மீண்டும் ஒட்டவே முடியாது
என்று தெரிந்த பின்னும்
உன்னோடு ஒட்டவே
துள்ளித் துடிக்கும்
பல்லியின் வாலாய்
என் காதல்.

 

குட்டியானைகளில் ஏறி
குறுக்குச் சந்துகளில் பயணிக்கும்
காவிரி நீரைப்
பின்தொடர்ந்து போன
காகம் ஒன்று
திசை மாறிப்போய்
யாரோ வீசிய
சாம்பார் பாக்கெட்டை கவ்வி
வெய்யில் கொத்திப் பறக்கிறது.

 

உச்சந்தலையைப் பிடித்து
ஆட்டி உலுக்கும்
சூறைக்காற்று கண்டு
அஞ்சவில்லை
முருங்கையின் நுனிப் பசுந்தளிர்
ஆட்டம் போடுகிறது.
வீசிடும் சூறைக்காற்று
இடையிலும் நுழைந்து
செவியில் வழிகிறது
மாமரக் குயிலின் பிரிவுத் துயர்.

 

மூச்சை இழுத்தாலும் விட்டாலும்
போகத்தான் போகிறது.
ஒரு குடம் தண்ணீரின்றி
எங்கள் நிலத்தின் உயிர்.
எந்த ஆசனம் நீர் கொண்டுவரும்
சொல்.
குள(ல)ம் விழுங்கிய வெங்காயத் தாமரையே.
கண்களை மூடி
ஆழ்நிலைக்குச் செல்லுங்கள்.
மூச்சை இழுத்து உள்ளே நிறுத்துங்கள்.
பரவச பரவெளி வசப்படும்.
பரவெளியிலேயே சுற்றுங்கள்.
நிலம் நமக்குச் சொந்தமில்லை.
ஏகாதிபத்தியத்திடம்
ஏலம் போய்விட்டது.

ஒரு கை நீரள்ளிக்
குடிக்க வக்கற்ற நிலத்தில்
ஓடும் சாக்கடை நீரை
நக்கிக்குடிக்கும் நாயை
ஏக்கத்துடன் பார்க்கும்
தாகமெடுத்த நிலவுக்கு
நாளை
யோகா தினமென்று
சொல்லி அனுப்பிவிட்டேன்.

 

ஒரு குடம் தண்ணீர் எடுக்க
ஏழெட்டு மைல் நடந்து போவது
என்ன ஆசனம்?
பாரத் மாதா.

 

சுடுகாட்டிற்குத்தான் பாதை கேட்டோம்
எங்கள் நிலத்தையே ஏன்
சுடுகாடாக்குகிறாய்
எட்டு வழிச்சாலையே!

இவ்வளவு வேகமாக
எங்கள் பிணங்களை
அள்ளிச் செல்ல
ஏன் வருகிறாய்
எட்டுவழிச் சாலையே.

 

தேங்கிநிற்கும்
இந்த இரண்டு நாள் அணைகளில்
அடுத்த ஐந்து
நாள்களுக்கான
மின்சாரத்தை
உற்பத்தி செய்கிறார்கள் அம்மாக்கள்
காற்றாலையாய் அப்பாக்கள்.

 

மண்ணின் மொழியை
மக்களின் வலியை
மரங்களின் பாடலை
கானகத்தின் காதலை
காலந்தவறாமல்
காற்றின்
அலைவரிசையில்
கரைந்துருகும்
பாட்டாளி வர்க்கக்
குயில்தான் எமக்குத் தோழர்.

Pin It