1960களின் இறுதியில் சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்திக் காண்பித்து, பொய்யான வருகைப் பதிவேட்டினை தயார் செய்து, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்த வகையில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு மஸ்டர் ரோல் ஊழல் எனப் பெயர். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு, அன்றைக்கு மாநகராட்சியின் கவுன்சிலர்களாக இருந்த கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர, திமுக, காங்கிரஸ் என அனைவரும் உடந்தை. 1996 இல் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் ஹவாலா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும, கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே அந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை.
1988ஆம் ஆண்டு தினமணி நாளேடு “அதிசயம் ஆனால் உண்மை’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது. திரிபுரா முதல்வராக 10 ஆண்டுகாலம் பதவியில் இருந்த நிருபன் சக்கரவர்த்தி குறித்த செய்தி அது “தேர்தல் தோல்வி காரணமாக அரசு வீட்டை காலி செய்கிற போது, இரண்டு பெட்டிகளுடன் சைக்கிள் ரிக்ஷாவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நோக்கி நிருபன் சென்றார். ஒரு பெட்டியில் அவருடைய உடுப்புகளும், மற்றொரு பெட்டியில், புத்தகங்களும் இருந்தது. வேறு உடைமைகள் எதையும் கொண்டிருக்க வில்லை’’ என குறிப்பிட்டு இருந்தது.
மேற்படி பெருமைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது நம்பும் படியாக இல்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் செயலாளர் பினராயி விஜயன் மீது, எஸ்.என்.சி லாவ்லின் நிறுவனத்துடனான மின் ஒப்பந்தத்தில், “கிரிமினல் சதி மற்றும் மோசடி’’ என்ற பெயரில் சிபிஐ குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டதும், கேரள மாநில கவர்னர் அனுமதி கொடுத்ததும், இன்று பெரிது படுத்தப்படுகின்றன.
கேரளாவில் உள்ள பள்ளிவாசல், செங்குளம், பண்ணியார் நீர்மின் நிலையங்களை புனரமைப்பதற்காக கனடா நாட்டைச் சார்ந்த, எஸ்.என்.சி லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்-கொள்ளப்பட்டது. இது 1995, ஆகஸ்ட் 10 அன்று கேரள மின்வாரியமும், லாவ்லின் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தம். அன்றைய தேதியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. மேற்படி ஆலோசனை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, 24.02.1996 அன்று இறுதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதும் காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி நடைபெற்றது.
இயந்திரங்களின் விலை ரூ. 157.40 கோடி என்றும், ஆலோசனைக் கட்டணம் ரூ. 24.04 கோடி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1996 மே மாதம் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் தோற்று, இடதுசாரி ஆட்சி அமைந்தது. அன்றைய சூழலில் தொழிற்சாலைகளுக்கு 100 சதம் மின்வெட்டு இருந்த-தால், வேலை இழப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகள் தலை-தூக்கி இருந்தது. எனவே காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை, சில மாற்றங்களுடன் நிறை-வேற்ற மின்துறை அமைச்சராக இருந்த பினராயி விஜயன், அமைச்சரவை ஒப்புதல் பெற்றார். இதை செயல்படுத்த கனடாவுக்கு அதிகாரிகளுடன் சென்று பேச்சு வார்த்தை நடத்தி, “இந்தியாவில் கிடைக்கும் இயந்திரங்கள் தவிர மற்றவற்றை லாவ்லின் நிறுவனத்திடம் வாங்கியது. அன்னியக் கடனின் அளவைக் குறைப்பது, காங்கிரஸ் செய்த மூல ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட கருவிகளின் அளவு விலை மதிப்பு, ஆலோசனைக் கட்டணம் போன்றவைக் குறைத்தல்,’’ என்ற திருத்தங்களை மேற்கொண்டது.
இப்படி சிறு மாறுதல் மட்டும் செய்திட அடிப்படைக் காரணம், காங்கிரஸ் ஆட்சி ஒப்பந்தம் செய்கிற போது, ஏதாவது இடைநிறுத்தம் அல்லது சிக்கல் போன்றவை ஒப்பந்த நிறைவேற்றத்தில் இருந்தால், பாரீஸ் நகரில் உள்ள வழக்கு மன்ற தீர்ப்பிற்கு பின்னரே செயல்படுத்த முடியும் என்பதாகும். மின் தேவை இருந்ததும் காரணமாகும். எனவே செலவை அல்லது இழப்பை, குறைத்து நாட்டுக்கு நலன் தரும் விதத்தில் ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. மேற்படி ஒப்பந்த திருத்தத்தை இடது முன்னணி அரசு மேற்கொண்ட போது, “மலபார் புற்று நோய் மையம்’’ அமைக்க நிதி உதவிகேட்டு லாவ்லின் நிறுவனம், அக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் கனடா, உள்ளிட்ட அமைப்புகளுடனும் ஈ.கே. நாயனார், பினராயி விஜயன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் மூலம் கேரளா, தலைச்சேரியில் 98.3 கோடி ரூபாய் செலவில், மருத்துவமனை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் 2003 ஜனவரியில் நிறைவடைந்தது. கனடா டாலருடனான நாணய மதிப்பு மாற்றம் காரணமாக, 1995இல் திட்டமிட்ட ரூ. 239 கோடி, இறுதியில் ரூ. 374.5 கோடியாக உயர்ந்தது. இது இந்திய பொருளாதார மற்றும் நாணய பரிவர்த்தனை கொள்கையின் விளைவாகும். மலபார் புற்றுநோய் மருத்துவமனையும் 2001 முதல் செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் சதி:
தற்போது பினராயி விஜயன் மீதும், மார்ச்சிஸ்ட் கட்சி மீதும், அபாண்டமான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் சதிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2001 இல் நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி தோற்று, காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, மாநில கண்காணிப்புத் துறை மூலமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இத்துறை 2006 பிப்-10 அன்று, “பினராயி விஜயன் மீது எந்தவித குற்றச்சாட்டும் செய்கிற வாய்ப்பு, லாவ்லின் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இல்லை,’’ என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதன் காரணமாக கண்காணிப்புத்துறை இயக்குனரை பதவியில் இருந்து அகற்றி விட்டு, 2006, மார்ச்-1 அன்று சி.பி.ஐ விசாரனைக்கு மாநில அரசு அனுப்பி வைக்கிறது.
