்கிற மனிதரிலே

ஏழ்மையில் பலர் கருக

விண்ணளவு செல்வம் சிலர் வெல்வார் வெல்வார்!

ஊழ்வினை உழைப்பவரை

வீழ்த்துது எனும் கதையை

உண்மையெனப் பாமரரும் கொள்வார் கொள்வார்!

வேதனை குறைவதற்கும்

சாதனை புரிவதற்கும்

மக்களெல்லாம் ஓரணியில் நின்று நின்று!

மோதணும் பொதுவுடைமைப்

போதனை வழி நடந்து

வர்க்கப்பகை மாய்ந்திடவே இன்று இன்று!

 

Pin It