2001இல் மலபார் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கான நிதி, வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட விவரங்களை, கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் சரிபார்த்தது. அதில் அன்னிய நன்கொடையான ரூ. 13 கோடியில், எந்த-விதமான தவறான கையாளுதலோ, பயன்படுத்தலோ இல்லை. என்று மத்திய உள்துறை அமைச்சகம், 2001, ஏப்ரல்-26 அன்று வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுத்-துறைகளின் கட்டுப்பாடு, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியில் இருந்த காலத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஆனால், 2004இல் கேரளத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியுறும் என்ற நிலையில் தான், 2006, மார்ச்-1 அன்று சி.பி.ஐ விசார-னைக்கு, மாநில காங்கிரஸ் அரசு பரிந்துரைக்கிறது.
லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை துவக்கிய 1996-பிப் மின்துறை அமைச்சராக இருந்த, காங்கிரஸ் பிரமுகர் ஜி. கார்த்திகேயனை, மேற்படி வழக்கில் சேர்க்கக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம். இதற்கிடையில், மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதும், 2009-பிப் சி.பி.ஐ தனது விசாரனையை துரிதப்படுத்த, வழக்கில் பினராயி விஜயனையும் சேர்க்க கோரிக்கை வைக்கிறது.
கவர்னரின் இழிசெயல்:
மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் மீது வழக்குத் தொடர கவர்னர் அனுமதி வேண்டும், என சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சி.பி.ஐ யின் வேண்டுகோளை கவர்னர் ஏற்று, மாநில அரசின் ஆலோசனையைக் கேட்கிறார். மாநில அரசு, அரசுத் தலைமை வழக்கறிஞரை சட்டப் பூர்வ கருத்து தெரிவிக்கக் கேட்டது. அவரும், “சிபிஐ அறிக்கை சொல்வது போல், எந்த குற்றச்சாட்டும் சொல்வதற்கு இல்லை மக்களுக்கும், அரசுக்கும் பலனளிக்கும் விதத்தில் தான் செயல்பட்டிருக்கிறார்,’’ என கூறுகிறார். மாநில அரசு பினராயி மீது வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, என கவர்னருக்கு பரிந்துரைக்கிறது. கவர்னர், தலைமை வழக்கறிஞரையோ அல்லது வேறு விசாரணையோ மேற்கொள்ளாமல், ஜூன்-7-2009 அன்று, யாரோ ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் பரிந்துரை காரணமாக, பினராயி மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கிறார். ஆனால் ஒப்பந்தத்தின் மூல கர்த்தா, ஜி. கார்த்திகேயனை சேர்க்கவில்லை. தற்போது உயர்நீதி மன்றம் வலியுறுத்திய பின்னரே, கார்த்திகேயன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
மேற்படிச் சம்பவங்கள் காங்கிரஸ் அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துவது, என்பது தவிர வேறென்ன? இதுபோன்ற வழக்கு-களை சட்டரீதியாக இடதுசாரிகள் எதிர்-கொள்வார்கள். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் நாட்டின் நலனுக்காக போராடுபவர்களை, திட்டமிட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க நினைப்பதை இந்திய மக்கள் உணர வேண்டும். மேற்கு வங்கத்தின் நந்திகிராம், சிங்கூர், லால்கர் பிரச்சனைகள் துவங்கி, லாவ்லின் வரை ஊடகங்களால் பெரிது படுத்தப்படுவதற்கு, இடதுசாரிகள் முன்வைக்கிற மாற்றுக் கொள்-கைகளே காரணம் என்பதை பார்க்கலாம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டோ, இஸ்ரேலுடனான ஆயுதம் வாங்கிய ஒப்பந்தமோ, அமெரிக்காவின் பழைய கப்பலை விலைக்கு-வாங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகளோ, அணுசக்தி ஒப்பந்தத்தில், சமீபத்தில் இந்தியா வந்து சென்ற ஹிலாரி கிளிண்டனின் வார்த்தை ஜாலங்களையோ, போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இத்தாலி பிரமுகர் குவோட்ரோச்சியை சிபிஐ விடுவித்தது குறித்தோ, அதிக அக்கரை செலுத்தாத ஊடகங்கள், இடதுசாரிகளை குறிவைத்து பலவீனப்படுத்த முயற்சிப்பதன் அரசியல் என்ன? நாம் அடுக்கி வைத்திருக்கும் அத்தனையும் பன்னாட்டு, இந்நாட்டு பெரு முதலாளிகளுடன் தொடர்புடையது அவர்களின் தயவில் வாழ்க்கை நடத்தும் அரசியல் பிழைப்பு என்று நாம் கொள்ளலாமா?